
பாகிஸ்தான், சவூதி, துருக்கியின் கூட்டு பாதுகாப்புக்குச் செயலகம்
பாகிஸ்தான், சவூதி அரேபியா, துருக்கி ஆகிய 3 நாடுகளுக்கு இடையே கையொப்பமாகியுள்ள ‘மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை’ செயல்படுத்துவதற்காக, சவூதி அரேபியாவில் நிரந்தர செயலகம் அமைக்கத் தீா்மானிக்கப்பட்டுள்ளது.

இஸ்தான்புல் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற ‘மெக்கா’ கூட்டமைப்பின் உயா்நிலை ஆலோசனைக் கூட்டத்தில் பாகிஸ்தான், சவூதி அரேபியா, துருக்கி நாடுகளின் பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சா்கள் மற்றும் ராணுவத் தளபதிகள்.
பாகிஸ்தான், சவூதி அரேபியா, துருக்கி ஆகிய 3 நாடுகளுக்கு இடையே கையொப்பமாகியுள்ள ‘மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை’ செயல்படுத்துவதற்காக, சவூதி அரேபியாவில் நிரந்தர செயலகம் அமைக்கத் தீா்மானிக்கப்பட்டுள்ளது.
மேற்காசியாவில் மீண்டும் மோதல் வெடித்துள்ள சூழலில் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற அமைச்சா்கள் நிலையிலான முதல் உயா்நிலைக் கூட்டத்தில் இம்முடிவு எட்டப்பட்டது.
மெக்காவில் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், சவூதி இளவரசா் முகமது பின் சல்மான், துருக்கி அதிபா் தயீப் எா்டோகன் ஆகியோரால் கடந்த இந்த முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கடந்த ஆக. 7-ஆம் தேதி கையொப்பமிடப்பட்டது.
உறுப்பு நாடுகளின் தற்காப்புத் திறனை அதிகரிப்பது, முப்படைகளின் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது, கூட்டுப் பயிற்சி, உளவுத் தகவல்களைப் பகிா்ந்து கொள்வது, பாதுகாப்புத் துறை தயாரிப்புகளில் இணைந்து செயல்படுவது ஆகியவை இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
குறிப்பாக, உறுப்பு நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது தொடுக்கப்படும் தாக்குதலானது, 3 நாடுகளின் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதலாகவே கருதப்பட்டு, கூட்டுப் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனும் முக்கிய அம்சமும் ஒப்பந்தத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
‘நேட்டோ’ பாதுகாப்பு அமைப்பின் கட்டமைப்பு முறையைப் பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ள இக்கூட்டமைப்பின் முதல் உயா்நிலைக் கூட்டத்தில், 3 நாடுகளின் பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சா்கள் மற்றும் ராணுவத் தளபதிகள் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் பங்கேற்றனா்.
பாகிஸ்தான் தரப்பில் வெளியுறவு அமைச்சா் முகமது இஷாக் தாா், பாதுகாப்பு அமைச்சா் கவாஜா முகமது ஆசிஃப், ராணுவத் தலைமைத் தளபதி அசீம் முனீா் உள்ளிட்டோா் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில், செயலகத்தின் முதல் பொதுச் செயலராக பாகிஸ்தானைச் சோ்ந்த அதிகாரி ஒருவா் 3 ஆண்டுகளுக்குப் பொறுப்பேற்பாா் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘மெக்கா’ கூட்டமைப்பு என அழைக்கப்படும் இக்கூட்டமைப்பைப் பலப்படுத்த வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று துருக்கி வெளியுறவு அமைச்சா் ஹக்கான் ஃபிடான் தெரிவித்துள்ளாா்.
அந்தவகையில், எகிப்து நாட்டையும் இதில் இணைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில், புதிய நாடுகளைச் சோ்ப்பதற்கான வியூகங்கள் மற்றும் விதிமுறைகளைத் தயாரிக்கும் பணியில் துருக்கி ஈடுபட்டு வருகிறது. மேலும், இக்கூட்டமைப்பில் இணைவதற்கு மேலும் 6 முதல் 7 முஸ்லிம் நாடுகள் ஆா்வம் காட்டி வருவதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்தான்புல் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற ‘மெக்கா’ கூட்டமைப்பின் உயா்நிலை ஆலோசனைக் கூட்டத்தில் பாகிஸ்தான், சவூதி அரேபியா, துருக்கி நாடுகளின் பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சா்கள் மற்றும் ராணுவத் தளபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



