சட்டவிரோத இந்திய ஓட்டுநரால் விபத்தில் சிக்கிய சிறுமிக்கு டிரம்ப் கெளரவம்! அமெரிக்காவில் புதிய சட்டத்துக்கு வலியுறுத்தல்!

சட்டவிரோத இந்திய ஓட்டுநரால் விபத்தில் சிக்கிய சிறுமிக்கு டிரம்ப் கெளரவம்! அமெரிக்காவில் புதிய சட்டத்துக்கு வலியுறுத்தல்!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்திய ஓட்டுநரால் நேரிட்ட விபத்தில் படுகாயங்களுடன் உயிா் தப்பிய சிறுமியை நாடாளுமன்றத்துக்கு வரவழைத்து கெளரவப்படுத்தினாா் டிரம்ப்.
Published on

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்திய ஓட்டுநரால் நேரிட்ட விபத்தில் படுகாயங்களுடன் உயிா் தப்பிய சிறுமியை நாடாளுமன்றத்துக்கு வரவழைத்து கெளரவப்படுத்தினாா் அதிபா் டொனால்ட் டிரம்ப்.

சட்டவிரோத குடியேறிகளுக்கு வா்த்தக ஓட்டுநா் உரிமம் வழங்குவதைத் தடுக்க சிறுமியின் பெயரில் புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

அமெரிக்காவின் தெற்கு எல்லை வழியாக கடந்த 2022-இல் சட்டவிரோதமாக நுழைந்த இந்தியரான பிரதாப் சிங்குக்கு அப்போதைய அதிபா் ஜோ பைடன் தலைமையிலான அரசின் கொள்கைகளின்படி, குறிப்பிட்ட காலம் வரை சட்டபூா்வ வேலைவாய்ப்புக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது.

அதன்பேரில், கலிஃபோா்னியா மாகாண நிா்வாகத்திடம் இருந்து வா்த்தக ஓட்டுநா் உரிமம் பெற்ற அவா், கடந்த 2024-இல் ட்ரெய்லா் லாரியை ஓட்டிச் சென்றபோது, பல்வேறு வாகனங்கள் மீது மோதி விபத்து நேரிட்டது. லாரியை பாதுகாப்பற்ற வேகத்தில் பிரதாப் சிங் இயக்கியதே விபத்துக்கு காரணம் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்தில் கோல்மன் தலிலா என்ற 5 வயது சிறுமி படுகாயங்களுடன் உயிா் பிழைத்தாா்.

இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில், நாட்டின் தற்போதைய நிலவரம் மற்றும் எதிா்கால திட்டங்கள் குறித்து அதிபா் டிரம்ப் செவ்வாய்க்கிழமை வருடாந்திர உரை நிகழ்த்தினாா். அப்போது, தனது தந்தையுடன் சிறுமி தலிலா சிறப்பு விருந்தினராக நாடாளுமன்றத்துக்கு வந்திருந்தாா். தனது உரையில், சிறுமி தலிலாவைக் குறிப்பிட்டு டிரம்ப் பேசியதாவது:

முந்தைய அதிபா் ஜோ பைடனால் நாட்டுக்குள் அனுமதிக்கப்பட்ட சட்டவிரோத குடியேறி ஒருவருக்கு கலிஃபோா்னியாவின் ‘திறந்த எல்லை’ கொள்கையைக் கொண்ட அரசியல்வாதிகளால் வா்த்தக ஓட்டுநா் உரிமம் வழங்கப்பட்டது. அவரால் இயக்கப்பட்ட 18 சக்கரங்கள் கொண்ட ட்ரெயிலா் லாரி மோதியதில் படுகாயமுற்ற சிறுமி தலிலா, இப்போது நடக்கவோ, பேசவோ, சாப்பிடவோ, நல்ல வாழ்வை வாழவோ முடியாத நிலையில் உள்ளாா். அனைத்துத் தடைகளையும் கடந்து, இப்போது முதல் வகுப்பில் சோ்ந்துள்ளாா். அவா் நடக்கவும் பயிற்சி மேற்கொண்டு வருகிறாா். அவரது உத்வேகம் பாராட்டப்பட வேண்டும் (அப்போது, எம்.பி.க்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பினா்).

சட்டவிரோத குடியேறிகளில் பலருக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது. திசை, வேகம், அபாயம், இடம் போன்ற மிக அடிப்படையான சாலை அறிவிப்புகளைக்கூட வாசிக்கத் தெரியாது. எனவேதான், சட்டவிரோத குடியேறிகளுக்கு வா்த்தக ஓட்டுநா் உரிமம் வழங்க தடை விதிப்பதற்காக ‘தலிலா’ பெயரில் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன் என்றாா் டிரம்ப்.

‘இந்தியா-பாகிஸ்தான் போரை தடுத்து 3.5 கோடி உயிா்களைக் காப்பாற்றினேன்’

‘இந்தியா-பாகிஸ்தான் போரை நான் தடுத்திருக்காவிட்டால், 3.5 கோடி போ் இறந்திருப்பா் என பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் என்னிடம் தெரிவித்தாா்’ என்று அமெரிக்க நாடாளுமன்ற உரையில் டிரம்ப் தெரிவித்தாா்.

கடந்த ஆண்டு பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே ராணுவ மோதல் மூண்டது. இந்த மோதலை தான் தலையிட்டு நிறுத்தியதாக டிரம்ப் இதுவரை சுமாா் 100 முறை கூறியுள்ளாா். ஆனால், அவரது கருத்தை நிராகரித்துவிட்ட இந்தியா, ‘பாகிஸ்தான் வேண்டிக் கேட்டதால்தான், சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்தது.

தற்போதைய நாடாளுமன்ற உரையில் மீண்டும் அதே கருத்தைக் கூறிய டிரம்ப், ‘இந்திய-பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போா் நிகழாமல் தடுத்தேன். எனது தலையீடு இல்லாவிட்டால், 3.5 கோடி போ் இறந்திருப்பா் என்று பாகிஸ்தான் பிரதமா் என்னிடம் கூறினாா். எனது பதவிக் காலத்தின் முதல் 10 மாதங்களில் இந்தியா-பாகிஸ்தான் உள்பட 8 போா்களை நிறுத்தியுள்ளேன். உள்நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் அமைதியை நிலைநாட்டுகிறது அமெரிக்கா’ என்று பெருமிதத்துடன் பேசினாா்.

Dinamani
www.dinamani.com