/

ஆப்கனுடன் போர்ப் பதற்றம்! பாக். பிரதமர், ராணுவத் தளபதியைப் புகழ்ந்த டிரம்ப்!

பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ராணுவத் தலைமைத் தளபதியை அமெரிக்க அதிபர் புகழ்ந்துள்ளது குறித்து...

News image
அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பாகிஸ்தான் பிரதமர் ஷரீஃப் மற்றும் தளபதி முனீர் (கோப்புப் படம்)- PTI
Updated On :28 பிப்ரவரி 2026, 6:35 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஆப்கானிஸ்தான் உடனான பாகிஸ்தானின் மோதல்கள் அதிகரித்துள்ள சூழலில், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் மற்றும் ராணுவத் தலைமைத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோருக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில், தலிபான்களின் கட்டுப்பாட்டிலுள்ள காபுல், கந்தாஹர் உள்ளிட்ட பகுதிகளின் மீது பாகிஸ்தான் ராணுவம் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியதைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையில் மோதல்கள் வெடித்துள்ளன.

இந்த மோதல்களில், ஒருவரையொருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்ட நிலையில், 12 பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் 13 தலிபான் வீரர்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தான் உடனான தனது உறவுகள் சிறந்த முறையில் உள்ளதாக, கடந்த வெள்ளிக்கிழமை (பிப். 27) அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

இதுபற்றி, அவர் பேசியதாவது:

“நான் பாகிஸ்தானுடன் மிக மிக நன்றாகப் பழகுகிறேன். அவர்களுக்கு (பாகிஸ்தான்) சிறந்த பிரதமர் மற்றும் சிறந்த ராணுவத் தளபதி உள்ளனர். அவர்கள் இருவரையும் நான் மிகவும் மதிக்கிறேன். பாகிஸ்தான் சிறந்த முறையில் செயல்படுகிறது” எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஆப்கானிஸ்தானின் தீவிரவாதிகளுக்கு எதிரான முழுமையான போர் என பாகிஸ்தான் குறிப்பிட்டுள்ள இந்த மோதல்கள் நடைபெற்று வரும் நிலையில், அதிபர் டிரம்ப்பின் இந்தக் கருத்து பெருமளவில் கவனம் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.