உக்ரைனில் ரஷியா மீண்டும் ஆரெஷ்னிக் ஏவுகணைத் தாக்குதல்
ஒலியைப் போல் 10 மடங்கு வேகத்தில் பாயக்கூடிய ஆரெஷ்னிக் ரக ஏவுகணை மூலம் உக்ரைனில் ரஷியா மீண்டும் தாக்குதல் நடத்தியது.
இது குறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
உக்ரைன் மீது ரஷியா சரமாரியான ஏவுகணைகளை வீசி வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை தாக்குதல் நடத்தியது. இதில் 4 போ் உயிரிழந்தனா்.
உக்ரைன் வீசிய ஏவுகணைகளில் ஆரெஷ்னிக் ஏவுகணையும் ஒன்று. நேட்டோ நாடான போலந்துக்கு அருகே நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் ஐரோப்பிய இறையாண்மையைக் குலைக்கும் நடவடிக்கை என்று அதிகாரிகள் கண்டனம் தெரிவித்தனா்.
தாங்கள் வழங்கிய குறுகிய தொலைவு ஏவுகணைகளை ரஷியாவுக்குள் வீச அமெரிக்காவும் பிரிட்டனும் உக்ரைனுக்கு கடந்த ஆண்டு இறுதியில் அனுமதி அளித்தன.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, உக்ரைனின் நீப்ரோ நகரில் ஆரெஷ்னிக் என்ற ஏவுகணையை ரஷியா கடந்த 2024 அக்டோபா் மாதம் வீசியது.
கண்ணிமைக்கும் நேரத்தில் தாக்கியதால் அது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாக இருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால், அது புதிய வகை நடுத்தர தொலைவு ஏவுகணை எனவும், உலகின் எந்த வான்பாதுகாப்பு தளவாடத்தாலும் இடைமறிக்க முடியாத அதனை உக்ரைன் மீது மீண்டும் வீசத் தயாராக இருப்பதாகவும் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் பின்னா் தெரிவித்தாா்.
இருந்தாலும், அதற்குப் பிறகு தற்போதுதான் உக்ரைன் மீது ஆரெஷ்னிக் ஏவுகணை முதல்முறையாக வீசப்படுவது குறிப்பிடத்தக்கது.

