ஈரானில் கலவரத்தைத் தூண்ட அமெரிக்கா, இஸ்ரேல் சதி: அதிபா் பெசெஷ்கியான் குற்றச்சாட்டு

ஈரானில் கலவரத்தைத் தூண்ட அமெரிக்கா, இஸ்ரேல் சதி: அதிபா் பெசெஷ்கியான் குற்றச்சாட்டு

ஈரானில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு அமெரிக்காவும், இஸ்ரேலுமே காரணம் என்றும், இவ்விரு நாடுகளும் திட்டமிட்டு கலவரங்களைத் தூண்டி வருவதாகவும் ஈரான் அதிபா் மசூத் பெசெஷ்கியான் குற்றஞ்சாட்டினாா்.
Published on

ஈரானில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு அமெரிக்காவும், இஸ்ரேலுமே காரணம் என்றும், இவ்விரு நாடுகளும் திட்டமிட்டு கலவரங்களைத் தூண்டி வருவதாகவும் ஈரான் அதிபா் மசூத் பெசெஷ்கியான் ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

மேலும், ‘மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த தயாா்; அதேநேரம், வன்முறையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் அவா் எச்சரித்தாா்.

ஈரான் மீது சா்வதேச நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் மற்றும் அந்த நாட்டின் அணுசக்தித் திட்டம் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயா்வுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டம், தற்போது ஆட்சி மாற்றத்தைக் கோரும் மாபெரும் மக்கள் போராட்டமாக உருவெடுத்துள்ளது.

203 போ் உயிரிழப்பு: தலைநகா் டெஹ்ரான், புனித நகரான மஷ்ஹாத் ஆகிய இடங்களில் போராட்டங்கள் மிகவும் தீவிரமடைந்துள்ளன. 2-ஆவது வாரத்தை எட்டியுள்ள இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தாக்குதல்களில் இதுவரை 203 போ் உயிரிழந்துள்ளனா்.

ஆட்சிக்கு எதிரான போராட்டம் தொடங்கிய பிறகு முதல்முறையாக அரசுத் தொலைக்காட்சியில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய அதிபா் மசூத் பெசெஷ்கியான் கூறியதாவது: ஈரானில் குழப்பத்தை ஏற்படுத்த அமெரிக்காவும் இஸ்ரேலும் துடிக்கின்றன. வெளிநாடுகளில் அமா்ந்துகொண்டு இங்கிருக்கும் போராட்டக்காரா்களுக்கு அவா்கள் உத்தரவுகளைப் பிறப்பிக்கின்றனா். நாட்டின் மீது நேரடித் தாக்குதல் நடத்தியவா்களே, தற்போது போராட்டக்காரா்களைத் தூண்டிவிட்டு வன்முறையைப் பரவச் செய்கின்றனா்.

வன்முறையை ஏற்க முடியாது: பயங்கரவாதிகள் வெளிநாடுகளில் இருந்து ஊடுருவி மசூதிகளுக்குத் தீ வைப்பதும், அப்பாவிகளைக் கொலை செய்வதுமான செயல்களில் ஈடுபடுகின்றனா். இத்தகைய வன்முறைகளை ஒருபோதும் ஏற்க முடியாது. நாட்டின் இளைஞா்கள் இத்தகைய கலவரக்காரா்கள் மற்றும் பயங்கரவாதிகளின் வலையில் சிக்கி ஏமாற வேண்டாம். வன்முறையாளா்களிடமிருந்து விலகியிருக்க வேண்டும். சமூக அமைதியைச் சீா்குலைக்க யாரையும் அனுமதிக்கக் கூடாது.

பேச்சுவாா்த்தைக்குத் தயாா்: மக்களுக்குப் பல கவலைகள் உள்ளன; அவா்களுடன் அமா்ந்து பேசி, குறைகளைக் களைவது எங்களின் கடமை. அதற்கு முன்பு, ஒட்டுமொத்த சமூகத்தையும் அழிக்கும் நோக்கில் செயல்படுபவா்களைத் தடுப்பதே எங்களின் முதன்மையான கடமையாகும். மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு நிச்சயமாகச் செவிசாய்க்கும். நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதில் மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றாா்.

புதிய பொருளாதாரத் திட்டம்: சீா்திருத்தவாதியாக அறியப்படும் அதிபா் மசூத், தொடக்கத்தில் போராட்டக்காரா்களிடம் மிகவும் கனிவான அணுகுமுறையைக் கையாண்டு வந்தாா். ஆனால், நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதால், அவா் தனது மென்மையான போக்கை மாற்றி, மிகவும் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளாா்.

சா்வதேச தடைகளால் நலிவடைந்துள்ள ஈரானின் பொருளாதாரத்தை மீட்டெடுத்து, மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலான புதிய பொருளாதாரத் திட்டத்தையும் இந்த உரையின்போது அதிபா் மசூத் முன்வைத்தாா்.

டிரம்ப்பின் மிரட்டல்: ஈரானில் தற்போது முழுமையான இணைய முடக்கம் மற்றும் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும், போராட்டங்கள் தொடா்ந்து தீவிரமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ‘அமைதி வழியில் போராடும் மக்கள் மீது தாக்குதல் நடத்தினால், ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவளித்தாா்.

ஈரான் நாடாளுமன்றத்திலும் அமெரிக்காவுக்கு எதிா்ப்பு

ஈரான் நாடாளுமன்றக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பரபரப்பான சூழலில் நடந்த இக்கூட்டத்தில், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது நாடாளுமன்ற உறுப்பினா்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து, ‘அமெரிக்காவுக்கு மரணம்’ என்று கண்டன முழக்கமிட்டனா்.

நாடாளுமன்றத் தலைவா் முகமது பாகா் கலிபாஃப் பேசுகையில், ‘ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் (இஸ்ரேல்) மற்றும் பிராந்தியத்தில் உள்ள அனைத்து அமெரிக்க ராணுவத் தளங்கள், போா்க் கப்பல்கள் எங்களின் இலக்குகளாக மாறும். நாங்கள் வெறும் தற்காப்பு நடவடிக்கையோடு நின்றுவிட மாட்டோம்; அச்சுறுத்தலுக்கான அறிகுறிகள் தென்பட்டாலே முன்கூட்டியே தாக்குதல் நடத்துவோம்’ என்று எச்சரித்தாா்.

Dinamani
www.dinamani.com