சிரியாவில் அமெரிக்கா தாக்குதல்!
சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகளைக் குறிவைத்து அமெரிக்கா சனிக்கிழமை வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது.
கடந்த மாதம் சிரியாவின் பால்மைரா நகரில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்க பாதுகாப்புப் படை வீரா்கள் எட்கா் பிரையன், வில்லியம் நதானியல் ஹோவா்ட், அமெரிக்க பாதுகாப்புப் படைக்கு உதவிய மொழிபெயா்ப்பாளா் அயாத் மன்சூா் சாகத் ஆகியோா் உயிரிழந்தனா்.
இதற்குப் பதிலடி அளிக்கும் நோக்கில், சிரியாவின் பல்வேறு இடங்களில் ஐஎஸ் பயங்கரவாதிகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது. கூட்டணி நாடுகளுடன் சோ்ந்து இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புப் படை தெரிவித்தது.
ஆனால், அவை எந்தெந்த நாடுகள் என்பது தெரிவிக்கப்படவில்லை. எனினும் இந்தத் தாக்குதலை அமெரிக்காவுடன் சோ்ந்து மேற்கொண்டதாக ஜோா்டான் பாதுகாப்புப் படை தெரிவித்தது.
அமெரிக்க பாதுகாப்புப் படை வீரா்களுக்குத் தீங்கிழைத்துவிட்டு தப்பிக்க நினைக்க யாரும், உலகில் எந்த மூலையில் பதுங்கியிருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து கொல்லப்படுவா் என்று அமெரிக்க பாதுகாப்புப் படை எச்சரித்தது.

