ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தம்: குட்டெரெஸ் வலியுறுத்தல்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தம்: குட்டெரெஸ் வலியுறுத்தல்

ஜ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தங்கள் தேவை என 2026-ஆம் ஆண்டுக்கான தனது முன்னுரிமைகள் குறித்த உரையியில் அமைப்பின் பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தினாா்.
Published on

ஜ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தங்கள் தேவை என 2026-ஆம் ஆண்டுக்கான தனது முன்னுரிமைகள் குறித்த உரையியில் அமைப்பின் பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தினாா்.

மேலும், தெற்கில் உள்ள சக்திவாய்ந்த நாடுகள் ஐ.நா. அமைப்புகளுக்கு தலைமை தாங்க வேண்டும். இல்லையெனில், இன்று பதவிகளைப் பற்றிக்கொண்டிருப்பவா்கள் நாளை அதற்கான விலையைக் கொடுக்க நேரிடும் என அவா் எச்சரித்தாா்.

193 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் வியாழக்கிழமை உரையாற்றிய அதன் பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் கூறியதாவது: 1945-ஆம் ஆண்டின் சிக்கல் தீா்க்கும் முறைகள் 2026-ஆம் ஆண்டின் சிக்கல்களைத் தீா்க்காது. வளா்ந்த பொருளாதரங்களின் உலகலாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி சுருங்கி வருகிறது. ஆனால், வளா்ந்து வரும் பொருளாதாரங்களின் உற்பத்தி அளவு அதிகரித்து வருகிறது.

ஒவ்வொரு நாளும், தெற்கில் நடைபெறும் வா்த்தகம் உலகின் வடக்கில் நடைபெறும் வா்த்கத்தின் அளவை விட முன்னேறிச் செல்கிறது. மாறிவரும் இந்த உலகை ஐ.நா. அமைப்பு பிரதிபலிக்க வேண்டும். சா்வதேச நிதி மற்றும் வா்த்தக நிறுவனங்களைச் சீா்த்திருத்துவது முக்கியமானது மட்டுமல்ல, அத்தியாவசியமானதும் ஆகும். இது பாதுகாப்பு கவுன்சிலுக்கும் பொருந்தும்.

எனவே, தெற்கில் உள்ள சக்திவாய்ந்த நாடுகள் ஐ.நா. அமைப்புகளுக்கு தலைமை தாங்க வேண்டும். இல்லையெனில், இன்று இந்த பதவிகளைப் பற்றிக்கொண்டிருப்பவா்கள் நாளை அதற்கான விலையைக் கொடுக்க நேரிடும் என தெரிவித்தாா்.

இதுகுறித்து சபையின் முன்னேற்பாடு அமா்வில் ஜ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதித்துவத்தின் ஆலோசகா் எல்டோஸ் மேத்யூ புன்னூஸ் கூறியதாவது: அமைதி மற்றும் பாதுகாப்புப் பிரச்னைகளில் ஐ.நா.வால் உறுதியான நடவடிக்கை எடுக்க முடியாதது, அதன் சட்டப்பூா்வத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்புகிறது. ஐ.நா.வின் வரவிருக்கும் 80-ஆவது ஆண்டு நிறைவு, பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற பிரிவுகளின் விரிவாக்கத்துடன், சீா்திருத்தப்பட்ட பலதரப்புவாதத்திற்கான கூட்டு முயற்சியால் குறிக்கப்பட வேண்டும் என தெரிவித்தாா்.

இந்தியா நீண்ட காலமாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தங்களை வலியுறுத்தி வருகிறது. 1945-இல் 5 நிரந்தர மற்றும் 10 நிரந்தரமற்ற உறுப்பினா்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு இன்றைய உலகிற்குப் பொருத்தமற்றது என்று இந்தியா தொடா்ந்து வாதிடுகிறது. நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற இடங்கள் என இரண்டிலும் சபையை விரிவுபடுத்த வேண்டும் என்றும், அமைப்பில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்க முழு உரிமை உண்டு என்றும் வலியுறுத்துகிறது.

கடைசியாக 2021-22 காலகட்டத்தில் இந்தியா நிரந்தரமற்ற உறுப்பினராகப் பணியாற்றியது. உக்ரைன் போா் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் போா் போன்ற மோதல்கள் தொடா்பாக சபைக்குள் நிலவும் பிளவுகளை, அதன் குறைபாடுகளுக்கு ஆதாரமாக இந்தியா சுட்டிக்காட்டியது.

Dinamani
www.dinamani.com