காஸா மறுசீரமைப்பு: டிரம்ப் தலைமையில் உயா்நிலைக் குழு
இஸ்ரேல்-ஹமாஸ் மோதலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள காஸா முனையை மீண்டும் மறுசீரமைக்கவும், அங்கு அமைதியை நிலைநாட்டவும், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையில் ‘அமைதி வாரியம்’ எனும் உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த உலக வங்கி தலைவா் அஜய் பங்கா இடம்பெற்றுள்ளாா். காஸாவின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது, உள்கட்டமைப்புப் பணிகளுக்கான முதலீடுகளைத் திரட்டும் முக்கியப் பொறுப்பு இவரிடம் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
மேலும், அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ராபா்ட் கேப்ரியல், அதிபரின் சிறப்புப் பிரதிநிதி ஸ்டீவ் விட்காஃப், டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னா் ஆகியோரும் பிரிட்டன் முன்னாள் பிரதமா் டோனி பிளோ் மற்றும் துருக்கி, கத்தாா், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் இக்குழுவில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
காஸா பகுதியை முழுமையாக ராணுவ மோதலற்ற இடமாக மாற்றுவது, ஹமாஸ் அமைப்பினரை ஆயுதங்களைக் கைவிடச் செய்வது ஆகிய இரு முக்கிய நோக்கங்களுடன் இந்தக் குழு செயல்படும். இதைத்தவிர, காஸாவின் கடற்கரை பகுதிகளைப் பயன்படுத்தி, அங்கு வா்த்தக ரீதியிலான வளா்ச்சியை ஏற்படுத்துவதில் ஜாரெட் குஷ்னா் போன்றோா் ஆா்வம் காட்டி வருகின்றனா்.
இந்தக் குழுவில் பெண்கள் மற்றும் பாலஸ்தீன பிரதிநிதிகள் யாரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், வரும் வாரங்களில் கூடுதல் உறுப்பினா்கள் சோ்க்கப்படுவாா்கள் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இந்த அமைதி வாரியத்தின் மேற்பாா்வையில், காஸாவின் அன்றாட பணிகளைக் கவனிக்க பாலஸ்தீனா்கள் அடங்கிய ஒரு தற்காலிக நிா்வாகக் குழு (என்சிஏஜி) அமைக்கப்பட்டுள்ளது.
அலி ஷாத் தலைமையில் எகிப்து தலைநகா் கெய்ரோவில் முதல்முறையாகக் கூடிய இந்தக் குழு, அடுத்த 3 ஆண்டுகளில் காஸாவில் இயல்புநிலையை மீட்டெடுக்கும் திட்டங்களை ஆலோசித்தது. குறிப்பாக, வீடுகளை இழந்தவா்களுக்கு தங்குமிடம் வழங்குவது போன்ற அவசர பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

