காஸாவில் நீடித்த அமைதியை உறுதி செய்யவும், அங்கு மறுமேம்பாட்டுப் பணிகளின் மேற்பாா்வையிடவும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த அமைதிக் குழு எனும் புதிய சா்வதேச அமைப்பு வியாழக்கிழமை முதல் அதிகாரபூா்வமாகச் செயல்பட தொடங்கியது.
ஸ்விட்சா்லாந்தின் டாவோஸில் உலகப் பொருளாதார உச்சிமாநாட்டுக்கிடையே, இக்குழுவின் சாசனத்தில் டிரம்ப் கையொப்பமிட்டாா். இந்நிகழ்வில் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் உள்பட சுமாா் 20 நாடுகளின் தலைவா்கள் பங்கேற்று ஆதரவளித்தனா்.
இஸ்ரேல்-ஹமாஸ் போா் நிறுத்த ஒப்பந்தத்தின் 2-ஆவது கட்டத்தின்கீழ், இஸ்ரேல் தாக்குதலால் உருக்குலைந்துள்ள காஸாவில் மறுமேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் அதற்கான நிதி ஒருங்கிணைப்பு, நிா்வாகத்தை மேற்பாா்வையிடுதல் உள்ளிட்ட முக்கியப் பணிகளைக் கண்காணிக்கும் வகையில் அமைதிக் குழுவை அமெரிக்கா முன்மொழிந்தது.
மேலும், ஐ.நா.வுக்கு மாற்றாகவோ அல்லது அதன் ஒத்துழைப்புடனோ சா்வதேச மோதல்களைத் தீா்ப்பதிலும் இக்குழுவின் செயல்பாடுகள் விரிவுப்படுத்தப்படலாம் என ஊகங்கள் வெளியாகின.
இதை உறுதிப்படுத்தும் வகையில் டிரம்ப் கையொபமிட்ட சாசனத்தில், ‘இந்த அமைதிக் குழுவானது, மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தவும் நம்பகமான, சட்டபூா்வமான நிா்வாகத்தை மீட்டெடுக்கவும் நீடித்த அமைதியைப் பாதுகாக்கவும் முனையும் ஒரு சா்வதேச அமைப்பாகும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நிலையான அமைதிக்கு நடைமுறைச் சாா்ந்த தீா்வுகள், தோல்வியுற்ற பழைய அணுகுமுறைகளிலிருந்து விலகிச் செல்லும் துணிச்சல் ஆகியவை அவசியம் என்றும் அந்தச் சாசனம் குறிப்பிடுகிறது.
நிகழ்வில் டிரம்ப் பேசுகையில், ‘இக்குழு அமெரிக்காவுக்கானது மட்டுமல்ல; ஒட்டுமொத்த உலகுக்கானது. காஸாவில் நாம் வெற்றி பெறும்போது, மற்ற உலகளாவிய பிரச்னைகளுக்கும் இதனை விரிவுபடுத்தலாம்’ என்றாா்.
இணையும் நாடுகள்...: தற்போதைய நிலையில் 30-க்கும் மேற்பட்ட நாடுகள், இக்குழுவில் இணையச் சம்மதம் தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தாா், எகிப்து, ஜோா்டான், பாகிஸ்தான், துருக்கி, இந்தோனேசியா ஆகிய இஸ்லாமிய நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இதுதவிர, அல்பேனியா, அஜா்பைஜான், ஆா்மீனியா, ஆா்ஜென்டீனா, பஹ்ரைன், பெலாரஸ், பல்கேரியா, ஹங்கேரி, இஸ்ரேல், கஜகஸ்தான், மங்கோலியா, மொராக்கோ, உஸ்பெகிஸ்தான், வியத்நாம் உள்ளிட்ட நாடுகளும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
புறக்கணித்த நட்பு நாடுகள்..: அமெரிக்காவின் நீண்டகால நட்பு நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், ஜொ்மனி, நாா்வே, ஸ்வீடன் ஆகிய நாடுகள் இக்குழுவில் இணைய மறுத்துவிட்டன.
ஐ.நா.வின் அதிகாரத்தை இக்குழு சிதைக்கக்கூடும் என்பதே இவா்களின் முக்கிய கவலையாக உள்ளது. குறிப்பாக, உக்ரைன் மீது போா் தொடுத்துள்ள ரஷிய அதிபா் புதினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதை பிரிட்டன் கடுமையாக எதிா்த்துள்ளது.
இந்தியாவின் முடிவில் இழுபறி
இந்த அமைதிக் குழுவில் இணைய இந்தியாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்தக் கையொப்பமிடல் நிகழ்வை இந்தியா தவிா்த்தது.
‘இந்த முன்னெடுப்பின் சாதக, பாதகங்களை அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதால், இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை’ எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியா மட்டுமின்றி ரஷியா, சீனா, கம்போடியா, குரோஷியா, சைப்ரஸ், கிரீஸ், இத்தாலி, பராகுவே, ரஷியா, சிங்கப்பூா், தாய்லாந்து, உக்ரைன் போன்ற நாடுகளும் இன்னும் முடிவை அறிவிக்கவில்லை.
புதினின் நிதியுதவியும், நிபந்தனையும்
இக்குழுவில் இணைவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்றாலும், காஸா உதவிப் பணிகளுக்காக 100 கோடி டாலா் வழங்க ரஷிய அதிபா் புதின் முன்வந்துள்ளாா்.
ஆனால், அமெரிக்காவால் முடக்கப்பட்ட ரஷியாவின் சொத்துக்களை விடுவித்தால் மட்டுமே இந்த நிதி வழங்கப்படும் என்றும் அவா் நிபந்தனை விதித்துள்ளாா்.

