8 போர்களை முடித்து வைத்தேன்! அமைதிக்கான நோபல் பரிசு ஏற்பதை நியாயப்படுத்தும் டிரம்ப்

8 போர்களை முடித்து வைத்தேன் என்று அமைதிக்கான நோபல் பரிசை தான் ஏற்பதை நியாயப்படுத்தியிருக்கிறார் டிரம்ப்
File photo donald trump
டொனால்ட் டிரம்ப்ENS
Updated on
1 min read

உலகளவில் 8 போர்களை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளேன் என்று, வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவின் அமைதி நோபல் பரிசை ஏற்றுக்கொள்ளும் தனது முடிவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நியாயப்படுத்தியிருக்கிறார்.

பல உலகளாவிய மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதில் இருந்த தன்னுடைய பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக இது அவருக்கு வழங்கப்பட்டதாகவும் கூறியிருக்கிறார்.

வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ, தனக்குக் கிடைத்த அமைதிக்கான நோபல் பரிசை அமெரிக்க அதிபர் டிரம்பை, கடந்த வியாழக்கிழமை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசிய போது வழங்கியிருக்கிறார்.

இது பற்றி பேசிய டிரம்ப், மச்சாடோ ஒரு அற்புதமான பெண் என்று பாராட்டியதோடு, பரஸ்பர மரியாதைக்குரிய ஒரு அற்புதமான செயல் என்றும் தெரிவித்திருக்கிறார்.

வேறொருவருடைய அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுக் கொள்வது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, இந்த முடிவு நேர்மையாக எடுக்கப்பட்டது என்று பதிலளித்தார்.

அவர் எனக்கு அந்தப் பரிசை வழங்கினார், அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும், மச்சாடோ, என்னிடம் கூறினார், நீங்கள் 8 போர்களை நிறுத்தியிருக்கிறீர்கள் என்று. எனவே, இந்தப் பரிசு உங்களைவிட வேறு யாருக்கும் ஏற்புடையதாக இருக்காது என்றும் கூறினார். அவர் மிகச் சிறந்த பெண்மணி என்றார் டிரம்ப்.

தொடர்ந்து பேசிய டிரம்ப், தனது வெளியுறவுக் கொள்கை மூலம் செய்த சாதனைகளை பட்டியலிட்டதோடு, அமைதிக்கான நோபல் பரிசுக்கு தன்னுடைய பெயரை முன்மொழிய வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளார்.

இதனுடன் வழக்கம் போல இந்தியா - பாகிஸ்தான் போரை தானே நிறுத்தினேன் என்றும், இரண்டு அணு ஆயுத நாடுகளுக்கு இடையேயான போரை நிறுத்தியதாகவும் குறிப்பிட்டார்.

டிரம்ப், இந்த கூற்றை கடந்த ஆண்டு மே மாதம் முதல் கூறி வருகிறார். தன்னுடைய வெளியுறவுக் கொள்கை மூலம் இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றத்தை தணித்ததாகக் கூறி வரும் வேளையில், போர் நிறுத்தத்தில் மூன்றாம் நபர் தலையீடு இல்லை என்றே இந்தியா விளக்கம் கொடுத்து வருகிறது.

தன்னுடைய நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை அங்கீகரிக்கும் வகையில், தங்களுடைய சந்திப்பின்போது, அமைதிக்கான நோபல் பரிசை தான் வழங்கியதாக வெனிசுவேலாவின் தலைவா் மரியா கொரினா மச்சாடோவுக்கு (58) நேற்று தெரிவித்திருந்தார்.

மச்சாடோ வழங்கிய நோபல் பரிசை டிரம்ப் பெற்றுக்கொண்டாரா என்பதை வெள்ளை மாளிகை உடனடியாகத் தெரிவிக்காத நிலையில், அதனை ஏற்றுக் கொள்வது குறித்து டொனால்ட் டிரம்ப் பேசியிருக்கிறார்.

Summary

Trump justifies accepting Nobel Peace Prize by saying he ended 8 wars

File photo donald trump
என்ன, ஸ்மார்ட்போன், டிவி, லேப்டாப் விலைகள் உயரப்போகிறதா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com