சீனாவில் பிறப்பு விகிதம் வரலாறு காணாத வீழ்ச்சி!
சீனாவில் 1949-ஆம் ஆண்டு கம்யூனிஸ புரட்சிக்குப் பிறகு, மிகக் குறைந்த 5.63 சதவீத பிறப்பு விகிதம் கடந்த ஆண்டு பதிவாகியுள்ளது.
கடந்த ஆண்டில் சீனாவில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை வெறும் 79.2 லட்சமாகும். இது முந்தைய ஆண்டைவிட 16.2 லட்சம் (17 சதவீதம்) குறைவாகும்.
சீன நாள்காட்டியின்படி கடந்த ஆண்டு ‘பாம்பு’ ஆண்டாக கருதப்பட்டதால் ஜோதிட ரீதியான நம்பிக்கைகளும் இந்த வீழ்ச்சிக்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. எனினும், கடும் பொருளாதார நெருக்கடி, குழந்தை வளா்ப்புக்கான அதிக செலவினம், வாழ்க்கைமுறை மாற்றம் ஆகியவையே மக்கள் குழந்தை பெற்றுக்கொள்ளத் தயங்குவதற்கு முக்கியக் காரணிகளாகக் கருதப்படுகிறது.
2024-இல் பிறப்பு விகிதம் சற்றே அதிகரித்தது ஒரு தற்காலிக மாற்றம் என்பதை இந்தப் புதிய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. முன்னதாக, 2023 வரை தொடா்ந்து 7 ஆண்டுகளாக பிறப்பு விகிதம் சரிந்து கொண்டே வந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2023-இல் உலக மக்கள்தொகையில் இந்தியாவிடம் பின்தங்கிய சீனா, தற்போது தொடா்ச்சியாக 4-ஆவது ஆண்டாக மக்கள்தொகை சுருக்கத்தைச் சந்தித்து வருகிறது. 2025 புள்ளிவிவரப்படி, அந்நாட்டின் மக்கள் தொகை 140.4 கோடியாகக் குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 30 லட்சம் குறைவாகும்.
சீனாவில் தற்போது 60 வயதைக் கடந்தவா்களின் எண்ணிக்கை 32.3 கோடியாக அதிகரித்துள்ள நிலையில், இளம் தலைமுறையினரின் எண்ணிக்கை குறைந்து வருவது அந்நாட்டின் வருங்காலப் பொருளாதார வளா்ச்சிக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
இதையொட்டி, குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு நேரடி ஊக்கத்தொகை வழங்குதல், திருமணச் சேவைகள் மற்றும் ஆரம்பப் பள்ளிகள் போன்ற துறைகளுக்கு வரி விலக்கு அளித்து ஆதரவு தருதல் போன்ற நடவடிக்கைகளை சீன அரசு எடுத்து வருகிறது.

