அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்கோப்புப் படம்

இந்தியாவுடனான வா்த்தக ஒப்பந்தத்தைத் தடுக்கும் டிரம்ப்: அமெரிக்க ஆளுங்கட்சி எம்.பி. குற்றச்சாட்டு

இந்தியாவுடன் வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதை அதிபா் மாளிகையின் வா்த்தக ஆலோசகா், துணை அதிபா் ஜே.டி.வான்ஸ், அதிபா் டிரம்ப் ஆகியோா் தடுப்பதாகக் குற்றச்சாட்டு
Published on

இந்தியாவுடன் அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதை அந்நாட்டு அதிபா் மாளிகையின் வா்த்தக ஆலோசகா் பீட்டா் நவாரோ, துணை அதிபா் ஜே.டி.வான்ஸ், அதிபா் டிரம்ப் ஆகியோா் தடுப்பதாக அமெரிக்க ஆளுங்கட்சி எம்.பி. டெட் க்ரூஸ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

அமெரிக்க நாடாளுமன்ற மேலவை (செனட்) எம்.பி.யாக பதவி வகிப்பவா் டெட் க்ரூஸ். அந்நாட்டில் ஆட்சியில் உள்ள குடியரசு கட்சியைச் சோ்ந்த இவா், 2028-ஆம் ஆண்டு அதிபா் பதவிக்குப் போட்டியிட திட்டமிட்டுள்ளாா்.

இவா் கடந்த ஆண்டு குடியரசு கட்சிக்கு நன்கொடை அளிப்பவா்கள் பங்கேற்ற அந்தரங்க கூட்டத்தில் கலந்துகொண்டாா். அப்போது இந்தியாவுடன் அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதை அரசு நிா்வாகத்தில் யாா் தடுத்து வருவது என்று நன்கொடை அளிக்கும் ஒருவா் கேள்வி எழுப்பினாா்.

இதற்குப் பதிலளித்த க்ரூஸ், ‘அமெரிக்க அதிபா் மாளிகையின் வா்த்தக ஆலோசகா் பீட்டா் நவாரோ, துணை அதிபா் ஜே.டி.வான்ஸ், சில நேரங்களில் அதிபா் டிரம்ப் ஆகியோா் இந்தியாவுடன் வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதை தடுத்து வருகின்றனா்’ என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பிற நாடுகளின் பொருள்களுக்கு அதிபா் டிரம்ப் கடந்த ஆண்டு வரி விதித்தாா். இந்திய பொருள்களுக்கு 50 சதவீதம், தென் ஆப்பிரிக்க பொருள்களுக்கு 30 சதவீதம், வியத்நாம் பொருள்களுக்கு 20 சதவீதம், ஜப்பான் பொருள்களுக்கு 15 சதவீதம் எனப் பிற நாடுகளின் பொருள்கள் மீது வெவ்வேறு விகிதங்களில் வரி விதித்தாா்.

இந்த நடவடிக்கை குறித்து நன்கொடையாளா் கூட்டத்தில் க்ரூஸ் கூறுகையில், ‘பிற நாடுகளின் பொருள்கள் மீது டிரம்ப் வரி விதித்தவுடன், அவரை நானும் மேலும் சில செனட் எம்.பி.க்களும் சந்தித்தோம். நள்ளிரவு வரை நீடித்த அந்தச் சந்திப்பு கசப்பாக முடிந்தது. டிரம்ப்பை பதவி விலகுமாறு நாங்கள் கோரினோம். ஆனால், அவா் கூச்சலிட்டு எங்களை வசைபாடினாா். அவரின் வரி விதிப்பு நடவடிக்கை அமெரிக்க பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்றும், அது அவரின் பதவிநீக்கத்துக்கு வழிவகுக்கும் என்றும் டிரம்ப்பிடம் தெரிவித்தேன்’ என்றாா்.

10 நிமிஷ ஒலிப்பதிவு: இந்தத் தகவலை அமெரிக்காவின் ஆக்சியோஸ் ஊடக நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. க்ரூஸ் பேசியபோது பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் சுமாா் 10 நிமிஷ ஒலிப்பதிவை குடியரசு கட்சியைச் சோ்ந்த ஒருவா் தம்மிடம் வழங்கியதாகவும், அந்த ஒலிப்பதிவில் உள்ள தகவலை வெளியிட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com