

பாகிஸ்தானின் 3 மாகாணங்களில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் பாதுகாப்புப் படையினரின் தாக்குதல்களில் 52 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளால் பஞ்சாப் மாகாணத்தில் 6 பயங்கரவாதிகளும், பலூசிஸ்தானில் 41 பயங்கரவாதிகளும் மற்றும் கைபர் பக்துன்குவாவில் தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பைச் சேர்ந்த தளபதி உள்பட 5 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தானின் பாதுகாப்புப் படைகளின் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக, பஞ்சாப் மாகாண காவல் துறையின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கூறியுள்ளனர்.
பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தியதாகவும், கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து மிகப் பெரியளவிலான ஆயுதங்கள் மற்றும் அவர்கள் கொள்ளையடித்த பணம் ஆகியவைக் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதல்களில், 3 உள்ளூர்வாசிகள் கொல்லப்பட்டதுடன் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த நடவடிக்கையில், 25 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளைப் பிடிக்க பாகிஸ்தான் ராணுவம் ஹெலிகாப்டர்கள் மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக அறிவித்துள்ளனர்.
முன்னதாக, ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆம் ஆண்டு தலிபான்கள் தலைமையிலான ஆட்சி அமைந்தது முதல் பாகிஸ்தானில் நடைபெறும் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகக் குற்றம்சாட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.