

கிழக்கு காங்கோவில் உள்ள கோல்டன்(coltan) சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 200 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாகக் கிளர்ச்சிப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் புதன்கிழமையன்று எம்-23 கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ரூபாயா சுரங்கங்களில் நிகழ்ந்ததாக வடக்கு-கிவு மாகாணத்தின் கிளர்ச்சியாளர்களால் நியமிக்கப்பட்ட ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
கடந்த சில நாள்களாகப் பெய்த கனமழை காரணமாகவே இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக அவர் கூறினார். இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சிலர் மண்ணில் புதைந்துள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
காயடைந்தவர்கள் ரூபாயா நகரத்தில் உள்ள மூன்று சுகாதார மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், மேலும், சிலர் 50 கி.மீ. தொலைவில் உள்ள கோமா நகரத்திற்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுரங்கப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அருகில் தங்கியிருந்த குடியிருப்பாளர்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ரூபாயா, கிழக்கு காங்கோவின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கனிம வளம் நிறைந்த பகுதி, பல நூறு ஆண்டுகளாக அரசாங்கப் படைகள் மற்றும் பல்வேறு ஆயுதக் குழுக்களின் வன்முறையால் சிதைக்கப்பட்டு வருகிறது.
உலகளவில் ஸ்மார்ட் போன்கள், கணினிகள் மற்றும் விமான என்ஜின்கள் தயாரிக்கத் தேவைப்படும் கோல்டன் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கப்படும் டான்டலம் (tantalum) என்ற அரிய உலோகம் 15 சதவிகிதம் வரை ரூபாயா பிராந்தியத்திலிருந்து விநியோகிக்கப்படுகிறது.
சுரங்கத் துறையில் நடைபெற்ற மிக மோசமான விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.