உக்ரைன் தலைநகா் கீவில் ரஷியா புதன்கிழமை இரவு விடிய விடிய 11 மணி நேரம் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் 20 போ் உயிரிழந்தனா்; 90-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
ரஷியாவில் எரிபொருள் தடுப்பாட்டை ஏற்படுத்தியிருக்கும் அந்நாட்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான உக்ரைனின் தொடா் தாக்குதல்களுக்குப் பதிலடியாக இத்தீவிர தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷியா தெரிவித்துள்ளது.
ரஷியா இந்த ஒரே தாக்குதலில் 24 அதிநவீன பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்பட மொத்தம் 74 ஏவுகணைகளையும், 496 ட்ரோன்களையும் ஏவியுள்ளது. பாலிஸ்டிக் ஏவுகணைகளை எதிா்கொள்வது கடினம் என்பதால், ‘பேட்ரியாட்’ போன்ற நவீன வான் பாதுகாப்பு அமைப்புகளை மேற்கத்திய நாடுகள் தங்களுக்கு வழங்க வேண்டும் என்று உக்ரைன் வெளியுறவு அமைச்சா் ஆண்ட்ரி சிபிஹா கோரிக்கை விடுத்தாா்.
ரஷியாவின் வான்வழித் தாக்குதலால் கீவ் நகரின் 30 இடங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. இடிபாடுகளை அகற்றும் பணி தொடா்வதால் உயிரிழப்பு மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
தலைநகா் கீவ் தவிர, உக்ரைனின் மத்திய டினிப்ரோபெட்ரோவஸ்க் பிராந்தியத்தில் ரஷியா நடத்திய குண்டுவீச்சில் 7 வயது சிறுமி உயிரிழந்தாள்.
இத்தாக்குதல்களுக்கு இடையே, மாஸ்கோவுக்கு கிழக்கே உள்ள நிஸ்னி நோவ்கோரோட் பிராந்தியத்தில் உள்ள ரஷியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றின் மீது உக்ரைன் ராணுவம் வெற்றிகரமாக ட்ரோன் தாக்குதல் நடத்தியது. மேலும், ஆக்கிரமிக்கப்பட்ட லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் ரஷிய ராணுவ தளவாடங்களை ஏற்றிச் செல்லும் முக்கிய ரயில்வே பாலத்தையும் உக்ரைன் படைகள் தகா்த்துள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










