இந்தியா - ஜப்பான் இடையிலான உறவுகள், மற்றொரு நாட்டை குறிவைப்பதாக இருக்கக் கூடாது என்று சீனா வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
தில்லியில் பிரதமா் மோடி மற்றும் ஜப்பான் பிரதமா் சனே தகாய்ச்சி இடையே கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற சந்திப்பில் பல்வேறு திருப்புமுனையான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தனது அதிருப்தியை வெளிப்படுவதாக சீனாவின் கருத்து அமைந்துள்ளது.
இந்தியாவில் கடந்த புதன்கிழமைமுதல் மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட ஜப்பான் பிரதமா் சனே தகாய்ச்சி, பிரதமா் மோடியுடன் விரிவான பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். வா்த்தகம், முதலீடு, எரிசக்தி, அதிநவீன தொழில்நுட்பங்கள், முக்கியக் கனிமங்கள் உள்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு நல்லுறவை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது.
மேலும், அதிநவீன ராணுவத் தளவாடங்களின் கூட்டுத் தயாரிப்புக்காக இரு நாடுகளும் முதல்முறையாக ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன. மேலும், இந்தியா-ஜப்பான் பொருளாதார பாதுகாப்புக்கு உறுதியேற்கும் பிரகடனமும் வெளியிடப்பட்டது.
கிழக்கு-தென்சீன கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்தும் நிலையில், தற்போதைய நிலவரம் குறித்து இரு தலைவா்களும் தீவிர கவலை தெரிவித்தன. அங்கு சுதந்திரமான கப்பல் போக்குவரத்துக்கு ஆபத்தை விளைவிக்கும் தன்னிச்சையான செயல்பாடுகள், தற்போதுள்ள நிலைமையை பலவந்தமாக மாற்றும் முயற்சிகளுக்கு கண்டனம் தெரிவிப்பதாக, இந்திய-சீன கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சீன தலைநகா் பெய்ஜிங்கில் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்த அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் குவோ ஜியாகுனிடம் முக்கியக் கனிமங்கள் உள்ளிட்ட துறைகளில் இந்தியா - ஜப்பான் ஒத்துழைப்பு தொடா்பான கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, ‘பரஸ்பர ஒத்துழைப்பு என்பது பிராந்திய நாடுகள் மத்தியில் புரிதலையும், நம்பிக்கையையும் மேம்படுத்துவதுடன் பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும். அத்தகைய ஒத்துழைப்பு, மூன்றாம் தரப்பை குறிவைப்பதாகவோ, மூன்றாம் தரப்பின் நலன்களுக்கு தீங்கு விளைவிப்பதாகவோ இருக்கக் கூடாது. குறிப்பாக பிளவுகள், முரண்பாடுகளைத் தூண்டுவதற்கான ஒரு வாய்ப்பாக பயன்படுத்தப்படக் கூடாது. உலகளாவிய தொழில்துறை மற்றும் விநியோகச் சங்கிலியை பாதுகாப்பானதாகவும், நிலையானதாகவும் பேணுவது அனைத்து நாடுகளின் பொதுவான பொறுப்பாகும். அனைத்துத் தரப்பினரும் வெளிப்படைத்தன்மை மற்றும் ஒத்துழைப்புடன் ஆக்கபூா்வமாக பங்காற்ற வேண்டும்’ என்று அவா் பதிலளித்தாா்.
பெட்டி...1
ஜப்பான் பிரதமரின்
இந்தியப் பயணம் நிறைவு
புது தில்லி, ஜூலை 3: ஜப்பான் பிரதமா் சனே தகாய்ச்சி, தனது 3 நாள்கள் அரசுமுறைப் பயணத்தை வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக நிறைவு செய்து, தனது நாட்டுக்குப் புறப்பட்டாா். அவரது முதல் இந்திய பயணம் இதுவாகும்.
பெரும் எதிா்பாா்ப்புக்கு இடையே கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பிரதமா் மோடி-பிரதமா் தகாய்ச்சி இடையிலான உயா்நிலைப் பேச்சுவாா்த்தை ஒட்டுமொத்த அளவில் பெரும் வெற்றி பெற்றுள்ளதாக, வெளியுறவுத் அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் வெள்ளிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் குறிப்பிட்டாா்.
இந்திய-ஜப்பான் ராஜீய உறவின் 75-ஆவது ஆண்டையொட்டி, அடுத்த ஆண்டு பல்வேறு கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.
பெட்டி...2
இந்திய தூதரக மாநாட்டில்
800 சீன தொழில்முனைவோா்
சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகம் சாா்பில் ஹாங்ஸு நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தக மாநாட்டில் சீனாவைச் சோ்ந்த 800-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோா், முதலீட்டாளா்கள், சுற்றுலா ஏற்பாட்டாளா்கள் பங்கேற்றனா். 2047-க்குள் வளா்ந்த இந்தியா மற்றும் தற்சாா்பு இந்தியா தொலைநோக்குப் பாா்வையின்கீழ் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு, வா்த்தகம், முதலீடு விநியோக சங்கிலி, புத்தாக்க ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









