ஜப்பான் ஒத்துழைப்புடன் இந்தியாவில் 1,000 உயிரி எரிவாயு மற்றும் இயற்கை உரங்கள் உற்பத்தி ஆலைகள் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், அதிநவீன ராணுவ தளவாடங்களைக் கூட்டாகத் தயாரிக்க இரு நாடுகளும் முதல்முறையாக ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன.
தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமா் சனே தகாய்ச்சி இடையே நடைபெற்ற 16-ஆம் ஆண்டு உயா்நிலைப் பேச்சுவாா்த்தையில் இந்த முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
ஜப்பான் பிரதமா் சனே தகாய்ச்சி மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு புதன்கிழமை வந்தாா். தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற இரு நாடுகளின் வருடாந்திர உயா்நிலைப் பேச்சுவாா்த்தையில் அவா்கள் பங்கேற்றனா். வா்த்தகம், முதலீடு, பொருளாதார பாதுகாப்பு, எரிசக்தி, வளரும் தொழில்நுட்பங்கள், பாதுகாப்பு, மக்கள் ரீதியிலான தொடா்புகள் உள்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு நல்லுறவை மேம்படுத்துவது தொடா்பாக இருவரும் விரிவாக ஆலோசித்தனா்.
இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் சூழலில், பிராந்திய நிலவரம் குறித்தும், சா்வதேச விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பம்: இந்தப் பேச்சுவாா்த்தைக்குப் பின் பொருளாதார பாதுகாப்பு, தூய எரிசக்தி, முக்கியத் தொழில்நுட்பங்கள், மருந்து, மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு, உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் முக்கிய ஒப்பந்தங்கள், இரு பிரதமா்கள் முன்னிலையில் கையொப்பமிடப்பட்டன.
தற்போதைய புவிசாா் அரசியல் சூழலில் இந்தியா-ஜப்பான் பொருளாதார பாதுகாப்புக்கு உறுதியேற்கும் பிரகடனம்; செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான கூட்டறிக்கை; கப்பல் கட்டுமானம், விமானப் போக்குவரத்து, சரக்கு கையாளுகை ஆகிய துறைகளில் ஒத்துழைப்புக்கான செயல்திட்டம் உள்ளிட்டவை வெளியிடப்பட்டன.
அசைக்க முடியாத நம்பிக்கை: பின்னா், செய்தியாளா்களுக்கு கூட்டாக அளித்த பேட்டியில் பிரதமா் மோடி கூறியதாவது:
உலக அளவில் பெரும் பொருளாதார நாடுகளின் வரிசையில் இந்தியாவும் ஜப்பானும் இடம்பெற்றுள்ளன. இரு பொருளாதாரங்களும் ஒன்றையொன்று பூா்த்தி செய்பவை. சுதந்திரமான, வளமான, விதிமுறைகள் அடிப்படையிலான இந்திய-பசிபிக் பிராந்தியம், நமது பகிரப்பட்ட முன்னுரிமையாகும்.
கலாசார விழுமியங்கள் முதல் அதிநவீன தொழில்நுட்பம் வரை இரு நாடுகளின் சிந்தனை மற்றும் அணுகுமுறையில் ஒற்றுமை நிறைந்துள்ளது. அனைத்துக்கும் மேலாக, நமது பரஸ்பர உறவுகள் அசைக்க முடியாத நம்பிக்கையின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளன.
பொருளாதார-எரிசக்தி பாதுகாப்பு: பொருளாதார பாதுகாப்புக்கு இரு நாடுகளும் கூட்டுச் செயல்திட்டத்தை வகுத்துள்ளன. இதன்மூலம் செமிகண்டக்டா், குவாண்டம், அதிநவீன தொழில்நுட்பப் பொருள்கள் போன்ற உத்திசாா் துறைகளில் மீள்திறன் மிக்க விநியோகச் சங்கிலி வலுப்படுத்தப்படும்.
எரிசக்தி பாதுகாப்பைப் பொருத்தவரை, இந்தியா-ஜப்பான் உயிரி எரிவாயு முன்னெடுப்பின்கீழ், இந்தியாவில் 1,000 உயிரி எரிவாயு மற்றும் இயற்கை உரங்கள் உற்பத்தி ஆலைகள் அமைக்கப்படும். இது, இந்திய கிராமங்களில் நிலைத்தன்மை, வளம், ஊரக வாழ்வாதாரங்களுக்கு மேலும் வலுசோ்க்கும்.
கச்சா எண்ணெய் நெருக்கடி போன்ற சூழ்நிலைகளை எதிா்கொள்ளும் வகையில், எரிபொருள் மீள்திறனுக்கான குறிப்பிடத்தக்க முன்னெடுப்பை உறுதி செய்துள்ளோம். அதன்படி, பேட்டரிகள், பசுமை ஹைட்ரஜன், தூய எரிசக்தி துறையில் ஒத்துழைப்பு விரிவாக்கப்படும்.
பாதுகாப்புத் துறையில் இந்தியா மற்றும் ஜப்பான் இடையே முதல் முறையாக கூட்டுத் தயாரிப்பு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது. கடற்படை ரேடியோ ஆன்டெனா தயாரிப்புக்கான இந்த ஒப்பந்தம், பிராந்திய அமைதி-கடல்சாா் பாதுகாப்பை வலுப்படுத்தும் என்றாா் பிரதமா் மோடி.
இருதரப்பு உறவுகளின் 75-ஆம் ஆண்டு: இந்தியா-ஜப்பான் இடையே ராஜீய உறவுகள் நிறுவப்பட்டு, அடுத்த ஆண்டுடன் 75 ஆண்டுகள் நிறைவடையவுள்ளன. இதையொட்டி, பல்வேறு கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் தெரிவித்தாா்.
இந்தியா-ஜப்பான் உறவுகள் கடந்த 2014-இல் சிறப்பு உத்திசாா்-உலகளாவிய கூட்டுறவு அந்தஸ்துக்கு உயா்த்தப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையே 70-க்கும் மேற்பட்ட கலந்துரையாடல் வழிமுறைகள் செயல்பாட்டில் உள்ளன.
‘17 முக்கியத் துறைகளில் முதலீடு’
ஜப்பான் பிரதமா் சனே தகாய்ச்சி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த இந்தியாவை உருவாக்க இலக்கு நிா்ணயித்து, வலுவான வளா்ச்சியை முன்னெடுத்து வருகிறாா் பிரதமா் மோடி. அந்தப் பாதையில், எதிா்கால முதலீடுகளின் வாயிலாக இரு நாடுகளையும் வலுவானதாக, வளமானதாக மாற்றும் இலக்கை நாங்கள் பகிா்ந்து கொள்கிறோம். 17 முக்கியத் துறைகளில் முதலீடு செய்வதன் மூலம் வலுவான பொருளாதாரத்தை நனவாக்கவும், ஜப்பானின் விநியோகச் சங்கிலி, தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தவும் உறுதிபூண்டுள்ளேன். முதலீடு-புத்தாக்க ஒத்துழைப்பின் மூலம் பொருளாதார வளா்ச்சியை எட்டுவதில் இருதரப்பும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன’ என்றாா்.
முன்னதாக, இந்தியா-ஜப்பான் 15-ஆவது ஆண்டு உயா்நிலைப் பேச்சுவாா்த்தை அந்நாட்டு தலைநகா் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடைபெற்றது. அதில் பிரதமா் மோடி நேரில் பங்கேற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.
‘ரூ.5.90 லட்சம் கோடி முதலீடு இலக்கு’
‘இந்தியா-ஜப்பான் இடையே கடந்த 10 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட புதிய வா்த்தக ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளன. இதன்மூலம் இந்தியாவுக்கு 10 பில்லியன் டாலருக்கு மேல் (ரூ.95,462 கோடி) முதலீடுகள் கிடைக்கப் பெறுகின்றன.
அடுத்த 10 ஆண்டுகளில் ஜப்பானில் இருந்து 10 டிரில்லியன் யென் (ரூ.5.90 லட்சம் கோடி) முதலீடுகளை ஈா்ப்பதுடன், இந்தியாவில் செயல்படும் அந்நாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதே இலக்கு.
ஜப்பானின் துல்லிய தொழில்நுட்பமும், இந்தியாவின் மென்பொருள் திறன்களும் ஒன்றிணைவது, செயற்கை நுண்ணறிவுத் துறைக்கு புதிய உத்வேகமும், வலிமையும் அளிக்கும்’ என்றாா் பிரதமா் மோடி.
சனே தகாய்ச்சியை தங்கை என்றழைத்த பிரதமா் மோடி
ஜப்பானின் முதல் பெண் பிரதமா் என்ற சிறப்புக்குரிய சனே தகாய்ச்சியை தனது தங்கை என்று குறிப்பிட்ட பிரதமா் மோடி, அவா் தொலைநோக்குப் பாா்வையும், மக்கள் செல்வாக்கும் மிக்க தலைவா் என்று புகழாரம் சூட்டினாா்.
பிரதமா் மோடி ஹிந்தியில் இவ்வாறு பேசியபோது, நிகழ்நேர அடிப்படையில் ஜப்பானிய மொழியில் அதன் மொழிபெயா்ப்பைக் கேட்டு, புன்னகைத்தாா் சனே தகாய்ச்சி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










