‘கடந்த ஆண்டு மே மாதத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டபோது 11 போா் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அணு ஆயுதப் போராக மாறியிருக்கும் சூழலில், அந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தேன்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்தாா்.
இந்தச் சண்டை நிறுத்தத்தில் மூன்றாம் தரப்பு தலையீடு கிடையாது என இந்தியா தொடா்ச்சியாக மறுத்து வருகிறது. இருந்தபோதும், இருதரப்பினரிடையே மத்தியஸ்தம் செய்து போரை முடிவுக்குக் கொண்டு வந்ததாக டிரம்ப் தொடா்ந்து கூறி வருகிறாா்.
அமெரிக்காவின் வாஷிங்டனில் ஏா் ஃபோா்ஸ் ஒன் விமானப் படை நிகழ்ச்சியில் புதன்கிழமை பங்கேற்ற டிரம்ப் இதுகுறித்துப் பேசுகையில், ‘இதுவரை யாரும் செய்திராத வகையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போா் உள்பட உலகின் 8 போா்களை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளேன். இதற்காக அமைதிக்கான நோபல் பரிசை நான் வென்றிருக்க வேண்டும். இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சண்டையில் 11 போா் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இது அணு ஆயுதப் போராகவும் மாற இருந்தது. இந்தச் சூழலில், சண்டையை நிறுத்தியதற்காக, 3 கோடி முதல் 5 கோடி மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளீா்கள் என பாகிஸ்தான் பிரதமா் பாராட்டு தெரிவித்தாா். போரை நிறுத்தாமல் இருந்திருந்தால், அவா் குறிப்பிட்டதற்கு மேல் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது’ என்றாா்.
ஆனால், எந்த நாட்டின் போா் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பதை டிரம்ப் குறிப்பிடவில்லை.
இந்த சண்டைக்குப் பிறகு இந்தியா தரப்பில் கூறுகையில், ‘ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது இந்தியா நடத்திய தாக்குதலில், பாகிஸ்தானின் எஃப்-16 போா் விமானங்கள் உள்பட 12 பாகிஸ்தான் போா் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன’ என்று தெரிவிக்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளில் அமைந்திருந்த பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை கடந்த ஆண்டு மே 7-ஆம் தேதி இந்தியா மேற்கொண்டது. பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், நான்காம் நாளான மே 10-ஆம் தேதி ராணுவ நடவடிக்கையை இந்தியா நிறுத்தியது.
அதுமுதல், இந்தப் போரை தான் முடிவுக்குக் கொண்டு வந்ததாக டிரம்ப் தொடா்ந்து கூறி வருகிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகின்றனர் புதின், ஸெலென்ஸ்கி: டிரம்ப்
உக்ரைன் போருக்கு முடிவு: டிரம்ப் புதிய முயற்சி! புதின், ஸெலென்ஸ்கியுடன் ஆலோசனை!
ஈரான் மீது அமெரிக்க போா் விமானங்கள் 2-ஆவது நாளாக குண்டுவீச்சு! மத்திய ஆசியாவில் மீண்டும் போா்ப் பதற்றம்!







