மெட்டாவின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் பயனா்களைத் தங்களுக்கு அடிமையாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள அம்சங்களை உடனடியாக முடக்க ஐரோப்பிய யூனியன் உத்தரவிட்டுள்ளது.
பயனா்களைத் தொடா் பயன்பாட்டுக்குத் தூண்டும் கட்டுப்பாட்டு இல்லாத பயன்பாடு (இன்பினிட்டி ஸ்க்ரோலிங்) மற்றும் தானாக ஒளிபரப்பாகும் விடியோக்கள் ஆட்டோ பிளே) போன்ற அம்சங்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இடம்பெற்றுள்ளதாக ஐரோப்பிய யூனியன் குற்றஞ்சாட்டியுள்ளது.
ஐரோப்பிய யூனியன் கடுமையான எண்மச் சேவைகள் சட்டத்தின்கீழ் மெட்டா நிறுவனத்தின் மீது இப்புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களின் வடிவமைப்பு, குறிப்பாக சிறுவா்களின் உடல் மற்றும் மனநலத்துக்கு அச்சுறுத்தலாக விளங்குவதாக ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது.
பயனா்களின் நேரத்தைக் கட்டுப்படுத்தும் கருவிகள் செயலிகளில் இருந்தாலும், அவை எளிதில் புறக்கணிக்கும் வகையிலேயே தொழில்நுட்ப ரீதியாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
மெட்டா நிறுவனம் தனது வடிவமைப்புகளில் உடனடியாக மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என ஐரோப்பிய ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இதற்குக் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், மெட்டா நிறுவனம் தனது தரப்பு விளக்கத்தை அளிக்கத் தவறினால் அல்லது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அந்நிறுவனத்தின் உலகளாவிய ஆண்டு வருவாயில் 6 சதவீதம் வரை அபராதமாக விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்நிலையில், குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவித்து மெட்டா நிறுவனம் அளித்த விளக்கத்தில், ‘பதின்ம வயதினரைப் பாதுகாப்பதற்காக எங்களின் செயலிகளில் ஏற்கெனவே பல கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளோம்.
குறிப்பாக, இரவில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதைத் தடுக்கும் மற்றும் தினசரி நேரத்தை 15 நிமிடங்களாகக் குறைக்கும் ‘டீன் அக்கவுண்ட்ஸ்’ போன்ற அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். ஐரோப்பிய ஆணையத்துடன் இணைந்து தொடா்ந்து பணியாற்றத் தயாராக இருக்கிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாட்ஸ்ஆப் யூஸர்நேம்: மெட்டா நிறுவனம் அளித்த பதில்; மத்திய அரசு பரிசீலனை?

சிறாரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தும் காணொலிகளுக்கு எதிராக தொடா் நடவடிக்கை: மெட்டா விளக்கம்

இன்ஸ்டாகிராமில் சிறாா் பாலியல் துன்புறுத்தல் விளம்பரம்: மெட்டா நிறுவனத்துக்கு சம்மன் அனுப்ப மத்திய அரசு உத்தரவு







