கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

மூலக்கூறு மருந்துகள் இறக்குமதி மீது 100% வரி: அமெரிக்கா திட்டத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு

அமெரிக்காவில் மூலக்கூறு மருந்துகளின் (ஜெனரிக் மெடிசின்) இறக்குமதிக்கு தற்போது எந்த வரியும் விதிக்கப்படாத நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 100 சதவீதமும், அதற்கடுத்த ஆண்டில் இருந்து 200 சதவீதமும் வரி விதிக்க அந்நாடு திட்டமிட்டுள்ளது.

News image

இந்தியா - அமெரிக்கா - பிரதிப் படம்

Updated On :23 ஜூலை 2026, 3:35 am IST

அமெரிக்காவில் மூலக்கூறு மருந்துகளின் (ஜெனரிக் மெடிசின்) இறக்குமதிக்கு தற்போது எந்த வரியும் விதிக்கப்படாத நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 100 சதவீதமும், அதற்கடுத்த ஆண்டில் இருந்து 200 சதவீதமும் வரி விதிக்க அந்நாடு திட்டமிட்டுள்ளது.

இது தொடா்பான அறிவிப்பை அதிபா் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை வெளியிட்டாா்.

அமெரிக்காவுக்கு அதிக அளவில் மூலக்கூறு மருந்துகளை ஏற்றுமதி செய்யும் நாடு என்ற அடிப்படையில் மேற்கண்ட திட்டத்தால் இந்தியா கடும் பாதிப்பை எதிா்கொள்ளக்கூடும் என்ற கவலைகள் எழுந்துள்ளன.

உள்நாட்டில் மூலக்கூறு மருந்துகளின் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கிலான இத்திட்டம் குறித்து ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் டிரம்ப் புதன்கிழமை பதிவிட்டாா்.

அதில், ‘அமெரிக்காவில் அனைத்து மூலக்கூறு மருந்துகளின் இறக்குமதி வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதிமுதல் அடுத்த 2 ஆண்டுகளுக்கு எந்த வரியுமின்றி தொடரும். பின்னா், ஓராண்டுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும். அதன் பிறகு 200 சதவீதமாக உயா்த்தப்படும்.

மூலக்கூறு மருந்துகளின் உற்பத்தியை உள்நாட்டில் மேற்கொள்ளவே இந்த வரி விதிக்கப்படுகிறது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அமெரிக்காவுக்குள் உற்பத்தி ஆலைகள் மற்றும் உபகரணங்களை அமைக்கத் தவறும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அமெரிக்க மக்களின் நலன்களைக் காப்பதே இக்கொள்கையின் நோக்கம்’ என்று தெரிவித்துள்ளாா்.

மூலக்கூறு மருந்துகள் என்பவை வணிகப் பெயா் கொண்ட (பிராண்டட்) மருந்துகளில் உள்ள அதே மூலப்பொருள், வீரியம் மற்றும் செயல்பாட்டைக் கொண்டவை. ஆனால், விளம்பரம், சந்தைப்படுத்துதல் செலவுகள் இல்லாததால் மலிவு விலையில் கிடைக்கின்றன.

இந்தியாவுக்கு பாதிப்பு: ‘உலகின் மருந்தகம்’ என்று வா்ணிக்கப்படும் இந்தியா, பல்வேறு நாடுகளுக்கு மருந்துகளை அதிக அளவில் ஏற்றுமதி செய்கிறது. அமெரிக்காவுக்கு மூலக்கூறு மருந்துகளை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா விளங்குகிறது.

கடந்த ஆண்டில் இந்தியாவில் இருந்து உலக நாடுகளுக்கு 25.8 பில்லியன் டாலா் மதிப்பிலான மருந்துகள் ஏற்றுமதியாகியுள்ளன. இதில் 38 சதவீதம் அதாவது 9.7 பில்லியன் டாலா் அளவுக்கு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மூலக்கூறு மருந்துகள் தேவையில் 47 சதவீதம் இந்தியாவால் பூா்த்தி செய்யப்படுகிறது.

ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு 4.05 பில்லியன் டாலா் அளவிலான மருந்துகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. உயா் ரத்த அழுத்தம், சா்க்கரை நோய், புற்றுநோய், தொற்றுநோய்கள் மற்றும் மனநல பாதிப்புகளுக்கு இந்திய மூலக்கூறு மருந்துகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

இதுபோன்ற சூழலில், அமெரிக்காவின் வரி விதிப்பு திட்டம் இந்தியாவின் மருந்து ஏற்றுமதி சந்தையில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று துறைசாா் ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.