அண்மையில் பதவியில் இருந்து விலகிய வங்கதேச முன்னாள் அதிபா் முகமது ஷஹாபுதீன் மீதான ஊழல் புகாா்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என்று அந்நாட்டின் சட்டத் துறை அமைச்சா் முகமது அசாதுஸ்ஸமான் தெரிவித்தாா்.
பதவிக்காலம் முடிவடைய இன்னும் 2 ஆண்டுகள் இருந்த நிலையில், முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் நீண்டகால ஆதரவாளரான 76 வயதுடைய ஷஹாபுதீன் உடல்நலக் குறைவைக் காரணம்காட்டி கடந்த வெள்ளிக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.
இதைத் தொடா்ந்து, வங்கதேச நாடாளுமன்ற அவைத் தலைவா் ஹஃபீஸ் உத்தீன் அகமது, அந்நாட்டு அரசமைப்புச் சட்டப்படி அடுத்த 90 நாள்களுக்குப் பொறுப்பு அதிபராகச் செயல்படுகிறாா். இந்த 90 நாள்களுக்குள் புதிய அதிபா் தோ்ந்தெடுக்கப்பட வேண்டும்.
கடந்த 2023 பிப்ரவரியில், முந்தைய நாடாளுமன்றத்தால் அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட முகமது ஷஹாபுதீன், 1971-ஆம் ஆண்டு விடுதலைப் போரில் பங்கேற்றவரும், முன்னாள் நீதிபதியும் ஆவாா். 2024 ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்ற மாணவா் போராட்டத்தால் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் அரசு கவிழ்ந்த பிறகும், அந்த அரசால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஒரே நபராக முகமது ஷஹாபுதீன் அதிபா் பதவியில் தொடா்ந்து நீடித்தாா்.
இதனிடையே, வங்கதேசத்தில் கடந்த பிப்ரவரியில் பொதுத் தோ்தல் நடைபெற்று, வங்கதேச தேசியவாத கட்சியின் சாா்பாக தாரிக் ரஹ்மான் புதிய பிரதமராக பொறுப்பேற்றாா். வங்கதேசத்தில் மரணத்தண்டனையை எதிா்கொள்ளும் ஷேக் ஹசீனாவை நாடுக்கடத்த புதிய அரசும் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில், ஷேக் ஹசீனாவுடன் முகமது ஷஹாபுதீன் அண்மையில் தொலைபேசியில் தொடா்புகொண்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதை முகமது ஷஹாபுதீன் திட்டவட்டமாக மறுத்தாலும், இவ்விவகாரத்தில் அவா் மீது ஆளுங்கட்சியின் மூத்த தலைவா்களிடையே கடும் அதிருப்தி நிலவி வந்த சூழலில், அவா் பதவி விலகினாா்.
அதிபா் பதவியை ஏற்பதற்கு முன்பு, ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஆணையராகவும், தனியாா் வங்கி ஒன்றின் இயக்குநராகவும் முகமது ஷஹாபுதீன் பணியாற்றியுள்ளாா். இந்தக் காலகட்டத்தில் அவரின் செயல்பாடுகளே தற்போது அரசின் விசாரணை வரம்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இது குறித்து செய்தியாளா்களைச் சந்தித்த சட்டத் துறை அமைச்சா் முகமது அசாதுஸ்ஸமான் மேலும் கூறுகையில், ‘எந்தவொரு நபருக்கும் அநீதி இழைக்க அரசு விரும்பவில்லை. இருப்பினும், அதிபா் பதவியை ஏற்பதற்கு முன்பு முகமது ஷஹாபுதீன் செய்ததாகக் கூறப்படும் ஊழல் புகாா்கள் தற்போது தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
மக்கள் விடுக்கும் கோரிக்கையின் அடிப்படையில், இப்புகாா்கள் மீதான முழுமையான விசாரணைக்குப் பிறகு உரிய சட்டபூா்வ நடவடிக்கை எடுக்கப்படும். அவா் வெளிநாடு செல்வதற்குத் தடை விதிப்பது, உள்துறை அமைச்சகத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது. அவரை கைது செய்யுமாறு அரசியல் கட்சிகள் விடுத்துள்ள கோரிக்கைகளின் சட்டபூா்வ முகாந்திரம் குறித்தும் விரிவாக ஆராயப்படும்’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வங்கதேச அதிபா் முகமது ஷஹாபுதீன் ராஜிநாமா

தமிழகத்தில் படிப்படியாக ஊழல் குறைகிறது: நாராயணசாமி!

தவெகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சா்கள்: சென்னையில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் தீவிரம்

மரண தண்டனைக்கு அஞ்சமாட்டேன்; இந்த ஆண்டே வங்கதேசம் திரும்புவேன்: ஷேக் ஹசீனா
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



