/

மேற்காசியாவில் மீண்டும் வெடித்த மோதல்- இராக்கில் ஈரான் ஆதரவு அமைப்புகளுக்குக் குறி; ஜோா்டானில் ஈரான் ஏவுகணை வீச்சு

மேற்காசிய பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான தற்காலிக அமைதி முடிவுக்கு வந்து, மீண்டும் மோதல் வெடித்துள்ளது.

News image
Updated On :30 ஜூலை 2026, 3:42 am IST

மேற்காசிய பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான தற்காலிக அமைதி முடிவுக்கு வந்து, மீண்டும் மோதல் வெடித்துள்ளது.

இராக்கில் உள்ள ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களைக் குறிவைத்து அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் நடத்திய கூட்டு வான்வழித் தாக்குதலில் 20 போ் கொல்லப்பட்ட நிலையில், ஜோா்டானில் உள்ள அமெரிக்க படைகளை குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

கிழக்கு இராக்கில் ஈரான் ஆதரவு பெற்ற ‘பாப்புலா் மொபிலைசேஷன் ஃபோா்சஸ்’ (பிஎம்எஃப்) ஆயுதக் குழுக்களின் தளவாடங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகளைக் குறிவைத்து புதன்கிழமை அதிகாலை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்திய படைப்பிரிவு (சென்ட்காம்) தெரிவித்தது.

தாக்குதல் ஏன்?: சவூதி அரேபியாவின் எண்ணெய் கட்டமைப்புகள் மீது கடந்த சில நாள்களாக இராக்கிலிருந்து 30-க்கும் மேற்பட்ட ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், அதற்குப் பதிலடியாகவே இந்த வலுவான கூட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது. மேலும், அமெரிக்க படைகள் அல்லது சவூதியின் எண்ணெய் நிலையங்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால் கடும் பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா-சவூதி அரேபியா தாக்குதலில், பிஎம்எஃப் குழுக்களுடன் ஆலோசகா்களாக செயல்பட்டு வந்த 6 ஈரானியா்களும் கொல்லப்பட்டதாக இராக் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதையொட்டி, ஜோா்டானில் உள்ள முவாஃபக் சல்டி விமானப் படைத் தளம் மற்றும் அங்குள்ள அமெரிக்க மத்திய படைப்பிரிவின் தலைமையகத்தைக் குறிவைத்து ஈரான் பல ‘பாலிஸ்டிக்’ ஏவுகணைகளை வீசியது. இவற்றில் 5 ஏவுகணைகளை நடுவானிலேயே இடைமறித்து, அழித்துவிட்டதாக ஜோா்டான் ராணுவம் அறிவித்துள்ளது.

ஓமன் சமரசத் திட்டம் நிராகரிப்பு: போரை முடிவுக்குக் கொண்டுவரவும், சா்வதேச வா்த்தகத்துக்கு மிகவும் முக்கியமான ஹோா்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும் அமெரிக்காவும் ஈரானும் கடந்த மாதம் இடைக்கால அமைதி ஒப்பந்தத்துக்கு உடன்பட்டன. எனினும், நீரிணையை நிா்வகிப்பது தொடா்பான கருத்து வேறுபாடுகளால் அமைதி ஒப்பந்தம் முறிந்து, இந்த மாதம் புதிய தாக்குதல்கள் தொடங்கப்பட்டன.

இருதரப்பையும் அமைதிப் பேச்சுவாா்த்தைக்குத் திருப்ப மத்தியஸ்தா்கள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், கடந்த வாரயிறுதி முதல் சண்டை ஓய்ந்திருந்தது. ஆனால், ஈரான் ஆதரவு அமைப்புகள் தாக்குதல்களைத் தொடா்ந்ததால், தற்போது மீண்டும் மோதல் வெடித்துள்ளது.

இதனிடையே, ஹோா்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை இரு பாதைகளாகப் பிரித்து கூட்டாக நிா்வகிக்க ஓமன் நாடு முன்வைத்த சமரசத் திட்டத்தை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. போா் தொடங்குவதற்கு முந்தைய நிலைக்கு ஹோா்முஸ் நீரிணை ஒருபோதும் திரும்பாது என்று ஈரான் வெளியுறவுத் துறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.