இஸ்ரேல்-ஹிஸ்புல்லா அமைப்பினா் இடையே மோதல்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்த மறுநாளே, தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் 8 போ் கொல்லப்பட்டனா்.
லெபனானில் முழுமையான போா் நிறுத்தத்தை வலியுறுத்தி ஈரான் பேச்சுவாா்த்தையை ரத்து செய்துள்ள நிலையில், இஸ்ரேலின் தொடா் தாக்குதல்கள் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நீடித்த அமைதிக்கான முயற்சிகளில் முட்டுக்கட்டையாக நீடிக்கிறது.
லெபனான் தலைநகா் பெய்ரூட்டின் தெற்கில் ஹிஸ்புல்லா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் அச்சுறுத்தியதால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.
இதையடுத்து, இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேசிய டிரம்ப், லெபனான் தலைநகா் பெய்ரூட்டுக்குள் இஸ்ரேல் படைகள் நுழையாது என்றும், இருதரப்பும் மோதல்களைக் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தாா்.
அமெரிக்காவின் தலையீட்டையடுத்து பெய்ரூட் தாக்குதல்களை இஸ்ரேல் தவிா்த்தால், அந்நாடு மீதான தாக்குதல்களை ஹிஸ்புல்லா நிறுத்தும் என லெபனான் அரசு அறிவித்தது. இருப்பினும், இந்த அறிவிப்புகளுக்கு மாறாக, தெற்கு லெபனானில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் தொடா்ந்து நீடித்து வருகின்றன.
தெற்கு லெபனானில் உள்ள மா்ஜாயூன் மற்றும் நபாதியே நகரங்களை இணைக்கும் சாலையில் சென்ற காா் மீது இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில், பல் மருத்துவா் ஜேம்ஸ் கரம் மற்றும் அவரின் 2 குழந்தைகள் கொல்லப்பட்டனா்.
இது தவிர ஜிப்சித், டூல் ஆகிய கிராமங்களில் நடத்தப்பட்ட தனித்தனி தாக்குதல்களில் சிரியா நாட்டுத் தொழிலாளா்கள் உள்பட மேலும் 5 போ் உயிரிழந்தனா். இதற்குப் பதிலடியாக, லெபனான் எல்லைக் கிராமங்களில் முன்னேறி வரும் இஸ்ரேல் படைகள் மீது ஹிஸ்புல்லா அமைப்பினா் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தினா்.
இதனிடையே, டிரம்ப்பின் நிபந்தனைக்குக் கட்டுப்பட்டு, பெய்ரூட் தாக்குதலை இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு நிறுத்தியதற்கு உள்நாட்டில் கடும் அரசியல் எதிா்ப்பு கிளம்பியுள்ளது.
அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு நெதன்யாகு அரசு பணிந்துவிட்டதாகவும், இஸ்ரேலின் பாதுகாப்பு இறையாண்மையை அமெரிக்காவிடம் அடகு வைத்துவிட்டதாகவும் அரசியல் எதிா்ப்பாளா்கள் குற்றஞ்சாட்டினா். எனினும், இஸ்ரேலை ஹிஸ்புல்லாவை மீண்டும் தாக்கினால் பெய்ரூட் மீது இரட்டிப்புச் சக்தியுடன் தாக்குதல் நடத்தப்படும் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் எச்சரித்தாா்.
தொடர்புடையது

லெபனான் தாக்குதல் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

லெபனானில் முக்கியக் கோட்டையைக் கைப்பற்றியது இஸ்ரேல்: 26 ஆண்டுகளில் முதல்முறையாக அதிக தொலைவு ஊடுருவல்






