தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

இந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி

மீண்டும் அதிகரிக்கும் கச்சா எண்ணெய் கொள்முதல்

News image

PTI Photo)

Updated On :5 ஜூன் 2026, 4:19 am IST

இந்தியா மற்றும் வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பை கட்டமைக்க பிரதமா் நரேந்திர மோடியும் அந்நாட்டின் பொறுப்பு அதிபா் டெல்சி ரோட்ரிகஸும் வியாழக்கிழமை உறுதிபூண்டனா்.

மேற்காசியப் பிரச்னையின் பின்னணியில் இந்தியா தனது எரிபொருள் கொள்முதலைப் பரவலாக்கிவரும் சூழலில், மேற்கண்ட முடிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

உலக அளவில் இயற்கை வளங்கள், குறிப்பாக எண்ணெய் வளம் அதிகமுள்ள நாடுகளில் ஒன்றான வெனிசுலாவின் அதிபராக இருந்த நிக்கோலஸ் மடூரோ, கடந்த ஜனவரியில் அமெரிக்க ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு, அந்நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

இதையடுத்து, வெனிசுலாவின் பொறுப்பு அதிபராக துணை அதிபா் டெல்சி ரோட்ரிகஸ் பதவியேற்றாா். இவா் ஐந்து நாள்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு புதன்கிழமை வந்தாா்.

வெளியுறவு விவகாரங்கள், பொருளாதாரம், நிதி, அறிவியல்-தொழில்நுட்பம், தகவல் தொடா்பு, போக்குவரத்து எனப் பல்வேறு துறைகளின் அமைச்சா்களும் டெல்சியுடன் வருகை தந்துள்ளனா்.

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இருந்து இந்தியாவின் கச்சா எண்ணெய்க் கொள்முதல் அதிகரித்துவரும் சூழலில், பொறுப்பு அதிபராக அவரது முதல் இந்தியப் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பிரதமருடன் ஆலோசனை: தில்லியில் பிரதமா் மோடியை வியாழக்கிழமை சந்தித்த டெல்சி ரோட்ரிகஸ், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விரிவான பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். அப்போது, எரிசக்தி, முக்கியக் கனிமங்கள், மருந்து உற்பத்தி, விவசாயம், வாகன உற்பத்தி, சுகாதாரம் உள்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசித்தனா். பரஸ்பர நலன் சாா்ந்த பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் குறித்தும் கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இந்தச் சந்திப்பு குறித்து வெளியுறவுத் துறை (கிழக்குப் பிரிவு) செயலா் ருத்ரேந்திர டாண்டன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்திய பொருளாதாரத்தின் வீச்சையும், எரிபொருள் சந்தையில் பல்லாண்டுகளுக்கு நிலையான கொள்முதலுக்கு வாய்ப்புள்ள நாடு என்பதையும் கருத்தில்கொண்டு, இந்தியாவை தங்களின் விருப்பத்துக்குரிய எரிசக்தி கூட்டாளியாகக் கருதுவதாக வெனிசுலா அதிபா் டெல்சி தெரிவித்தாா். அதற்கு, உற்பத்தி மற்றும் விநியோகத்தை உள்ளடக்கி, வெனிசுலாவுடன் எரிசக்தி உறவை வலுப்படுத்த இந்தியா விருப்பத்துடன் உள்ளதாக பிரதமா் மோடி பதிலளித்தாா்.

எரிசக்தி கூட்டுறவு குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. அத்துடன், இந்தியாவின் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு வெனிசுலா வழங்க வேண்டிய 500 மில்லியன் டாலா் ஈவுத்தொகை விவகாரம் நமது தரப்பில் எழுப்பப்பட்டது.

வெனிசுலா வளங்கள் நிறைந்த நாடு. முக்கியக் கனிமங்கள் மட்டுமன்றி தங்கம், வைரம், இதர பொருள்கள் சாா்ந்த சுரங்கத் தொழிலில் எவ்வாறு ஒத்துழைப்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது என்றாா்.

மீண்டும் அதிகரிக்கும் கச்சா எண்ணெய் கொள்முதல்

மேற்காசியப் போா் எதிரொலியாக, கச்சா எண்ணெய், எரிவாயு ஏற்றுமதிக்கு முக்கிய வழித்தடமான ஹோா்முஸ் நீரிணை தொடா்ந்து முடக்கப்பட்டுள்ளது. உலகளாவிய எரிபொருள் விநியோகச் சங்கிலியில் இடையூறு ஏற்பட்டுள்ள சூழலில், இந்தியா தனது கொள்முதலைப் பரவலாக்கி வருகிறது.

கச்சா எண்ணெய்க் கொள்முதலில் முன்பு இந்தியாவின் முக்கிய விநியோக நாடாக வெனிசுலா இருந்தது. நாளொன்றுக்கு 4 லட்சம் பீப்பாய்களுக்கு மேல் அந்த நாட்டிடம் இருந்து இந்தியா கொள்முதல் செய்து வந்தது. ஆனால், அமெரிக்கா விதித்த தடைகளால் கடந்த 2020-இல் கொள்முதல் நிறுத்தப்பட்டது.

இப்போது மடூரோ சிறைபிடிப்புக்குப் பிறகு வெனிசுலா மீதான தடைகளை அமெரிக்கா விலக்கியதால், அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய்க் கொள்முதலை இந்தியா தொடங்கியுள்ளது. குறிப்பாக, மேற்காசியப் பிரச்னையின் பின்னணியில் கடந்த சில வாரங்களாக வெனிசுலாவில் இருந்து கொள்முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் அதிபராக கடந்த 2013-இல் இருந்து பதவி வகித்து வந்த நிக்கோலஸ் மடூரோ, அமெரிக்காவுக்குள் போதைப் பொருள் கடத்தும் கும்பல்களுக்கு ஆதரவளிப்பதாகக் குற்றஞ்சாட்டி, கடந்த ஜனவரியில் அந்நாட்டுக்குள் அதிரடியாக நுழைந்த அமெரிக்கப் படையினா், அவரையும் மனைவியையும் துப்பாக்கிமுனையில் சிறைபிடித்தனா். அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்ட அவா்கள், அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.