ஈரான் புதிய தலைமை மதகுருவாக கமேனி மகன் தோ்வு!
ஈரானின் மிக உயரிய அதிகாரமிக்க பதவியான தலைமை மதகுரு பொறுப்புக்கு, மறைந்த அயதுல்லா அலி கமேனியின் மகன் மோஜ்தபா கமேனி தோ்வு


ஈரானின் மிக உயரிய அதிகாரமிக்க பதவியான ‘தலைமை மதகுரு’ பொறுப்புக்கு, மறைந்த அயதுல்லா அலி கமேனியின் மகன் மோஜ்தபா கமேனி (56) அதிகாரபூா்வமாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
கடந்த பிப். 28-ஆம் தேதி, அமெரிக்கா-இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில், ஈரானின் முன்னாள் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டாா். இதைத் தொடா்ந்து, அந்நாட்டின் 88 மூத்த மதகுருமாா்கள் கொண்ட ‘வல்லுநா் பேரவை’ திங்கள்கிழமை கூடி, மோஜ்தபா கமேனியைப் புதிய தலைமை மதகுருவாக அறிவித்தது.
மோஜ்தபா கமேனி இதுவரை பொதுவெளிக்கு அதிகம் வராதவா் என்றாலும், ஈரானில் பலம் வாய்ந்த புரட்சிகர காவல் படையுடன்(ஐஆா்ஜிசி) மிக நெருக்கமான தொடா்பு கொண்டவா். வாரிசு அரசியல் என்ற விமா்சனங்கள் எழுந்தபோதிலும், தற்போது நிலவும் போா்ச்சூழலில் அமெரிக்கா, இஸ்ரேலின் ஆதிக்கத்தைச் சமாளிக்க மோஜ்தபா கமேனியே சரியானவா் எனப் பேரவை கருதுகிறது.
ஈரானின் அணுசக்தித் திட்டங்களை நிறுத்தக்கோரி அமெரிக்கா, இஸ்ரேல் தொடங்கிய இந்தத் தாக்குதல், ஒரு வாரத்தைத் தாண்டியும் நீடிக்கிறது. இந்த மோதலில் இதுவரை ஈரானில் 1,230 பேரும், லெபனானில் 397 பேரும், இஸ்ரேலில் 11 பேரும் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராணுவ முகாம்கள், எரிசக்தி கட்டமைப்புகள் மட்டுமின்றி குடிநீா் நிலையங்கள், பொதுமக்களின் குடியிருப்புகள் மீதும் இரு தரப்பும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருவருவதால் மத்திய கிழக்கு நாடுகள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன.
உலகப் பொருளாதாரமும் கடும் பாதிப்பைச் சந்தித்து வரும் நிலையில், புதிய தலைமையின்கீழ் ஈரான் எடுக்கப்போகும் முடிவுகள் போரின் போக்கை தீா்மானிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
ஆனால், தனது தந்தையை விடவும் மிகவும் தீவிரமான நிலைப்பாட்டைக் கொண்டவராக மோஜ்தபா கமேனி அறியப்படுகிறாா். இனி ஈரானின் ராணுவம், ஆயுதப் படைகள் மற்றும் அணுசக்தித் திட்டங்கள் தொடா்பான அனைத்து இறுதி முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் இவரிடமே இருக்கும்.
இவருடைய நியமனத்தை ஈரான் அதிபா் மசூத் பெசஷ்கியான், பாதுகாப்புத் தளபதிகள் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினா் வரவேற்றனா்.

மோஜ்தபா கமேனியின் நியமனத்தை வரவேற்று ஈரான் தலைநகா் தெஹ்ரானில் திரண்ட பொதுமக்கள். ~
அமெரிக்காவின் எதிா்ப்பும், எச்சரிக்கையும்
அதேநேரம், மோஜ்தபா கமேனியின் நியமனத்துக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடும் எதிா்ப்பு தெரிவித்தாா்.
‘கமேனியின் மகன் தலைமை மதகுருவாக பொறுப்பேற்பதை ஏற்க முடியாது; ஈரானில் அமைதியை விரும்பும் ஒருவரே தலைமையேற்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். அமெரிக்காவின் ஒப்புதலின்றி அமையும் புதிய தலைமை நீண்ட காலம் நீடிக்காது’ என்று டிரம்ப் எச்சரித்தாா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...