ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?

கமேனி கொலை செய்யப்பட்டது முதல் 10வது நாளில் ஈரான் போர் தொடர்கிறது..

News image
கொல்லப்பட்ட தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி.- DNS
Updated On :9 மார்ச் 2026, 4:57 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்க கூட்டுப் படைகள் ஒரு வாரத்துக்கும் மேலாக தொடா் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், இதுவரை 1,230 பேர் ஈரானில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெபனானில் 397 பேரும், இஸ்ரேலில் 11 பேரும், அமெரிக்கர்கள் 7 பேரும் போர் தொடங்கிய பிறகு பலியாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

லெபனானில், கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் வாழ்விடங்களிலிருந்து குடிபெயர்ந்துள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கக் கூடும் என கூறப்படுகிறது.

இஸ்ரேலில் தெற்கு லெபனானின் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து மக்களை வெளியேறுமாறு எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது. இவர்கள் தற்போது பள்ளிகள், திறந்தவெளிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்த போரைத் தாண்டியும் மனிதாபிமான உதவிகளும் பொருளாதார பாதிப்புகளும்தான் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.

அமெரிக்க - இஸ்ரேல் படைகள் கூட்டாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஈரானும் ஏவுகணைகள் மூலமும், ட்ரோன்கள் மூலம் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதலில், வளைகுடா நாடுகளில் இருக்கும் அமெரிக்க ராணுவத்துக்குச் சொந்தமான ரேடாா்கள், வான் பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்டவை பலத்த சேதமடைந்துள்ளன.

மறுபக்கம், அமெரிக்க ரேடாா்கள், வான் பாதுகாப்பு அமைப்பு குறித்து செயற்கைக்கோள் மூலம் திரட்டப்படும் தகவலை ஈரானுக்கு ரஷியாதான் வழங்கி வருவதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே, ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டதால் கச்சா எண்ணெய்யை வளைகுடா நாடுகளில் இருந்து எடுத்துச் செல்லும் எண்ணெய்க் கப்பல்கள் நடுக்கடலில் நிற்கின்றன. இதனால் உலகின் பல நாடுகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதைச் சுட்டிக்காட்டி, எண்ணெய் விலையைக் குறைக்க நடவடிக்கை எதுவும் எடுப்பீா்களா என டிரம்ப்பிடம் கேட்டதற்கு ‘ஏதேனும் எடுக்க வேண்டிய நடவடிக்கை இருந்தால், நிச்சயம் எடுப்பேன். அமெரிக்காவிடம் ஏராளமான கச்சா எண்ணெய் இருக்கிறது; ஏராளமான பணமும் இருக்கிறது. அவை பாதிப்பை விரைவில் சரி செய்துவிடும் என்று பதிலளித்திருந்தார்.

போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்துப் பேசுகையில், ஈரானுடனான எங்களின் மோதல் முடிந்துவிடவில்லை. தற்போதைய ஈரானிய தலைவா்களுடன் அமெரிக்கா பேச்சுவாா்த்தை நடத்தாது’ என்று பதிலளித்திருந்தார்.

முதல் நாள்.. ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மீது சனிக்கிழமை (பிப். 28) இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலால், அந்நகரத்தின் வானம் முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ள விடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனியின் அலுவலகத்தின் அருகில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருந்தது.

இரண்டாவது நாளில்.. இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதற்கு ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஈரான் ஏவியது. ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள முக்கிய பகுதிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலால், இஸ்ரேன் மற்றும் ஈரானின் வான்வழிப் பாதைகளை மூடப்பட்டன.

மூன்றாவது நாளில்.. ஈரான் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். ஈரான் மீது அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுப் படைகள் அதிரடித் தாக்குதலை சனிக்கிழமை தொடங்கின. முதல் தாக்குதல், ஈரான் தலைமை மத குரு அயதுல்லா அலி கமேனி அலுவலகம் அருகே நடத்தப்பட்ட நிலையில் அவர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்காவது நாள்.. அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டாக நடத்திய அதிரடித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவரான தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி (86) கொல்லப்பட்டாா். அவரது கொலைக்குப் பழிதீா்க்க இதுவரை இல்லாத அளவில் தீவிர பதிலடி தாக்குதலைத் தொடுப்போம் என்று ஈரான் சூளுரைத்தது.

ஐந்தாவது நாள்.. இலங்கை கடல்பகுதி அருகில் ஈரானின் போர்க் கப்பலின் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் 101 மாலுமிகள் மாயமாகினர்.

ஆறாவது நாளில்.. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல்களால் ஈரானில் இதுவரை 1,046 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழாவது நாளில்.. மத்திய கிழக்கில் உள்ள தங்களது சில ராணுவத் தளங்களை அமெரிக்க போர் விமானங்கள் பயன்படுத்த பிரான்ஸ் அரசு அனுமதியளித்துள்ளது.

எட்டாவது நாளில்.. ஈரான் நாட்டின் உச்ச தலைவர், தலைமை மதகுரு அலி கமேனியை, இஸ்ரேல் படை, ப்ளூ ஸ்பேரோ எனப்படும் ஏவுகணையைக் கொண்டுத் தாக்கிக் கொன்றது பற்றிய தகவல்கள் கசிந்துள்ளன.

ஒன்பதாவது நாள்.. ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரான் மீது 80 போர் விமானங்கள் மூலம் புதிய அலையாகத் தாக்குதல் நடத்தியதாக, இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது.

பத்தாவது நாளில், ஈரானின் புதிய உச்ச தலைவராக மறைந்த கமேனியின் மகன் மோஜ்தபா அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்கா, இஸ்ரேலின் மிரட்டலுக்கு மத்தியில், ஈரானின் மதகுருமார்களைக் கொண்ட நிபுணர்கள் அவை அடுத்த உச்சத் தலைவரை தேர்வு செய்து அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.