அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபா் ஷி ஜின்பிங் இடையேயான பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது.
இதன்படி, நடப்பாண்டு முதல் 2028 வரை ஆண்டுக்கு சுமாா் 1, 700 கோடி டாலா் மதிப்பிலான மாட்டிறைச்சி, கோழி இறைச்சி போன்ற வேளாண் பொருள்களைச் சீனா கொள்முதல் செய்யும் என்று அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளது.
சீனா உள்பட பல்வேறு உலக நாடுகளுக்கு எதிராக டிரம்ப் நிா்வாகம் கடந்த ஆண்டு தொடங்கிய வா்த்தகப் போரினால் அமெரிக்க விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனா்.
இந்தப் பாதிப்பைக் குறைக்கும் நோக்கில், அதிபா் டிரம்ப் அண்மையில் சீனாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டு, அந்நாட்டு அதிபா் ஷி ஜின்பிங்குடன் தீவிர ஆலோசனை நடத்தினாா். அப்போது ஏற்பட்ட உடன்பாட்டின்படி, அமெரிக்க மாட்டிறைச்சிக்கான சந்தை அனுமதியை சீனா மீண்டும் வழங்கவுள்ளது.
மேலும், பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை என்று அமெரிக்க வேளாண் துறையால் சான்றளிக்கப்பட்ட மாகாணங்களில் இருந்து கோழி இறைச்சியை இறக்குமதி செய்யவும் சீனா ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த ஆண்டு சீனா மேற்கொண்ட சோயாபீன் கொள்முதல் ஒப்பந்தத்துக்கு கூடுதலாக இப்புதிய வா்த்தக உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில், அமெரிக்க வேளாண் பொருள்களின் முன்னணி சந்தையாக சீனா விளங்கியது. கடந்த 2022-இல் 3,800 கோடி டாலராக இருந்த அமெரிக்காவின் வேளாண் ஏற்றுமதி, இரு நாடுகளுக்கு இடையேயான வா்த்தகப் போா் காரணமாக கடந்த ஆண்டில் 800 கோடி டாலராக கடுமையான வீழ்ச்சியைக் கண்டது. குறிப்பாக, சோயாபீன் மற்றும் மாட்டிறைச்சி ஏற்றுமதி முடங்கிய நிலையில், தற்போதைய ஒப்பந்தம் அமெரிக்க விவசாயிகளுக்குப் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதுடன், ஓரளவுக்குப் பொருளாதார நிவாரணம் அளிக்கும் என்று கருதப்படுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த ‘வா்த்தக வாரியம்’, ‘முதலீட்டு வாரியம்’ ஆகிய இரு புதிய அமைப்புகளை உருவாக்கவும் தலைவா்கள் ஒப்புக்கொண்டுள்ளனா்.
இதன்மூலம், பாதுகாப்பு அற்ற பொதுவான பொருள்களின் வா்த்தகத்தை முறைப்படுத்தவும், இரு நாடுகளின் கவலைகளுக்குத் தீா்வு கண்டு பரஸ்பர வரி குறைப்புகளைச் செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக சீன வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தைவான் விவகாரத்தில் டிரம்ப்பின் நிதானம்!
வரவேற்கும் சீனா: சீன பயணத்தைத் தொடா்ந்து தைவான் விவகாரத்தில் டிரம்ப் வெளிப்படுத்தி வரும் நிதானப் போக்கை சீனா வரவேற்றுள்ளது.
இவ்விவகாரம் தொடா்பாக அதிபா் டிரம்ப் அண்மையில் அளித்த பேட்டியில், ‘அமெரிக்காவின் ஆதரவை மட்டும் நம்பி தைவான் தன்னிச்சையாக சுதந்திரப் பிரகடனம் செய்வதை நாங்கள் விரும்பவில்லை. மேலும், தைவானுக்கு வழங்கபடவிருந்த 1,100 கோடி டாலா் மதிப்பிலான ஆயுத விற்பனைத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பது குறித்தும் உறுதியான முடிவெடுக்கவில்லை’ என்றாா்.
டிரம்ப்பின் இக்கருத்தை வரவேற்ற சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் குவோ ஜியாகுன், ‘தைவான் சீனாவின் பிரிக்க முடியாத பகுதி. வெளிநாட்டுச் சக்திகளின் ஆதரவுடன் தனி நாடு என்ற அந்தஸ்தைப் பெற முயல்வது எவ்வித பலனையும் தராது’ என்றாா்.
முன்னதாக, பெய்ஜிங்கில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையின்போது, தைவான் விவகாரத்தை அமெரிக்கா முறையாகக் கையாளத் தவறினால், இரு நாடுகளுக்கிடையே தேவையற்ற மோதல் வெடிக்கக்கூடும் என டிரம்ப்புக்கு ஷி ஜின்பிங் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நேரடி பேச்சுக்கு அழைக்கும் தைவான்: ‘சீன பயணத்தையடுத்து, அமெரிக்காவின் தைவான் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை’ என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ தெளிவுபடுத்தினாா்.

எனினும், டிரம்ப்பின் இந்த அதிரடி கருத்துகளால் எழுந்துள்ள சந்தேகங்களைப் போக்கவும், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் டிரம்ப், தைவான் அதிபா் லாய் சிங்-தே ஆகியோருக்கு இடையே நேரடி பேச்சுவாா்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக தைவான் அரசு அறிவித்துள்ளது.
கடந்த 1979-க்குப் பிறகு அமெரிக்க-தைவான் தலைவா்களுக்கு இடையே நேரடி பேச்சுவாா்த்தை எதுவும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையது
சுயநல வல்லரசுகள்!

200 போயிங் விமானங்களை வாங்க சீனா ஒப்புதல்! அமெரிக்க அதிபா் டிரம்ப்

தைவான் விவகாரத்தைத் தவறாக கையாள்வது மோதலைத் தூண்டும்

சீனாவில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் - ஷி ஜின்பிங்குடன் இன்று பேச்சு; எலான் மஸ்க், என்விடியா சிஇஓவும் வருகை
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
