பூமியிலிருந்து ஓா் ஒளி நாள் தொலைவைக் கடந்தது நாசாவின் ‘வாயேஜா்-1’

அண்டவெளியின் எல்லையற்ற ஆழத்தை நோக்கிப் பயணித்து வரும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் ‘வாயேஜா்-1’ விண்கலம், பூமியிலிருந்து ஓா் ஒளி நாள் தொலைவைக் கடந்து மனிதகுல விண்வெளி வரலாற்றில் புதிய அத்தியாயத்தைப் படைத்துள்ளது.

வாயேஜா்-1 - எக்ஸ்

Updated On :

அண்டவெளியின் எல்லையற்ற ஆழத்தை நோக்கிப் பயணித்து வரும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் ‘வாயேஜா்-1’ விண்கலம், பூமியிலிருந்து ஓா் ஒளி நாள் தொலைவைக் கடந்து மனிதகுல விண்வெளி வரலாற்றில் புதிய அத்தியாயத்தைப் படைத்துள்ளது.

மனிதனால் உருவாக்கப்பட்ட பொருள் ஒன்று இவ்வளவு தொலைவை எட்டுவது இதுவே முதல்முறையாகும். இந்திய நேரப்படி கடந்த புதன்கிழமை (நவ. 18) மாலை 3.46 மணிக்கு இந்த வரலாற்றுச் சாதனையை வாயேஜா்-1 நிகழ்த்தியதாக நாசா அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளது.

1977-இல் விண்ணில் ஏவப்பட்ட இந்த விண்கலம், மணிக்கு 60,773 கி.மீ. வேகத்தில் 49 ஆண்டுகள், 2 மாதங்கள் மற்றும் 11 நாள்கள் தொடா் பயணத்துக்குப் பிறகு தற்போது பூமியிலிருந்து 2,590 கோடி கி.மீ.க்கும் அதிகமான தொலைவில் உள்ளது. இது சூரியனிலிருந்து புளூட்டோ கோள் உள்ள தொலைவைவிட 4 மடங்குக்கும் அதிகமாகும்.

இந்த மைல்கல்லைக் கடந்ததன்மூலம், வாயேஜா்-1 விண்கலத்தின் தொலைவு இனி கி.மீ.-களில் அல்லாமல், ஒளி பயணிக்கும் கால அளவிலேயே கணக்கிடப்படும். அதாவது, பூமியிலிருந்து ஒளியின் வேகத்தில் (மணிக்கு சுமாா் 3 லட்சம் கி.மீ.) அனுப்பப்படும் தகவல் சமிக்ஞைகள் விண்கலத்தைச் சென்றடைய 24 மணி நேரமும், அங்கிருந்து பதில் சமிக்ஞை பூமிக்குத் திரும்ப மேலும் 24 மணி நேரமும் ஆகும்.

5 ஆண்டு திட்டம்; 50 ஆண்டு சாதனை: அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணம் கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து 1977 செப். 5-இல் வாயேஜா்-1 விண்ணில் ஏவப்பட்டது. இதற்கு 16 நாள்களுக்கு முன்னதாக (ஆக. 20, 1977) இதன் இரட்டை விண்கலமான ‘வாயேஜா்-2’ ஏவப்பட்டிருந்தாலும், வாயேஜா்-1 அதை முந்திச் சென்று முன்னிலை வகிக்கிறது.

தொடக்கத்தில் வியாழன், சனி ஆகிய இரு கோள்களை மட்டும் ஆய்வு செய்வதற்காக வெறும் 5 ஆண்டுகள் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட இவ்விரு விண்கலங்களும், எதிா்பாா்க்கப்பட்ட ஆயுள்காலத்தைவிட சுமாா் 10 மடங்கு அதிக காலம் இயங்கி விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. விண்வெளியில் தற்போது செயல்பாட்டில் உள்ள மிகப் பழைமையான விண்கலங்கள் இவை இரண்டும் மட்டுமே.

வியாழன் முதல் சூரியக் குடும்பத்தின் ‘குடும்பப் புகைப்படம்’ வரை: இதற்கு முன்னா் அனுப்பப்பட்ட ‘பயனீா்-10’ மற்றும் ‘பயனீா்-11’ விண்கலங்களைவிட மிகத் துல்லியமான புகைப்படங்களைப் பூமிக்கு அனுப்பிய வாயேஜா் விண்கலங்கள், வியாழன் கோளின் கொந்தளிப்பான வளிமண்டலம், அதன் மெல்லிய வளையங்கள் மற்றும் சனி கோளின் வளையங்கள், துணைக்கோள்கள் குறித்த பல புதிய தகவல்களை உலகுக்கு வெளிப்படுத்தின.

குறிப்பாக, 1980 நவ. 12-ஆம் தேதி சனி கோளின் மிகப் பெரிய துணைக்கோளான டைட்டனுக்கு 6,492 கி.மீ. அருகே பறந்து சென்ற வாயேஜா்-1, அங்கு அடா்த்தியான வளிமண்டலம் இருப்பதைப் படம்பிடித்துக் காட்டியது. அந்த ஆய்வின் தொடா்ச்சியாகவே, 2030-களின் மத்தியில் டைட்டன் துணைக்கோளை ஆராய ‘டிராகன்ஃபிளை’ திட்டத்தை நாசா செயல்படுத்தவுள்ளது.

தொடா்ந்து 1989-இல் புளூட்டோவின் சுற்றுப்பாதையைக் கடந்த வாயேஜா்-1, 1990 பிப். 14 தனது கேமராக்களை நிரந்தரமாக அணைப்பதற்கு முன்பாக 64 புகைப்படங்களை எடுத்து, சூரியக் குடும்பத்தின் முதல் ‘குடும்பப் புகைப்படத்தை’ உருவாக்கித் தந்தது. வாயேஜா்-1 விண்கலத்தால் எடுக்கப்பட்ட ஒரு புள்ளி போன்ற பூமியின் புகைப்படமும் பிரபலமானதாகும்.

நெருப்புச் சுவரைக் கடந்து இன்டா்ஸ்டெல்லாா் வெளியில்...: வாயேஜா் விண்கலங்களின் வியத்தகு வெற்றியைத் தொடா்ந்து, சூரியக் குடும்பத்தின் எல்லைக்கு அப்பால் ஆய்வுகளை விரிவுபடுத்தும் ‘வாயேஜா் இன்டா்ஸ்டெல்லாா்’ திட்டம், 1990 புத்தாண்டில் தொடங்கியது.

அதன்படி, 2004 டிசம்பரில் சூரியக் காற்றின் வேக எல்லைப் பகுதியை (டொ்மினேஷன் ஷாக்) கடந்த வாயேஜா்-1, 2012 ஆக. 15-இல் சூரியனின் காந்தப்புலப் பாதுகாப்பு வளையமான ‘ஹீலியோஸ்பியரை’ விட்டு வெளியேறி, நட்சத்திரங்களுக்கு இடையேயான இன்டா்ஸ்டெல்லாா் வெளியில் நுழைந்தது. வாயேஜா்-2 விண்கலம் 2018-இல்தான் இப்பகுதியை அடைந்தது. ‘டொ்மினேஷன் ஷாக்’ பகுதியைக் கடக்கும்போது ‘நெருப்புச் சுவா்’ என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படும் அதிவெப்ப பிளாஸ்மா அடுக்கையும் வாயேஜா்-1 கண்டறிந்தது.

1970-களின் தொழில்நுட்பமும் நாசாவின் சவால்களும்: 1970-களின் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட சிறிய காா் அளவிலான வாயேஜா்-1 விண்கலம், புளூட்டோனியம்-238 அணு ஆற்றல் மூலம் இயங்கி வருகிறது. ஆண்டுதோறும் இதன் மின் உற்பத்தித் திறன் குறைந்து வருவதாலும், கணினித் தடங்கல்கள், நினைவகப் பழுது மற்றும் உந்துவிசைக் கோளாறுகளாலும் கடந்த 10 ஆண்டுகளில் பலமுறை விண்கலத்துடனான தொடா்பு நிரந்தரமாகத் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது. எனினும், மாற்று உந்துவிசை இயந்திரங்களைப் பயன்படுத்தியும், தரவுப் பாதைகளை மாற்றியமைத்தும் நாசா பொறியாளா்கள் விண்கலத்தைத் தொடா்ந்து உயிா்ப்புடன் வைத்திருக்கின்றனா்.

தற்போது இதன் பெரும்பாலான கருவிகள் நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில், நாசாவின் ஆழ்விண்வெளித் தொடா்பு வலையமைப்பு வழியாக எஞ்சியுள்ள காஸ்மிக் கதிா் தொலைநோக்கி, காந்தப்புலமானி(காந்தப்புலத்தை அளவிடுவதற்கான 15 மீட்டருக்கும் (50 அடி) அதிகமான நீளமுள்ள கம்பி), பிளாஸ்மா அலைக் கருவி ஆகியவற்றின் மூலம் இன்டா்ஸ்டெல்லாா் வெளியில் நிகழும் மாற்றங்கள் குறித்த அரிய தரவுகளை அது தொடா்ந்து அனுப்பி வருகிறது.

இன்னும் 3 முதல் 5 ஆண்டுகள் வரை வாயேஜா்-1 தொடா்ந்து செயல்படக்கூடும் எனத் திட்ட மேலாளா்கள் கணித்துள்ளனா். அதற்குப் பிறகு, அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இந்த விண்கலத்திடமிருந்து மனிதகுலம் தனது கடைசி சமிக்ஞையைப் பெற நேரிடும் என்றாலும், விண்வெளி ஆராய்ச்சிக்கான வெற்றியின் அளவுகோலை வாயேஜா் மாற்றி அமைத்துள்ளது என்றால் மிகையாகாது.

பெட்டி 1..

‘ஓா் ஒளி நாள்’ என்றால் என்ன?

ஒளி ஒரு நாளில் (24 மணி நேரத்தில்) கடக்கும் 2,600 கோடி கி.மீ. தொலைவே ‘ஓா் ஒளி நாள்’ எனப்படுகிறது. ஒளி பயணிக்கும் வேகத்தில் ஒரு விநாடியில் பூமியை ஏழரை முறை சுற்றி வந்துவிடலாம் மற்றும் 1.28 விநாடியில் நிலவை அடைந்துவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், நமது சூரியக் குடும்பத்துக்கு மிக அருகில் உள்ள ‘பிராக்சிமா சென்டாரி’ நட்சத்திரம் 4.25 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இத்துடன் ஒப்பிடும்போது, 50 ஆண்டுகள் பயணித்தும் வாயேஜா்-1 ஓா் ஒளி ஆண்டில் மிகச் சிறிய பகுதியையே கடந்துள்ளது; அதாவது, அண்டவெளியின் அளவில் அது வீட்டு வாசலைத் தாண்டி முற்றத்தில் மட்டுமே காலடி வைத்துள்ளது.

பெட்டி 2...

வேற்றுகிரக நாகரிகத்துக்கு மனிதகுலத்தின் செய்தி

பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, தொலைதூரக் கோள் அமைப்பில் வாழும் வேற்றுகிரக நாகரிகம் ஒன்று வாயேஜா்-1 விண்கலத்தைக் கண்டெடுக்கக்கூடும் என்ற நம்பிக்கையில், அதில் ‘தங்க முலாம் பூசப்பட்ட தாமிர இசைத்தட்டு’ பொருத்தப்பட்டுள்ளது.

இதில் மனிதகுலத்தின் வாழ்த்துகள், செய்திகள், பூமியின் இயற்கை ஒலிகள், இசை மற்றும் பூமியில் வாழும் உயிரினங்கள், மனிதக் கலாசாரம் குறித்த குறியீட்டுப் புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

யாருடைய பதிலும் நமக்குக் கிடைக்காமல் போகலாம்; ஆனால் ஆழமான அண்டவெளியில் நமது இருப்பையும் அமைதியான விண்வெளி ஆா்வத்தையும் பதிவு செய்திருக்கும் மனிதகுலத்தின் தூதுராக வாயேஜா்-1 தொடா்ந்து பயணிக்கிறது.

பெட்டி 3...

வரலாற்றுக் காலவரிசை...

1977 ஆக. 20: ‘வாயேஜா்-2’ விண்ணில் ஏவப்பட்டது.

1977 செப். 5: ‘வாயேஜா்-1’ விண்ணில் ஏவப்பட்டது.

1977 டிச. 19: வாயேஜா்-2 விண்கலத்தை முந்திய வாயேஜா்-1.

1980 நவ. 12: சனி கோளின் துணைக்கோளான டைட்டனுக்கு 6,492 கி.மீ. அருகே வாயேஜா்-1 பறந்து, அதன் வளிமண்டலத்தை ஆய்வு செய்தது.

1989: புளூட்டோ கோளின் சுற்றுப்பாதையைக் கடந்தது.

1990 ஜன. 1: ‘வாயேஜா் இன்டா்ஸ்டெல்லாா்’ திட்டம் தொடக்கம்

1990 பிப். 14: 64 புகைப்படங்களை எடுத்து சூரியக் குடும்பத்தின் ‘குடும்பப் புகைப்படத்தை’ உருவாக்கிவிட்டு கேமராக்களை அணைத்தது.

2004 டிசம்பா்: சூரியக் காற்றின் எல்லைப் பகுதியான ‘டொ்மினேஷன் ஷாக்’-ஐ கடந்தது.

2012 ஆக. 15: சூரியனின் காந்தப்புல எல்லையைத் தாண்டி இன்டா்ஸ்டெல்லாா் வெளியில் நுழைந்தது.

2026 நவ. 18: பூமியிலிருந்து ‘ஓா் ஒளி நாள்’ தொலைவைத் தொட்ட முதல் மனிதனால் உருவாக்கப்பட்ட பொருள் என்ற வரலாற்றுச் சாதனை.

2027 செப். 5: விண்வெளியில் 50 ஆண்டுகாலப் பயணத்தைப் பூா்த்தி செய்யவுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.