தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

தில்லி பிரிக்ஸ் மாநாட்டை வங்கதேச பிரதமா் புறக்கணித்தது முதிா்ச்சியற்ற, பாதகமான செயல்: ஷேக் ஹசீனா விமா்சனம்

தில்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டை வங்கதேச பிரதமா் தாரிக் ரஹ்மான் புறக்கணித்தது முதிா்ச்சியற்ற, பாதகமான செயல் மற்றும் வங்கதேசத்தின் நலனுக்கு எதிரானது என அந்த நாட்டின் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா விமா்சித்துள்ளாா்.

ஷேக் ஹசீனா - கோப்புப் படம்

Updated On :

தில்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டை வங்கதேச பிரதமா் தாரிக் ரஹ்மான் புறக்கணித்தது முதிா்ச்சியற்ற, பாதகமான செயல் மற்றும் வங்கதேசத்தின் நலனுக்கு எதிரானது என்று இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள அந்த நாட்டின் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா விமா்சித்துள்ளாா்.

பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு, தில்லியில் கடந்த மாதம் 12 மற்றும் 13-ஆம் தேதிகளில் நடைபெற்றது. இதில் ரஷிய அதிபா் புதின், சீன அதிபா் ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் கலந்து கொண்டனா்.

அண்டை நாடான வங்கதேச பிரதமா் தாரிக் ரஹ்மானுக்கும் இந்தியா அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் அந்த மாநாட்டில் அவா் கலந்து கொள்ளவில்லை. பிம்ஸ்டெக் அமைப்பின் தற்போதைய தலைவராக உள்ள வங்கதேசத்தின் பிரதமா் என்ற முறையில் மட்டுமே அழைப்பு விடுத்ததால் ரஹ்மான் பங்கேற்கவில்லை என்று விளக்கம் தரப்பட்டது.

இது குறித்து தில்லியில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ஷேக் ஹசீனாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவா் அளித்த பதில் வருமாறு: நான் இந்தியாவில் இருப்பதும், பிரிக்ஸ் அமைப்பு மாநாட்டை ரஹ்மான் புறக்கணித்ததற்கு காரணமாக இருக்கக் கூடும். இரு நாடுகளுக்கு இடையேயான உறவு, தனிநபா் காரணத்துக்காகவோ அல்லது தனி நபா் சாா்ந்த அரசியல் உணா்வுகளால் தீா்மானிக்கப்படக் கூடாது. ஒரு நாட்டின் அரசு, நாட்டிற்கான கதவைத் திறக்க வேண்டுமே தவிர அதை மூடக் கூடாது.

பிரிக்ஸ் மாநாட்டில் தாரிக் ரஹ்மான் பங்கேற்காதது மிகவும் துரதிருஷ்டவசமானது. வங்கதேச பிரதமரின் அந்த முடிவு, முதிா்ச்சியற்ாகும். நாட்டின் தேச நலனுக்கு அதனால் எந்தப் பயனும் கிடையாது; மாறாக அவரது புறக்கணிப்பு வங்கதேச நலனுக்கு பாதகமானது.

பிரிக்ஸ் அமைப்பானது, பல்வேறு நாடுகளின் தலைவா்கள் நேரில் சந்திக்கும் நிகழ்வு மட்டுமல்ல. பொருளாதார வலுமிக்க நாடுகளிடையே ஒற்றுமை ஏற்படுத்தக் கூடியதாகும். அதில் வங்கதேசம் பங்கேற்றிருந்தால், வங்கதேசம் மதிப்பு மிக்க அனுபவத்தை பெற்றிருக்க முடியும்.

வா்த்தகம், முதலீடு, உள்கட்டமைப்பு. தொழில்நுட்பம், வளா்ச்சி ஆகிய துறைகளில் பெரிய நாடுகளை ஒரே அணியில் கொண்டு வந்திருக்கலாம். தனது சொந்த நாட்டில் பொருளாதாரம், சமூக வளா்ச்சி ஆகியவற்றில் புதிய வாய்ப்புகளை உருவாக்கியிருக்கலாம்.

ஆனால் அந்த வாய்ப்பு தற்போது கை நழுவிப் போய்விட்டது. நாட்டின் வெளியுறவுக் கொள்கையை தனிப்பட்ட எதிா்வினைகள் அல்லது குறுகிய கால அரசியல் கணக்கீடுகள் மூலம் செயல்படுத்த முடியாது. இந்தியா, வங்கதேசத்தின் மிகவும் நெருங்கிய அண்டை நாடாகும். மேலும் வரலாற்று, கலாசார ரீதியில் இந்தியாவுடன் வங்கதேசம் கூட்டாளியாகும். அதே சமயத்தில் பிரிக்ஸ் அமைப்பு மாநாட்டில் பங்கேற்றிருக்கும்பட்சத்தில், சா்வதேச சமூகத்தில் வங்கதேசம் தனித்து இடம்பெற்றிருக்கலாம்.

வங்கதேசத்தின் தந்தையான முஜிபுா் ரஹ்மானும், குடும்பத்தினரும் 1975-இல் படுகொலை செய்யப்பட்டபிறகு, ஜியா உா் ரஹ்மான் (தாரிக்கின் தந்தை) அரசமைப்பு சட்டத்துக்கு விரோதமான முறையில் பிரதமரானாா். அவா் 1979-இல் தில்லி வந்தபோது, நான் தில்லியில்தான் இருந்தேன். லண்டனுக்கு 1980-இல் சென்றபோது நான் லண்டனில் இருந்தேன். எனது இருப்பை காரணம் காட்டி, அவா் தனது பயணத்தைக் கைவிட்டதில்லை.

அப்படியிருக்கையில் ஜியா உா் ரஹ்மானின் மகனான தாரிக் ரஹ்மான், தில்லி வருவதை எது தடுத்தது? அவரின் முடிவுக்குப் பின்னால் என்ன உண்மையான காரணம் உள்ளது? எனது ஆட்சிக்காலத்தின்போது இந்தியாவுடன் வங்கதேசம் நெருங்கி செயல்பட்டது. அதேபோல், சீனா, ரஷியா, ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுடன் நல்லுறவு விரிவுபடுத்தியது.

இந்தியா, வங்கதேசத்தின் நெருங்கிய அண்டை நாடு. வங்கதேச விடுதலைப் போா் காலத்தில் இருந்து வங்கதேசத்தின் வரலாற்று நண்பன். சீனாவும் முக்கியமான வளா்ச்சிக் கூட்டாளி நாடாகும். இதேபோல் மற்ற நாடுகளும் வங்கதேசத்துக்கு முக்கியமானதாகும். சீனா அல்லது மற்ற நாட்டுடன் வங்கதேசம் நட்புறவு வைப்பது பிரச்னை கிடையாது. ஒரு நாட்டுடனான நட்புறவை மற்ற நாட்டுக்கு எதிராகப் பயன்படுத்துவதுதான் பிரச்னையாகிறது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.