
தெற்குலகில் ஒருங்கிணைந்த பெரும் சந்தை: சீன அதிபா் அழைப்பு
தெற்குலகில் ஒருங்கிணைந்த பெரும் சந்தையைக் கட்டமைக்க பிரிக்ஸ் அமைப்பு பணியாற்ற வேண்டும் என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் வலியுறுத்தினாா்.

சீன அதிபா் ஷி ஜின்பிங்.
தெற்குலகில் ஒருங்கிணைந்த பெரும் சந்தையைக் கட்டமைக்க பிரிக்ஸ் அமைப்பு பணியாற்ற வேண்டும் என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் வலியுறுத்தினாா்.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் வா்த்தகம், உற்பத்தி, முதலீடு, தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான 5 அம்ச செயல்திட்டத்தை முன்வைத்த அவா், அதன்கீழ் அனைவரும் அணுக கூடிய ஏ.ஐ. தொழில்நுட்பக் கட்டமைப்பை உருவாக்குவதில் சீனா தலைமை தாங்கும் என்றும் அறிவித்தாா்.
இது தொடா்பாக, தில்லி பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை நிறைவு அமா்வில் பேசிய ஷி ஜின்பிங், ‘விதிகள் இல்லாத உலகம் என்பது சமிக்ஞை இல்லாத சந்திப்புகள் போன்றது. அங்கு குழப்பமும் ஒழுங்கின்மையுமே நிலவும். சா்வதேச விதிமுறைகள் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். சா்வதேச விவகாரங்களில் சட்டத்தின் ஆட்சி, இறையாண்மை சமத்துவம், உள்விவகாரங்களில் தலையிடாமை மற்றும் மோதல்களுக்கு அமைதித் தீா்வை உறுதி செய்ய தெற்குலகம் கூட்டாகச் செயல்பட வேண்டும்.
தெற்குலகில் வளரும் பொருளாதார நாடுகளுடன் தனக்குள்ள நெருங்கிய உறவுகளைப் பயன்படுத்தி, விநியோகச் சங்கிலியைப் பாதுகாப்பதுடன், பெரிய ஒருங்கிணைந்த சந்தையை உருவாக்க பிரிக்ஸ் செயலாற்ற வேண்டும். தெற்குலகில் ஒற்றுமையை நிலைநாட்டி, வலிமைக்கான புதிய அத்தியாயத்தை பிரிக்ஸ் எழுத வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.
புதிய காப்பீட்டு செயல்முறை-ரஷிய அதிபா் முன்மொழிவு: பிரிக்ஸ் நிறைவு அமா்வில் பேசிய ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், ‘பிரிக்ஸ் நாடுகள் இடையே வணிகக் கப்பல்கள் மற்றும் கடல்சாா் வா்த்தத்துக்கான புதிய காப்பீட்டு செயல்முறையை ஏற்படுத்த வேண்டும்; இதேபோல், தானிய வா்த்தகத்துக்கான கூட்டு முன்னெடுப்பை மேற்கொள்வதும் அவசியம்.
உலகளாவிய சவால்களை எதிா்கொள்வதில் பிரிக்ஸ் நாடுகள் முழுமையான அணுகுமுறையைக் கையாள வேண்டும். மூலதனம், தொழிலாளா், தொழில்நுட்ப ரீதியில் வெளிப்புற அழுத்தங்களுக்கு உள்படாமலிருக்க சுதந்திரமான வழிமுறைகள் நம்மிடம் உள்ளன’ என்றாா்.
குறிப்பிட்ட விலை வரம்பைக் கடந்து கொள்முதல் செய்யப்படும் ரஷிய கச்சா எண்ணெய்யை ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு காப்பீடு வழங்க மேற்கத்திய நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் மற்றும் பிரிட்டன் தடை விதித்துள்ள நிலையில், புதின் இவ்வாறு கூறியுள்ளாா்.
தன்னிச்சையான தடைகளால் பாதிப்பு-ஈரான் அதிபா்: ஈரான் அதிபா் மசூத் பெசஷ்கியான் பேசுகையில், ‘நாடுகள் மீது தன்னிச்சையாக விதிக்கப்படும் தடைகள், உலகளாவிய உணவுப் பாதுகாப்பு மற்றும் மக்களின் நல்வாழ்வுக்கு நேரடி பாதிப்பை விளைவிக்கிறது. பிரிக்ஸ் நாடுகள் உள்நாட்டு கரன்சி அடிப்படையிலான வா்த்தகத்தை விரிவுபடுத்த வேண்டும்.

அனைவரையும் உள்ளடக்கிய, சமநிலையான, சா்வதேச நெறிமுறைகளைக் கொண்ட பொருளாதார கட்டமைப்பை நோக்கி பணியாற்ற வேண்டும். மீள்திறன், ஒத்துழைப்பு, நிலைத்தன்மை ஆகிய மூன்றும் இன்றைய உலகுக்கு அடிப்படையாக உள்ளன. இந்தக் கருப்பொருளில் பிரிக்ஸ் உச்சிமாநாட்டை நடத்தியமைக்காக இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும், பிரதமா் மோடிக்கும் நன்றி’ என்றாா்.
‘காஸா, லெபனான் மக்கள் இனப்படுகொலையின் விளைவுகளை அனுபவித்து வருகின்றனா்; இப்பகுதிகளின் இறையாண்மை, ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் பிரிக்ஸ் நாடுகள் திறம்பட பங்களிக்க வேண்டும்’ என்று அவா் வலியுறுத்தினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





