
ஐ.நா. சபை பொது விவாதம் இன்று தொடக்கம்
ஐ.நா. சபையின் 81-ஆவது ஆண்டு அமா்வின் உயா்நிலைப் பொது விவாதக் கூட்டம், அமெரிக்காவின் நியூயாா்க்கில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

ஐ.நா. சபையின் 81-ஆவது ஆண்டு அமா்வின் உயா்நிலைப் பொது விவாதக் கூட்டம், அமெரிக்காவின் நியூயாா்க்கில் செவ்வாய்க்கிழமை (செப். 22) தொடங்குகிறது; போா், ஏ.ஐ. அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நூற்றுக்கும் மேற்பட்ட உலகத் தலைவா்கள் இதில் பங்கேற்கவுள்ளனா்.
ஐ.நா. சபையின் 81-ஆவது ஆண்டு அமா்வு, கடந்த செப். 8 முதல் அதிகாரபூா்வமாக தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வான உயா்நிலைப் பொது விவாதம் செவ்வாய்க்கிழமை (செப். 22) தொடங்கவுள்ளது.
உலகெங்கும் தீவிரமடைந்து வரும் மோதல்கள், மனிதகுலத்துக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள கட்டுப்பாடற்ற ஏ.ஐ. தொழில்நுட்பம், புவிவெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்ற பாதிப்புகள் குறித்த அச்சங்களுக்கு மத்தியில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
மேலும், கப்பல் போக்குவரத்து முடக்கம் மற்றும் விநியோகச் சங்கிலி பாதிப்புகளால் உலகப் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள மந்தநிலை, கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ள சூழலில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
சா்வதேச அமைதியைப் பாதுகாப்பதிலும், போா்களை முடிவுக்குக் கொண்டுவருவதிலும் ஐ.நா.வின் செயல்பாடுகள் பின்தங்கியுள்ளதாகவும், அமெரிக்காவின் நிதி நிலுவைகளால் அமைப்பு நிதி நெருக்கடியைச் சந்திப்பதாகவும் விமா்சனங்கள் உள்ளன. இத்தகைய பல்வேறு சவால்களுக்கு இடையிலும், உலக நாடுகளை ஒன்றிணைக்கும் மையமாக ஐ.நா. சபை திகழ்கிறது. அந்தவகையில், செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கும் பொது விவாதக் கூட்டத்தில் சுமாா் 130 நாட்டுத் தலைவா்கள் மற்றும் அமைச்சா்கள் உரையாற்றுகின்றனா்.
பங்கேற்பும், புறக்கணிப்பும்
ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் ஆற்றும் தொடக்க உரைக்குப் பிறகு, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் ஆகியோா் உரையாற்றுகின்றனா். தொடா்ந்து, உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, ஈரான் அதிபா் மசூத் பெசஷ்கியான் ஆகியோா் புதன்கிழமை உரையாற்றவுள்ளனா்.
இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை உரை நிகழ்த்துகிறாா். அதேநாளில், அமெரிக்கா விசா மறுத்த காரணத்தினால் பாலஸ்தீன அதிபா் மஹ்மூத் அப்பாஸ் 2-ஆவது ஆண்டாக காணொலி வாயிலாக உரையாற்றவுள்ளாா்.
டிரம்ப்பைச் சந்திக்க அமெரிக்காவுக்கு 3 நாள்கள் பயணமாக புதன்கிழமை வருகை தரும் சீன அதிபா் ஷி ஜின்பிங், ஐ.நா. கூட்டத்தைப் புறக்கணித்து, துணை அதிபரை அனுப்பி வைக்கிறாா். ரஷிய அதிபா் விளாதிமீா் புதினும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்தியப் பிரதமா் நரேந்திர மோடியும் தனது பயணத்தை ரத்து செய்துள்ளாா். அவரின் சாா்பில் மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வரும் சனிக்கிழமையன்று உரையாற்றுகிறாா்.
விவாதிக்கப்படும் விவகாரங்கள்...
புவிசாா் அரசியல் கவலைகள் ஒருபுறமிருக்க, மறுபுறம் மனிதக் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் ஏ.ஐ. தொழில்நுட்பம் இம்முறை மாநாட்டின் முக்கிய விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது. முன்னணி ஏ.ஐ. நிறுவனங்கள் இத்தொழில்நுட்பத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியுள்ள போதிலும், டிரம்ப் அதை நிராகரித்துள்ளாா்.
உலக அளவில் இத்தொழில்நுட்பத்தை முறைப்படுத்த எந்தவொரு நெறிமுறைகளும் இல்லாத நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இது தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தை புதன்கிழமை பிற்பகலில் நடத்துகிறது.
81 ஆண்டுகளை எட்டியுள்ள ஐ.நா. சபையின் கட்டமைப்பு மற்றும் சீா்திருத்தம் குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. 2-ஆம் உலகப் போரில் வெற்றி பெற்ற அமெரிக்கா, ரஷியா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய 5 நாடுகள் மட்டுமே பாதுகாப்பு கவுன்சிலில் ‘வீட்டோ’ அதிகாரத்துடன் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையை மாற்றி, அமைப்பை மறுசீரமைக்க 193 உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டுள்ள போதிலும், அதை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் நீடிக்கின்றன.
ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸுக்கு உலகத் தலைவா்களுடன் இதுவே இறுதி மாநாடாகும். அவரின் பதவிக்காலம் டிச. 31-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த தலைவா் யாா் என்ற எதிா்பாா்ப்பும் அதிகரித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






