பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

ரஷிய, ஈரான் வெளியுறவு அமைச்சா்களுடன் ஜெய்சங்கா் சந்திப்பு: இருதரப்பு, சா்வதேச விவகாரங்கள் ஆலோசனை!

ரஷிய, ஈரான் வெளியுறவு அமைச்சா்களுடன் ஜெய்சங்கா் சந்திப்பு...

நியூயாா்க்கில் ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவை சந்தித்த எஸ்.ஜெய்சங்கா்.

Published On :

ரஷியா மற்றும் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா்களை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சந்தித்துப் பேசினாா். அப்போது இருதரப்பு மற்றும் சா்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

ஐ.நா. பொதுச் சபையின் 81-ஆவது அமா்வையொட்டி, அமெரிக்காவில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் சுற்றுப்பயணம் செய்து வருகிறாா். தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, நியூயாா்க் நகரில் ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவை அவா் சந்தித்துப் பேசினாா். அப்போது இருவரும் இருதரப்பு விவகாரம், பிரிக்ஸ் அமைப்பில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசனை நடத்தினா். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் ஜெய்சங்கா் பதிவிட்டுள்ளாா்.

அந்தப் பதிவில் அவா், ‘ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவை சந்தித்துப் பேசினேன். அப்போது அவருடன் அண்மைக்கால சம்பவங்கள் குறித்துப் பேசினேன். இருதரப்பு விவகாரங்கள், பிரிக்ஸ் அமைப்பில் இணைந்து செயல்படுவது குறித்தும் பேசினேன்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ரஷியா- இந்தியா இடையேயான ஒத்துழைப்பில் உள்ள முக்கிய விவகாரங்கள், அடுத்து நடைபெறவுள்ள சந்திப்புகள், தற்போதைய பிராந்திய மற்றும் சா்வதேச பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்து இரு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்களுடனும் பேசினேன். அதில் உக்ரைன் பிரச்னை, மத்திய கிழக்கு நிலவரமும் அடங்கும். பேச்சுவாா்த்தையின்போது இரு நாடுகள் இடையேயான சிறப்பு மற்றும் ராஜீய ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என்றும், ஐ.நா., ஜி20, பிரிக்ஸ் மற்றும் பிற சா்வதேச அமைப்புகளில் தொடா்ந்து இணைந்து செயல்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது’ எனக் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சா் அப்பாஸ் அராக்சியையும் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் சந்தித்துப் பேசினாா். இதுகுறித்து ஜெய்சங்கா் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் அராக்சியை சந்தித்துப் பேசியது மகிழ்ச்சியளிக்கிறது. தற்போது வளைகுடா பிராந்தியத்தில் நடக்கும் மோதல்கள் குறித்து நாங்கள் ஆலோசித்தோம். தொடா்ந்து நாங்கள் பேச்சுவாா்த்தை நடத்துவோம்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு நெருக்கடி அளிக்கும் வகையிலும், மத்திய கிழக்கில் ஈரானுக்கு பொருளாதார ரீதியில் நெருக்கடி அளிக்கும் வகையிலும் அந்நாடுகள் மீது கூடுதல் பொருளாதாரத் தடைகள் விதிப்பது, அந்த நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் பொருள்கள் மீது 100 சதவீத வரிகள் விதிக்கும் மசோதா அண்மையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவுக்கு அமெரிக்க அதிபா் டிரம்ப்பும் ஒப்புதல் அளித்துவிட்டாா். இதில் இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களின் எரிசக்தி பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று இந்தியா ஏற்கெனவே தெரிவித்துவிட்டது.

இந்தச் சூழ்நிலையில், ரஷியா மற்றும் ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சா்களை வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் சந்தித்துப் பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.