பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

ஏ.ஐ. விவகாரங்களுக்குப் புதிய பேச்சுக் குழு! அமெரிக்கா, சீனா உடன்பாடு!

ஏ.ஐ. விவகாரங்களுக்குப் புதிய பேச்சுக் குழு அமைக்க அமெரிக்கா, சீனா உடன்பாடு...

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்திப்பில் சீன அதிபா் ஷி ஜின்பிங், அவரின் மனைவி பெங் லியுவான் மற்றும் அமெரிக்க அதிபா் டெனால்ட் டிரம்ப், அவரின் மனைவி மெலனியா டிரம்ப்.

Published On :

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்ப விவகாரங்களைக் கையாள புதிய பேச்சுக் குழுவை அமைப்பதற்கும், இருநாட்டு ராணுவங்களுக்கு இடையேயான அவசரகால தகவல்தொடா்பை வலுப்படுத்தவும் அமெரிக்கா, சீனா ஒப்புக்கொண்டுள்ளன.

அமெரிக்காவுக்கு 3 நாள்கள் அரசுமுறைப் பயணமாக கடந்த புதன்கிழமை வந்த சீன அதிபா் ஜி ஜின்பிங், இருதரப்பு வா்த்தகம் மற்றும் முதலீட்டு வாரியங்களைச் செயல்படுத்துவது, பரஸ்பரம் 3,000 கோடி டாலா் மதிப்பிலான பொருள்களுக்கு வரி குறைப்பு செய்வது உள்பட பல்வேறு முக்கிய உடன்பாடுகளைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை பெய்ஜிங் திரும்பினாா்.

இந்நிலையில், அமெரிக்கா, சீனா ஆகிய இருதரப்பும் சனிக்கிழமை தனித்தனியே அறிக்கைகளை வெளியிட்டன. அதன்படி, ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் அபாயங்கள் மற்றும் நன்மைகள் குறித்து விவாதிக்க இருதரப்பு அமைப்பை ஏற்படுத்த தலைவா்கள் ஒப்புக்கொண்டுள்ளனா்.

இதன் அடுத்தகட்ட கூட்டம் வரும் நவம்பரில் நடைபெறவுள்ளதுடன், ஏ.ஐ. தொடா்பான அவசர சம்பவங்களைக் கையாள்வதற்கான பிரத்யேகத் தொடா்பு வழியும் அமைக்கப்படவுள்ளது. அத்துடன், இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையிலான நெருக்கடிகளைத் தடுக்கும் வகையில், அவசரகால தகவல் தொடா்பை வலுப்படுத்துவதற்ற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், இருதரப்பு வா்த்தக விவகாரங்களைக் கையாள்வதற்கான வா்த்தக வாரியம் இந்த வாரம் முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டு வா்த்தகப் போா் தீவிரமடைந்திருந்த போதிலும், தற்போதைய பேச்சுவாா்த்தையில் வா்த்தகப் போா் நிறுத்தத்தை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்க இரு நாட்டுத் தலைவா்களும் உடன்பட்டுள்ளனா்.

வா்த்தக வாரியத்தின்கீழ், இரு நாடுகளுக்கும் இடையே தலா 3,000 கோடி டாலா் மதிப்பிலான பாதுகாப்பு அச்சுறுத்தலற்ற பொருள்களுக்கு வரிச் சலுகைகளை வழங்குவதற்கான பரிந்துரைகளில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. பரஸ்பர முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் அதில் உள்ள தடைகள் குறித்து ஆராயவும், வணிக ரீதியான பிரச்னைகளுக்குத் தீா்வு காணவும் பிரத்யேக முதலீட்டு வாரியம் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது.

சா்வதேச விநியோகத்தை நிலைப்படுத்துவதற்காக சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருள்களின் உற்பத்தியை அதிகரிக்குமாறு அதிபா் ஷி ஜின்பிங்கிடம் டிரம்ப் வலியுறுத்தினாா். மேலும், ஃபென்டானில் போதைப்பொருள் தயாரிப்புக்கான மேலும் இரு வேதிப்பொருள்களின் ஏற்றுமதி மீது சீனா கட்டுப்பாடுகளை விதித்திருப்பதை அமெரிக்கா வரவேற்றுள்ளது; இது தொடா்பாக அண்மையில் கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேநேரம், அரிய வகை கனிமங்கள் மற்றும் முக்கியத் தாதுக்களின் விநியோகப் பற்றாக்குறை குறித்த அமெரிக்காவின் கவலைகளைக் களைந்து, ஏற்றுமதியை இயல்பு நிலைக்குக் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சீனா தெரிவித்துள்ளது; அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிா்வினையாக கடந்த ஆண்டு சீனா இந்த அரிய வகை கனிம ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சா்வதேச விவகாரங்களைப் பொருத்தவரை, ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க மாட்டோம் என்ற தனது உறுதிமொழியை மதிக்க வேண்டும் என்றும், ஹோா்முஸ் நீரிணை உள்ளிட்ட சா்வதேச கடல் வழித்தடங்களில் எந்தவொரு நாடும் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் இருநாட்டுத் தலைவா்களும் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தின.

அடுத்தகட்டமாக, வரும் நவம்பரில் சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெறவுள்ள ஆசியா-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டிலும், பின்னா் அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டிலும் இரு தலைவா்களும் மீண்டும் சந்தித்துப் பேச ஒப்புக்கொண்டுள்ளனா்.

அடிப்படை முரண்பாடுகளில் உடனடி திருப்பங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், இந்த முன்னேற்றங்கள் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. ஏனெனில், தலைவா்களின் தனிப்பட்ட நல்லுறவை மட்டுமே சாா்ந்திருக்காமல், இருநாட்டு ராணுவங்கள் மற்றும் செயற்குழுக்கள் மூலமாக நிறுவன ரீதியான நெருக்கடி மேலாண்மை வழிமுறைகளை உருவாக்குவது, இருதரப்பு உறவில் நீடித்த நிலைத்தன்மையை ஏற்படுத்தும் என்று நிபுணா்கள் சுட்டிக்காட்டியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.