
இஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?
துபையில் இருந்து இஸ்ரேலுக்குப் புறப்பட்ட விமானம் சௌதி அரேபியாவில் தரையிறங்கியதன் பின்னணி...

அமீரக விமானம் - கோப்புப் படம்
நடுவானில் விமானியை சக விமானி ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றதால் துபையில் இருந்து இஸ்ரேலுக்குப் புறப்பட்ட பயணிகள் விமானம் சௌதி அரேபியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை விமான நிலையத்தில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரத்துக்கு இன்று (செப். 30) காலை 9.45 மணிக்குப் புறப்பட்ட ஃபிளை துபை நிறுவனத்தின் பயணிகள் விமானம் சௌதி அரேபியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
நடுவானில் விமானிகள் இருவருக்கும் இடையேயான மோதலால் விமானம் சௌதியின் தபூக் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட வேண்டிய சூழல் உருவானதாகக் கூறப்படும் நிலையில், விமானிகள் இருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், சௌதியில் தரையிறங்கிய பிறகு அந்த விமானத்தில் பயணம் செய்த மிர்யம் என்ற பெண் அவரின் தந்தைக்குச் செல்போன் மூலம் தெரிவித்த தகவலில், விமானத்தை இயக்கிய விமானி ஒருவர் தனது சக விமானியைக் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றதாகத் தெரிவித்துள்ளார்.
இதில், விமானிகள் இருவரும் மோதிக்கொண்டதால் திடீரென விமானம் வேகமாகக் கீழே சென்றதாகவும், 34,000 அடி உயரத்தில் பறந்த விமானம் வெறும் 1 நிமிடத்திற்குள் 17,000 அடிக்குக் கீழிறங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, பயணிகளாகப் பயணித்துக்கொண்டிருந்த வேறு இரண்டு விமானிகள் உடனடியாக விமானத்தைத் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து அவசரமாகத் தரையிறக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்து விமான நிறுவனம் மற்றும் சம்பந்தப்பட்ட நாடுகளின் அரசுகளின் தரப்பிலிருந்து எந்தவொரு தகவலும் இதுவரைத் தெரிவிக்கப்படவில்லை.
முன்னதாக, இன்று பெரும்பான்மையான இஸ்ரேலியர்கள் பயணித்த அந்த விமானம் நடுவானில் ரேடாரில் இருந்து விலகியதால் கடத்தப்பட்டிருக்கலாம் எனும் அச்சத்தில் இஸ்ரேலிய அரசு போர் விமானங்களைக் கண்காணிப்புக்கு அனுப்பியதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
Summary
flight bound for Israel from Dubai made an emergency landing in Saudi Arabia after a co-pilot attempted to stab and kill the pilot in mid-air.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







