கரோனாவுக்கு முடிவில்லை; கரோனாவே முடிவுமல்ல

ஒவ்வொரு புத்தாண்டையும் ஒரு விலங்கின் அடையாளத்தோடு தொடங்குவது சீனர்களின் வழக்கம்.
கரோனா வைரஸின் முதல் நாள்
கரோனா வைரஸின் முதல் நாள்


ஒவ்வொரு புத்தாண்டையும் ஒரு விலங்கின் அடையாளத்தோடு தொடங்குவது சீனர்களின் வழக்கம். பூனை ஆண்டு, எலி ஆண்டு என்று அவற்றுடன் புகைப்படம் எடுத்து புத்தாண்டைக் கொண்டாடுவார்கள். அவ்வளவு ஏன் இந்த 2020-ஆம் ஆண்டைக் கூட எலி ஆண்டாகத்தான் அறிவித்திருந்தது சீனம்.

ஒவ்வோர் ஆண்டுக்கும் விலங்குப் பெயரிடுவதைப் போல, 2020-ஆம் ஆண்டை கரோனா வைரஸ் ஆண்டாக மாற்றி உலகம் முழுவதையும் திண்டாட வைத்துவிட்டார்கள் சீனர்கள்.

2020 என்றாலே அது கரோனா ஆண்டாகிவிட்டாலும், சீனத்தில் முதல் முதலில் கரோனா கண்டறியப்பட்டது என்னவோ 2019-ல். கரோனா வைரஸ் இந்த உலகுக்குள் நுழைந்துவிட்டதைக் கண்டறிந்த முதல் நாள் என்று இதுவரை நம்பப்படுவது 2019 நவம்பர் 17. சீனத்தின் ஹூபேய் மாகாணத்தில் 55 வயது நபருக்கு கரோனா வைரஸ் இருப்பது அன்றைய தினம் உறுதி செய்யப்பட்டது.

தொடக்கத்தில் இறைச்சிக் கடையில் கெட்டுப்போன இறைச்சியிலிருந்து மனிதனுக்கு அல்லது வௌவால், பாம்புகளின் எச்சத்திலிருந்து கரோனா வைரஸ் மனிதனுக்குப் பரவியிருக்கலாம் என்று கூறப்பட்டது. உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் எங்கு, எவ்விதம், எப்போது தோன்றியது என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. ஆனால், அதற்குள் தன்னைத் தானே தகவமைத்துக் கொண்ட அதிதீவிர புதிய கரோனா வைரஸ் அந்நியனைப் போல உலகைத் தாக்க உருவாகிவிட்டது.

ஆண்டின் முடிவும் கரோனாவின் தொடக்கமும்

சீனத்தில் நவம்பர் மாதம் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் குறித்து முதன்முதலில் உலக சுகாதார அமைப்பு செய்தி வெளியிட்டது 2019, டிசம்பர் 31-ம் தேதி. சீனத்தின் வூஹான் மாகாணத்தில் 10க்கும் மேற்பட்டோர் புதிய நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்த எச்சரிக்கைத் தகவலில் கூறப்பட்டிருந்தது.

2020-ஆம் ஆண்டு தொடக்கம்

2020-ஆம் ஆண்டை பல ஆண்டுகளாக மக்கள் ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருந்த நிலையில் புத்தாண்டு கரோனாவுடன்தான் விடிந்தது. அப்போது பலருக்கும் தெரியாது, இந்த ஆண்டு யாராலும் மறக்க முடியாத பயங்கர ஆண்டாக மாறப் போகிறது என்று.

ஜனவரி 11-ம் தேதி சீனத்தில் கரோனாவுக்கு முதல் பலியாக 61 வயது முதியவர் உயிரிழந்தார். கரோனா மெல்ல சீனத்தின் வூஹான் மாகாணத்தைக் கைப்பற்றிக் கொண்டிருந்தது.

இதற்கிடையே, கரோனா வைரஸ் சீன நாட்டின் வைரஸ் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேலி பேசிக் கொண்டிருக்க, ஜனவரி 21-ம் தேதி அமெரிக்காவுக்குள் தனது காலடித் தடத்தைப் பதித்திருந்தது கரோனா. சீனத்தின் வூஹானிலிருந்து அமெரிக்கா வந்திருந்த 30 வயது நபருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது. அதற்கடுத்த நாள்களிலேயே ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்திலும் கரோனா கண்டறியப்படுகிறது.

உலகம் கரோனாவின் பிடியில் மெல்ல சென்று கொண்டிருந்தது. ஜனவரி 23-ம் தேதி வூஹானில் முழுப் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது, அந்த நகரமே ஒட்டுமொத்த நாட்டிலிருந்தும் தனிமைப்படுத்தப்பட்டது.  இதைத்தான் சீனா மிகக் கச்சிதமாக செய்து முடித்து கரோனாவிலிருந்து விடுபட்டது என்று இதுவரை நம்பப்படுகிறது.

ஜனவரி இறுதியில் சீனாவில் கரோனா பாதிப்பு சுமார் 10 ஆயிரமாகவும், பலி 200 ஆகவும் இருந்தது. இதுதவிர உலகம் முழுவதும் 22 நாடுகளில் கரோனா வைரஸ் பாதிப்புடன் 129 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.

அதே ஜனவரி இறுதியில் வூஹானில் மருத்துவம் பயின்று வந்த கேரள மாணவி திருச்சூர் திரும்பிய நிலையில் அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அவர் தனிமைப்படுத்தப்பட்டார். இந்தியாவில் கரோனா வைரஸ் பாதித்த முதல் நபராக இந்த கேரள மாணவியே அறியப்படுகிறார். அதுமுதல், சீனத்திலிருந்து வரும் பயணிகளுக்கு 14 நாள் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்தது. இதுவரை கரோனா வைரஸ் இந்தியாவுக்குள் வராது என்று பலரும் கூறிவந்தது தவிடுபொடியானது. இந்தியாவுக்குள்ளும் நுழைந்தது கரோனா. 

கேரள மாணவி சிகிச்சை பெற்று பிப்ரவரி 19-ம் தேதி கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்புகிறார். அவர் அணிந்திருந்த ஆடைகள்கூட ஒவ்வொரு நாளும் எரிக்கப்பட்டதாக பின்னர் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

கரோனாவால் உலக மக்கள் புதிதாக பேரிடர், தனிமைப்படுத்துதல் போன்ற புதிய வார்த்தைகளையும், முகக்கவசம், பல்ஸ் ஆக்ஸிமீட்டரையும் அறிந்து கொண்டனர். 

உலகில் 'சுகாதார அவசர நிலை' உருவாகியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு ஜனவரி 30-ம் தேதி அறிவித்தது. உலக சுகாதார அமைப்பின் வரலாற்றில், கரோனா பேரிடர் என்பது, 6வது அவசரநிலை அறிவிப்பாகும்.

பிப்ரவரியில்...

பிப்ரவரி மாதம் சீனத்தில் கரோனா உச்சத்தில் இருந்தது. அதிகபட்சமாக ஒரே நாளில் சுமார் 4 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. உண்மையான புள்ளிவிவரத்தை மறைத்திருந்தாலும், பதிவு செய்யப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் சீனத்தில் அதுதான் ஒரு நாளைய அதிகபட்ச பாதிப்பாக இருந்தது. கரோனா பேரிடருக்கு இடையே வெறும் 10 நாள்களில் 1000 படுக்கைகளும், 30 ஐசியு படுக்கை வசதியும் கொண்ட மருத்துவமனையை சீனா எழுப்பியது. இது மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மார்ச் மாதத்துக்குள் சீனத்தில் கரோனா பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டது.  ஆனால்... அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அது முடியாமல் போனது.

பிப்ரவரி மாதம் 5-ம் தேதி ஜப்பானின் யோகோஹாமா கடற்கரையில் 3,600 பயணிகளுடன் வந்த டைமண்ட் பிரின்ஸஸ் கப்பல் கரோனா தொற்றுப் பரவல் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டது. அதிலிருந்த 700-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

பிப்ரவரி 11-ம் தேதி நாவல் கரோனா வைரஸ் என்று அந்த தீநுண்மிக்கு கோவிட்-19 (சிஓவிஐடி-19) என்று பெயர் சூட்டப்பட்டது. சிஓ என்றால் கரோனா என்றும், விஐ என்றால் வைரஸ் என்றும் டி என்றால் டிஸ்ஸீஸ் என்றும் அர்த்தமாகும். 

அதே நாளில் வெளிநாடு செல்லாத ஒரு அமெரிக்கருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதுதான் சமூகத் தொற்றின் மூலம் அமெரிக்காவில் பரவிய முதல் கரோனா வைரஸ் என்று அறியப்பட்டது. பிறகு வாஷிங்டன், நியூயார்க் எனப் பல இடங்களில் கரோனா உறுதி செய்யப்பட்டது. அந்த மாதத்திலேயே அமெரிக்காவில் கரோனாவுக்கு ஒரு சிலர் பலியாகினர்.  பிப்ரவரி இறுதியில் இத்தாலிக்குள் கரோனா தீவிரமாகிறது.

ர்ச் மாதத் துவக்கத்தில்தான் உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொடர்பான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.  மார்ச் 13-ம் தேதி அமெரிக்காவில் அவசர நிலை அறிவிக்கப்படுகிறது. அதே மார்ச் மாதத்தில் கரோனா பரவத் தொடங்கிய பிறகு, புதிய கரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத நாள்களை சீனா அறிவிக்கிறது. 

தமிழகத்தில் நுழைந்தது

மார்ச் 9-ம் தேதி தமிழகத்தில் முதல் கரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. ஓமனிலிருந்து காஞ்சிபுரம் திரும்பிய 45 வயது நபருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு சென்னையில் அனுமதிக்கப்படுகிறார். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு வரும் போது அவருக்கு கரோனா உறுதியானது. மார்ச் 10-ம் தேதி நிலவரப்படி இந்தியாவில் 50 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டிருந்தது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 24-ம் தேதி இந்தியாவில் 21 நாள்கள் பொதுமுடக்கம் அறிவிக்கப்படுகிறது. அதற்கடுத்த நாள்களில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்லும் அவல நிலை ஏற்பட்டது. இதில் பல உயிர்கள் பறிபோயின. சொல்லொணா அவல நிலைக்கு ஆளாகினர் புலம்பெயர் தொழிலாளர்கள்.

சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் கரோனா தொற்றுப் பரவல் தீவிரமடைந்து, கரோனாவின் தாயகமான சீனத்தை முதல்முறையாக இத்தாலி முந்துகிறது. அங்கு சுமார் 4000 மரணங்கள் பதிவானதே அதற்குக் காரணம்.

மார்ச் மாத இறுதியில் அமெரிக்காவில் கரோனாவின் தீவிரம் எதிர்பாராத வகையில் உக்கிரமடைகிறது. நாடே செயலிழந்து, மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடும் மனிதர்களும் உயிரிழந்த உடல்களும் குவிந்தனர். உடல்களைக் கொண்டு செல்லப் பைகள் இல்லாமல் மாற்று வழிகளை சுகாதார அமைப்பு தேடி அலைய, ஒரு பக்கம் பெரிய பெரிய குழிகளில் கரோனா நோயாளிகளின் உடல்கள் அடக்கம் செய்யும் பணிகளும் தொடங்கின.

அப்போதே உலகளவில் கரோனா பாதிப்புப் பட்டியலில் சீனாவை அமெரிக்கா முந்தத் தொடங்கியது. அங்கு 82 ஆயிரம் பேர் கரோனா பாதித்து, 1000 பேர் வரை பலியாகினர்.

உலக நாடுகள் பொது முடக்கத்தை அறிவித்தன. போக்குவரத்துத் தடை விதிக்கப்பட்டது. லட்சக்கணக்கானோர் வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர். கோடிக்கணக்கானோர் வேலையிழந்து வீடு திரும்பினர். காலையில் ஓடத் தொடங்கி இரவில் சந்திக்கும் குடும்பங்கள் வீடு எனும் ஒரே கூட்டுக்குள் அடைபட்டனர். வீட்டு உணவே நிரந்தரமானது. 

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸனுக்கு கரோனா உறுதி செய்யப்படுகிறது. கரோனா பாதித்த முதல் உலகத் தலைவர் என்று கூறப்பட்ட நிலையில், மரணத்தை அதனருகில் சென்று பார்த்து வந்தார் போரிஸ் ஜான்ஸன். ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில்தான் அவர் மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தார்.

மார்ச் மாதம் உலகளவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 6 லட்சத்தைக் கடந்தது. இந்தியாவில் கரோனா பாதிப்பு 1,251 ஆகவும் பலி 32 ஆக இருந்தது.

கரோனா அச்சத்தால் உலகம் முழுக்க பெரும்பாலான மருத்துவமனைகள் ஆள் நடமாட்டம் இல்லாமல் முடங்கின. கரோனா வார்டுகள் மட்டுமே இயங்கிய நிலையில், அறுவை சிகிச்சைகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன. நோயாளிகள் பலரும் நோயுடனே வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

ஏப்ரல் மாதத் துவக்கத்தில் உலகம் முழுவதும் கரோனா தனது கோரத் தாண்டவத்தைத் தொடங்கியிருந்தது. அப்போது சுமார் 171 நாடுகளுக்கு கரோனா பரவி, உலகளவில் 10 லட்சம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு, நியூ யார்க்கின் ஒரு நாள் கரோனா பாதிப்பு 12 ஆயிரம் என்ற அளவில் இருந்தது.

ஏப்ரல் மாதம் 26-ம் தேதி உலகளவில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தொட்டது. 28 லட்சம் பேரை அந்த வைரஸ் தொட்டுப் பார்த்திருந்தது. உலகம் முழுக்க முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டது.

கரோனா தாக்கம் அதிகரித்திருந்த நாடுகளில்  மருத்துவமனைகள் கரோனா நோயாளிகளால் நிரம்பி வழிந்தன. கரோனாவால் உயிரிழப்போரை நல்லடக்கம் செய்வது, பல நாடுகளின் சுகாதார அமைப்புக்கு சவாலாக மாறியது. போதுமான மருத்துவ வசதிகள் இல்லாத, பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் கணக்கெடுக்கப்படாமலே கரோனா நோயாளிகள் செத்து மடிந்தனர். சாலைகளில் உடல்கள் வீசப்பட்டன.

ஏப்ரல் மாத இறுதியில் இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1.82 லட்சமாக இருந்தது. கரோனா நோய்த்தொற்றால் சுமார் 5000 பேர் பலியாகினர்.

கரோனா வைரஸ் என்பது உலகம் இதுவரைக் கண்டறியாதது என்பதால், அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது சுகாதார அமைப்புகளுக்குத் தெரியாமல் போனது. அதைவிடக் கொடுமை கரோனா நோயாளிகளையும், பலியான உடல்களையும் கையாள்வதில் உருவானது.

துவக்கத்தில், கரோனா பேரிடரை விடவும் கொடூரமாக ஒரு நடைமுறை பின்பற்றப்பட்டது. கரோனா தொற்று ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டால், அந்த நபரின் வீடு இருக்கும் சாலையே முற்றிலும் சட்டங்கள் அடித்து மூடப்பட்டது.

இதன் மூலம் அந்த வழியாகச் சென்றால் கூட கரோனா பரவி விடும் என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டது. ஆனால், தொற்றுப் பரவல் குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு அந்த நடைமுறை கைவிடப்பட்டது. ஆனால், அதன்பிறகும் கூட கரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டாலும், அவர்களது வீட்டின் கதவுகள் மரக்கட்டைகளால் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு மூடப்பட்டது. வீட்டிலிருப்போர் எக்காரணத்தைக் கொண்டும் வெளியே செல்ல முடியாத துயர நிலை உருவானது.

இதுபோன்ற பல கெடுபிடிகளால் கரோனா நோயாளிகளை ஒட்டுமொத்தமாக இந்த சமுதாயம் ஒதுக்கும் நிலையும் உருவானது. கரோனா பெருந்தொற்றைக் காட்டிலும், அது ஏற்படுத்திய தாக்கம்தான் மனிதர்களை உண்மையிலேயே மிகக் கொடூரமாகத் தாக்கியது.

ஏப்ரல் மாதம், உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோரை வேலை வாய்ப்பை இழந்தவர்களாக மாற்றியது. மூடப்பட்ட நிறுவனங்களுடன், செயல்பாட்டில் இருந்த பல நிறுவனங்கள் ஆள் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டன. ஊதியக் குறைப்பு, நிலுவை ஊதியம் என பல இன்னல்களை ஏற்படுத்திய மாதமாக ஏப்ரல் அமைந்துவிட்டது.

மே மாதம் 13-ம் தேதி உலக சுகாதார நிறுவனம் அந்த அபாயகரமான அறிவிப்பை வெளியிட்டது. அதாவது, உலகில் தற்போது பரவியிருக்கும் கரோனா வைரஸானது முற்றிலும் ஒழிந்து போகாது, மற்ற ஏனைய தொற்றுகளைப் போலவே உலகில் அது நீடித்திருக்கும் என்பதுவாக இருந்தது.

தொழிற்சாலைகளும் நிறுவனங்களும் மூடப்பட்டன. சாலைகள் வெறிச்சோடின. சிறு வணிகங்கள் இருக்குமிடம் தெரியாமல் போயின. உலக பொருளாதார நிலை மிக மோசமான பின்னடைவை சந்தித்தது. பூக்களும் காய்களும் செடியிலேயே மடிந்துபோயின. வாகனங்கள் அதிகவேகத்துடன் ஒலியெழுப்பியபடி சென்று கொண்டிருந்த பரபரப்பான சாலைகள் வெற்றிடங்களாக மாறின.

உலகத்தையே தனக்கானதாக மாற்றி வைத்திருந்த மனிதன், கரோனாவுக்கு பயந்து ஒரு மூலையில் ஒளிந்து கொள்ள, மற்ற உயிரினங்கள் உலகை நிம்மதியாக வலம் வந்து சுதந்திரக் காற்றை சுவாசித்தன. கரோனா மனிதனுக்குத்தான் எதிரி என்றும், பூமிக்கும் உயிரினங்களுக்கும் உற்ற  தோழன் என்று விளக்கும் மீம்ஸ்கள் செல்லிடப்பேசிகளில் பரவின. அதைப் படித்த மனிதன் ஆம் உண்மைதான் அல்லவா என்று உணரத் தொடங்கினான். தனது தவறை எண்ணி வருந்தவும் செய்தான். ஏனென்றால் அப்போது அவனுக்கு அதற்கு அதிக நேரம் இருந்தது.

உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்திகளாக விளங்கும் ஜப்பானும், ஜெர்மனியும் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக பொதுமுடக்கம் என்ற வளையத்துக்குள் நுழைந்தன. மே 22ல், கரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் பிரேஸில் ரஷ்யாவை முந்திய போது, பெருவிலும் சிலியிலும்கூட கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்தது.

மே மாத இறுதியில் உலகில் அதிகபட்சமாக அமெரிக்காவில் மட்டும் கரோனாவுக்கு ஒரு லட்சம் பேர் பலியாகினர். உலகம் முழுக்க 3,55,000 பேர் தங்களது இன்னுயிரை கரோனாவுக்கு பலி கொடுத்திருந்தனர்.

இந்தியாவில் மார்ச் மாத இறுதியில் தொடங்கிய பொதுமுடக்கம் ஒரு சில தளர்வுகளுடன் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. மிகக் கடுமையான பொதுமுடக்கத்தால் இந்திய மக்கள் கடும் சிரமங்களை சந்தித்தனர். மே மாத இறுதியில் ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. ஆனால் மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்தியாவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போது, மீண்டும் கரோனா அதிகரிக்குமோ என்ற அச்சத்தையே அதிகரிக்கச் செய்தது.

மே மாதம் 25-ம் தேதி இந்தியாவில் கடும் கட்டுப்பாடுகளுடன் உள்ளூர் விமான சேவை தொடங்கியது.    

இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலம் கரோனா தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதற்கடுத்த இடத்தில் தில்லி இருந்தது. ஆனால் ஜூன் மாத இறுதியில் கரோனா பாதிப்பில் தில்லியை தமிழகம் பின்னுக்குத் தள்ளியது. அந்த நாளில் இந்தியாவில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 5.66 லட்சமாக இருந்தது.

ஜூன் மாதத்தில் ஆப்ரிக்காவில் கரோனா வேகம்பிடித்தது. முதல் ஒரு லட்சம் நோயாளிகளை அடைய 98 நாள்கள் ஆன நிலையில், வெறும் 18 நாள்களில் அதுவே இரண்டு லட்சமானது.

ஜூன் இரண்டாவது வாரத்தில் லத்தீன் அமெரிக்கா, ஆப்ரிக்கா, தெற்காசியா, அமெரிக்க நாடுகளில் கரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருந்தது.  உலகளவில் கரோனா வைரஸ் தொற்றுப் பாதித்தோர் எண்ணிக்கை 84 லட்சமாகவும். பலி 4.51 லட்சமாகவும் இருந்தது. கரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவை அடுத்து 4 ஆவது இடத்தில் இந்தியா இருந்தது. உலகில் 77 நாடுகளில் கரோனா அதிகரிக்க, 43 நாடுகளில் மட்டும் பாதிப்பு குறைந்து கொண்டிருந்தது. ஜூன் மத்தியில் தமிழகத்தில் ஒரு நாள் பாதிப்பு 2 ஆயிரமாகவும் ஒட்டுமொத்தமாக பாதிப்பு 52 ஆயிரமாகவும் இருந்தது.

ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் ஹஜ் பயணத்துக்கு கடும் கட்டுப்பாடுகளை சௌதி அரேபியா விதித்தது. அந்நாட்டில் இருப்போர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். வெளிநாட்டினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

ஜூலை 1 முதல் ஐரோப்பிய யூனியன் தனது எல்லைகளை திறந்துவிட்டது. ஆனால் அமெரிக்க, பிரேசில், ரஷ்யாவுக்கு மட்டும் தடை விதித்தது.  ஒரு பக்கம் தளர்வுகள் அறிவித்துக் கொண்டிருந்த போது, ஈரானில் பொதுமுடக்கம் அமலுக்கு வந்தது.

முதல் வாரத்தில் அமெரிக்காவின் பலி எண்ணிக்கை 1.30 லட்சத்தை எட்டியது. 24 மணி நேரத்தில் சுமார் 50 ஆயிரம் பேர் கரோனா பாதிப்புக்குள்ளாகினர். இந்த நிலையில்தான், உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகிக் கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிக்கை அனுப்பியிருந்தார்.

ஜூலை 7-ம் தேதி பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சொனோரோவுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படுகிறது.

ஜூலை 10 - அமெரிக்காவில் ஒரே நாளில் 68 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.  ஹாங்காங்கில் மூன்றாவது கரோனா அலை வீசக் கூடும் என்ற அச்சம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன.

முதல் முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பொதுவிடத்தில் முகக்கவசம் அணிந்து தோன்றினார். அமெரிக்க ராணுவ மருத்துவமனையில் நோயாளிகளை நேரில் பார்க்கச் சென்ற போது டிரம்ப் முகக்கவசம் அணிந்திருந்தார்.

இரண்டாவது வாரத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி, ஆய்வுக் கூடத்தில் பரிசோதனைக்கு உள்படுத்தப்படுகிறது.

ஜூலை 17-ம் தேதி இந்தியாவில் கரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்தது. 25 ஆயிரம் பேர் பலியாகினர். இந்தியா முதல்கட்டமாக சர்வதேச விமானச் சேவையைத் தொடங்கியது. நாட்டின் பல பகுதிகளில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமலில் இருந்தது. உலகளவில் கரோனா பாதிப்புப் பட்டியலில் அமெரிக்கா, பிரேஸிலுக்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது இடத்திலிருந்தது.

ஜூலை மாதம் தமிழகத்திலும் கரோனா பரவல் கடுமையாக இருந்தது. ஒரு நாள் பாதிப்பு சுமார் 7 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.

அப்போது இந்தியாவில் கரோனா பாதிப்பைக் கணித்தவர்கள், உலகிலேயே இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாதான் மிக மோசமான பாதிப்பை சந்தித்திருக்கும் என்று கூறியிருந்தனர்.

அவர்கள் சொன்னதை மெய்ப்பிக்கும் வகையில் ஆகஸ்ட் மாதத்திலிருந்து இந்தியாவில் செப்டம்பர் மாதம் வரை கரோனா பாதிப்பு கடுமையாக இருந்தது. செப்டம்பர் மாதத் துவக்கத்தில் ஒரு நாள் பாதிப்பு 90 ஆயிரத்தை தாண்டி ஒரு லட்சத்தை நெருங்கியது. அதிகபட்சமாக இந்தியாவில் செப்டம்பர் 12ம் தேதி காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 97,570 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இதுதான் இந்தியாவில் பதிவான ஒருநாள் பாதிப்புகளிலேயே மிக அதிகமாகும்.

செப்டம்பர் 22ம் தேதி அமெரிக்காவில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்தது. அதேவேளையில் இந்தியாவில் கரோனா பரவல் மெல்லக் குறையத் தொடங்கியிருந்தது.

உலகம் முழுக்க கரோனா தடுப்பூசிகளின் சோதனைகள் வேகம்பிடித்தன. எந்த நாடு முதலில் தடுப்பூசிக்கு அனுமதி கொடுக்கிறது என்ற போட்டியும் உண்டானது.  முதல் தடுப்பூசிக்கு அனுமதி அளித்த நாடாக ரஷியா முந்திக் கொண்டது. காமலேயா ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசிக்கு ரஷிய சுகாதாரத் துறை ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளித்தது.

அக்டோபர் மாதத்தில் உலக சுகாதார அமைப்பு ஒரு தகவலை வெளியிடுகிறது. அதில் இந்த ஆண்டு இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கரோனா தடுப்பூசி அறிமுகமாகிவிடும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தது.

அக்டோபர் மாத இறுதியில், பிரேஸிலில் பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்ட் பல்கலைக்கழகம் உருவாக்கிய கரோனா தடுப்பூசி சோதனைத் திட்டத்தில் பங்கேற்ற தன்னாா்வலா் ஒருவா் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தடுப்பூசி தயாரிக்கும் முன்பே, பல நாடுகளும், தங்கள் நாட்டு மக்களுக்கு எவ்வாறு தடுப்பூசி வழங்கப்படும் என்பதை அறிவிக்க ஆரம்பித்துவிட்டனர். பல தலைவர்கள் அனைத்து மக்களுக்கும் இலவச தடுப்பூசி என்பதை வாக்குறுதியாகவும் கொடுத்து, மக்களின் மனங்களை கவர்ந்தனர்.

ரஷியாவில் உருவாக்கப்பட்ட கரோனா தடுப்பூசியின் 3-ஆம் கட்ட சோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.‘ஸ்புட்னிக்-5’ தடுப்பூசிகளை மனிதா்களின் உடலில் செலுத்தி ஆய்வு செய்யும் 3-ஆம் கட்ட சோதனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அந்த மருந்து போதிய அளவு கைவசம் இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.

மீண்டும் சோதனை தொடங்கி, டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் ரஷியத் தலைநகா் மாஸ்கோவில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கியது. முதல் கட்டமாக மருத்துவா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்ட நோய்த்தொற்று அபாயம் அதிகம் உள்ளவா்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

அமெரிக்காவில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் டிசம்பர் 14ல் தொடங்கியது. ஃபைஸா்-பயான்டெக் நிறுவனங்கள் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு அவசரக் காலங்களில் செலுத்தலாம் என்று அந்த நாட்டு மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு அனுமதி அளித்துள்ளதைத் தொடா்ந்து அந்தப் பணிகள் தொடங்கின. அமெரிக்க அதிபர் தேர்வாளர் ஜோ பைடனுக்கு கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

கரோனா தடுப்பூசிகள் மெல்ல உலக மக்களிடையே ஒரு நம்பிக்கையை ஏற்படுத்திவந்த நிலையில், கரோனா தீநுண்மியின் புதிய ரகமொன்று அண்மையில் பிரிட்டனில் கண்டறியப்பட்டிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. அந்தப் புதிய ரகத் தீநுண்மி, முன்பை விட அதிக வேகத்தில் பரவும் வகையில் தன்னைத் தகவமைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தீவிரத் தன்மை கொண்ட புதிய ரக கரோனா தீநுண்மி கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து, பிரிட்டன் தலைநகா் லண்டன் உள்ளிட்ட நகரங்களில் நோய் பரவல் தடுப்புக் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன.

இதனால், பிரிட்டனுடனான விமானப் போக்குவரத்தை பெரும்பாலான நாடுகள் தடை செய்தன. இந்தியாவிலும் டிசம்பர் 31 வரை பிரிட்டனுடனான விமானப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் இறுதி வாரத்தில் உலகளவில் கரோனா பாதிப்பு 7 கோடியே 91 லட்சத்தை எட்டியிருந்தது. இதுவரை கரோனாவுக்கு 17 லட்சம் பேர் பலியாகினர். 

ஃபைஸா் நிறுவனத்துடன் இணைந்து தாங்கள் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசி, பிரிட்டனில் தற்போது பரவி வரும் புதிய வகை கரோனாவையும் தடுக்கும் ஆற்றல் கொண்டிருப்பதாக ஜொ்மனியைச் சோ்ந்த பயோஎன்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

33 வினாடிகளுக்கு ஒருவா்

அமெரிக்காவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், மறுபக்கம் கரோனாவின் தாக்கம்  அதிகரித்துக்கொண்டே வருகிறது. அமெரிக்காவில் டிசம்பர் மூன்றாவது வாரத்தில் 33 வினாடிகளுக்கு ஒருவா் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா் என்கிறது புள்ளிவிவரம். அதாவது, அந்த வாரம் மட்டும் அமெரிக்காவில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா். எனவே, சராசரியாக 33 வினாடிகளுக்கு ஒரு கரோனா நோயாளி பலியாகியுள்ளாா் என்கிறது மிகக் கசப்பான புள்ளிவிவரம்.

இந்த ஆண்டே முடியப் போகிறது. ஆனால் கரோனாவுக்கு எதிரான மக்களின் போராட்டம் என்று முடியும் என்பது தெரியவில்லை. தளர்வுகளுடன் நாம் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முயன்றாலும், பொது முடக்கத்தால் ஏற்பட்ட தாக்கம் அதிலிருந்து விடுபடவிடாமல் முட்டுக்கட்டைகளை ஏற்படுத்திக் கொண்டே போகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com