கரோனா தடுப்பூசி, பேரிடரை வெல்லும் பேராயுதமானது எப்படி?

யாருக்கும் எப்போதும் நிரந்தரமில்லை என்பதை நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் சொல்லிக்கொண்டிருக்கும் கரோனா பேரிடருக்கு எதிரான உலகப் போரில், ஒரே பேராயுதமாகக் கருதப்படுவது கரோனா தடுப்பூசி.
கரோனா தடுப்பூசி
கரோனா தடுப்பூசி


வாழ்க்கை மீதான நிலைப்பாட்டையே மாற்றி, எதுவும், யாருக்கும் எப்போதும் நிரந்தரமில்லை என்பதை நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் சொல்லிக்கொண்டிருக்கும் கரோனா பேரிடருக்கு எதிரான உலகப் போரில், ஒரே பேராயுதமாகக் கருதப்படுவது கரோனா தடுப்பூசி.

முகக்கவசம், சமூக இடைவெளி, கிருமிநாசினி போன்ற சிறிய ஆயுதங்களோடு, கரோனாவுக்கு எதிரான போரை வெல்ல முயன்று கொண்டிருந்த வேளையில் கிடைத்ததுதான் கரோனா தடுப்பூசி. உலகம் முழுவதும் பல்வேறு கரோனா தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட்டு, ஒன்று, இரண்டு, பூஸ்டர் என பல தவணைகளில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் மூன்றாவது அலை எழுந்துவிடும் என்ற கணிப்புகள் எல்லாம் தள்ளிப்போடப்பட்டிருக்கிறது என்றால் அது கரோனா தடுப்பூசியால் மட்டுமே நிகழ்ந்திருக்கிறது என்றே சொல்லலாம்.

நாட்டில், ஜனவரி மாதம் 16ஆம் தேதி கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், அப்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டது. ஆரம்பத்தில், தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. அந்த நிலை மெல்ல மாறியது. தடுப்பூசி முகாம்களில் கூட்டம் அலைமோதியது. தடுப்பூசி போடும் முகாம்கள் அதிகரிக்கப்பட்டு, வாரந்தோறும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன. இப்படி நாடு கடும் பேரிடருக்கு இடையே தடுப்பூசியில் பல சாதனைகளையும் படைத்தது.

நாட்டில் ஜனவரி 16ஆம் தேதி தொடங்கிய தடுப்பூசி திட்டம், சரியாக 278 நாள்களுக்குப் பின் அதாவது, அக்டோபர் 21ஆம் தேதி 100 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தி, புதிய சாதனைபடைக்கப்பட்டது. டிசம்பர் இறுதியில் இது 140 கோடியைத்தாண்டியுள்ளது.

நாட்டில் அதிக கரோனா தடுப்பூசிகள் செலுத்தி முதலிடத்தில் உத்தரப்பிரதேசமும் (18 கோடி), இரண்டாமிடத்தில் மகாராஷ்டிரமும் (12 கோடி), மூன்றாமிடத்தில் உள்ள மேற்கு வங்கத்தில் 10 கோடி தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன.  மத்தியப் பிரதேசம், பிகார் மாநிலங்கள் தலா 9 கோடி தடுப்பூசிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. தமிழகம் இந்தப் பட்டியலில் 8 கோடி தடுப்பூசிகளை செலுத்தி 8வது இடத்தில் உள்ளது. 

இந்த சாதனைகள் எதுவும் அவ்வளவு எளிதில் படைக்கப்பட்ட சாதனையல்ல. அது கடந்து வந்த பாதை மிகவும் கடினமானது. மக்கள் தொகை அதிகம் கொண்ட, போக்குவரத்து வசதி இல்லாத எண்ணற்ற கிராமங்களைக் கொண்ட நாட்டில் அது  சாத்தியமாகியிருக்கிறது என்றால் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், சுகாதாரத் துறையினரின் தீவிர நடவடிக்கையும் மத்திய, மாநில அரசுகளின் விடாமுயற்சியும், எல்லாவற்றுக்கும் மேலாக கரோனா தொற்று ஏற்படுத்திய உயிர் பயமும் காரணங்களாக அமைந்தன என்றே சொல்லலாம்.

2019ஆம் ஆண்டு கரோனா தொற்று பற்றிய செய்திகள் வெளியான போது, 
அது சீனாவில் பரவும் தொற்று என்றார்கள்.
இந்தியாவுக்குள் வந்த போது, தமிழகத்துக்குள் வராது என்றார்கள். தமிழகத்துக்குள்ளும் பரவிய போது சென்னைக்கு வராது, சென்னைக்கு வந்த பிறகு, நம்ம ஊருக்கு வராது, நம்ம ஊருக்கு வந்த போது நம்ம தெருவுக்கு வராது, நம்ம தெருவுக்கு வந்த போதும் கூட நாம் மனம்தளரவில்லை. நம்ம வீட்டுக்கு வராது.. நமக்கு கரோனா வராது என்று தான் பலரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் எல்லா நினைப்புகளையும் கரோனா பொய்யாக்கிச் சென்றது.

கரோனா முதல் பேரிடர் காலத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் தத்தளித்தபோது, கரோனாவை வெல்ல தடுப்பூசி எனும் பேராயுதம் தான் ஒரே தீர்வு என்று கரோனா தடுப்பூசி ஆராய்ச்சிகள் ஊக்குவிக்கப்பட்டு, ஒரு சில நிறுவனங்கள் அதில் வெற்றியும் பெற்றன. நாட்டில் தற்போது கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் தடுப்பூசிகள்  நாட்டு மக்களுக்கு இலவசமாக, குறிப்பிட்ட கால இடைவெளியில் இரண்டு தவணைகளாக செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் தேதி தொடங்கியது. சரியாக 278 நாள்களுக்குப் பிறகு நாட்டில் 100 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டது. இதனை நாடே கொண்டாடியது. தற்போது இது 140 கோடியை எட்டியுள்ளது.

278 நாள்களில் இந்தியாவில் 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கிறது என்றால் சராசரியாக நாள் ஒன்றுக்கு 36 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஜனவரி மாதம் தடுப்பூசி செலுத்தத் தொடங்கிய போது இந்த அளவுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படவில்லை. இந்த எண்ணிக்கையில் பெரிய அளவில் மாற்றம் இருந்தது.

கரோனா பாதிப்பில் உலகளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்திலும், கரோனா பலி எண்ணிக்கையில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்து 3வது இடத்திலும் உள்ளது.

2021ஆம் ஆண்டுக்குள் இந்திய மக்களில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதி வாய்ந்தவர்கள் 100 சதவீதம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அந்த இலக்கை அடைய இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.

அதாவது நாள் ஒன்றுக்கு 1.20 கோடி (1,20,00,000) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டால்தான் இந்த இலக்கை 2021க்குள் அடைந்திருக்க முடியும்.

டிசம்பர் கடைசி வார நிலவரப்படி நாட்டில் 138 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கிறது என்று ஒரு பக்கம் பெருமைப்பட்டுக் கொண்டாலும், இதுவரை ஒரு தவணை தடுப்பூசி கூட செலுத்திக் கொள்ளாத 45 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கையும் இன்னும் கணிசமாகவே உள்ளது.

கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அச்சம் காரணமாக தாமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் பலரும் முன்வரவில்லை. பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு, அவர்கள் தாமாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த போது மருந்து தட்டுப்பாடு போன்றவை பெரும் பின்னடைவாக இருந்தது.

அதற்குள் இரண்டாவது கரோனா பேரிடர் நாட்டை ஒரு உலுக்கு உலுக்கியது. ஒரு பக்கம் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை, கடுமையான பலி எண்ணிக்கை என நாடு தத்தளித்துக் கொண்டிருந்த போது, நாட்டின் சுகாதாரத் துறை மற்றொரு பக்கம் கரோனா தடுப்பூசி செலுத்துவதிலும் அக்கறை செலுத்தியது. அதனை பல வழிகளிலும் செயல்படுத்த மாநில அரசுகள் தீவிரம் காட்டின. சில சுகாதார அமைப்புகள் பரிசுகளைக் கூட அறிவித்தன.

கரோனா தடுப்பூசி செலுத்தத் தொடங்கிய போது, அது பற்றிய விழிப்புணர்வோடு சேர்ந்து தடுப்பூசி செலுத்திக் கொள்வது பற்றி பல்வேறு புரளிகளும் பரவின. தடுப்பூசி செலுத்திக் கொண்டால் அசைவம் சாப்பிடக் கூடாது, மது அருந்தக் கூடாது, இதய நோய் இருப்பவர்கள் தடுப்பூசி போடக் கூடாது என.. இவை அனைத்தையும் புரளி என்று புறந்தள்ளிக் கடக்க ஒரு சில மாதங்கள் ஆகின.

கரோனா தடுப்பூசி போட்டுச் சாவதை விட, போடாமல் கரோனா வந்து சாவது அதிகம் என்பதை மத்திய, மாநில அரசுகள் மக்களிடையே எடுத்துச் சொல்ல கணிசமான காலம் எடுத்துக் கொண்டது. 

நாடு முழுவதும் சுமார் 61 ஆயிரம் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

ஆரம்பத்தில் வெறிச்சோடிய தடுப்பூசி முகாம்கள் என்ற நிலை மெல்ல மாறியது. மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டது. கரோனா இரண்டாம் அலை ஏற்படுத்திய உயிர்பயம் காரணமாக, அதிகாலையிலேயே தடுப்பூசி முகாம்களில் மக்கள் கூட்டம் என்ற நிலை உருவானது. பிறகு மணிக் கணக்கில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். கரோனா இரண்டாவது பேரிடரில் ஏற்பட்ட பெரும் பாதிப்பு, மக்களை கரோனா தடுப்பூசி முகாம்களை நோக்கி அழைத்து வந்தது. அந்த நேரத்தில் மீண்டும் ஒரு சிக்கல் உருவானது. அதுதான் போதுமான மருந்து இல்லாமல் சுகாதாரத் துறை தடுமாறிய நிலை. மத்திய அரசிடம் கேட்டு போதுமான தடுப்பூசிகளை மாநில அரசுகள் பெற்று, அதற்கேற்ப முகாம்களை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மறுபக்கம், மருந்து உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிட்டு, போதுமான தடுப்பூசி மருந்துகள் கையிருப்பு உறுதி செய்யப்பட்டது.

பிறகு, ஆன்லைனில் பதிவு செய்து கொண்டு, முகாம்களுக்குச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் வாய்ப்பும், உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் மக்கள் வசிப்பிடங்களுக்கு அருகே முகாம்கள் அமைக்கப்பட்டு, தடுப்பூசி போடும் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டது.

தடுப்பூசி போடுவது அதிகரிக்க அதிகரிக்க, நாள்தோறும் கரோனா உறுதியாகும் விகிதம் குறையத் தொடங்கியது. மக்களிடையே இது பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. தடுப்பூசி போட்டுக் கொள்வதிலும் பாலின வேறுபாடு பெரிய அளவில் காணப்படுவதாகவும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகம் என்றும் புள்ளிவிவரங்கள் வெளிவந்தன.

கிராமங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை சுகாதாரத் துறையினர் கடும் சிரமங்களுக்கு இடையே மேற்கொண்டனர். 
இதுதான் இன்றைய கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதன் நிலவரம்
https://www.mygov.in/covid-19

நாட்டில் இதுவரை 140 கோடி தடுப்பூசியை செலுத்தி சாதனை படைத்துக் கொண்டிருப்பதற்கு, சுகாதாரத் துறைக்கு ஒரு சல்யூட்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com