தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

அடர் நடவு முறை "மா' சாகுபடியில் அதிக மகசூல்!

உலக மாம்பழ உற்பத்தியில் இந்தியா 65 சதவீத பங்களிப்பு கொண்டிருந்தாலும், உற்பத்தித் திறனில் ஹெக்டேருக்கு 5.5 மெட்ரிக் டன் குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், அதிக மகசூல் பெறவும் அடர்நடவு முறையில் மா சாகுபடி செய்வதே சாலச் சிறந்தது.

News image
Updated On :11 செப்டம்பர் 2013, 6:50 pm

உலக மாம்பழ உற்பத்தியில் இந்தியா 65 சதவீத பங்களிப்பு கொண்டிருந்தாலும், உற்பத்தித் திறனில் ஹெக்டேருக்கு 5.5 மெட்ரிக் டன் குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், அதிக மகசூல் பெறவும் அடர்நடவு முறையில் மா சாகுபடி செய்வதே சாலச் சிறந்தது.

அடர்நடவு முறை: குறைந்த பரப்பில் நிறைவான, தரமான மாம்பழ உற்பத்தி செய்வதே அடர்நடவு முறையின் சிறப்பம்சமாகும். சொட்டுநீர்ப் பாசனம், காலங்களில் கவாத்து செய்தல், பயிர் வளர்ச்சி ஊக்கிகள் தெளித்தல், முறையான பூச்சி, நோய் மேலாண்மை உள்ளிட்ட உயர்தொழில்நுட்பங்களுடன் கூடிய அடர்நடவு முறையைப் பின்பற்ற வேண்டும்.

ரகங்கள்: பங்கனப்பள்ளி, பெங்களூரா, நீலம், ருமானி, மல்கோவா, அல்போன்சா, செந்தூரா, காலப்பாடு, இமாம்பசந்த்.

மண் மற்றும் தட்பவெப்பம்: வடிகால் வசதியுடன் கூடிய கார அமிலத்தன்மை 6.5 முதல் 8 வரை உள்ள இருமண்பாடான செம்மண் நிலம் மிகவும் ஏற்றது. ஜூலை முதல் டிசம்பர் வரை நடவு செய்யலாம்.

நடவு: அடர் நடவாக வரிசைக்கு வரிசை 5 மீ., செடிக்குச் செடி 5 மீ. என்ற இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். 3 அடிக்கு 3 அடி அளவில் எடுக்கப்பட்ட குழிகளில் 10 கிலோ தொழுஉரம், 1 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 1.3 சதவீத லிண்டேன் குருணை 100 கிராம் ஆகியவற்றை மேல் மண்ணுடன் கலந்து இடவேண்டும். ஒட்டு மாங்கன்றுகளை குழியின் நடுவில் ஒட்டுப் பகுதியானது தரைமட்டத்தி லிருந்து அரை அடி உயரத்தில் இருக்கும் வகையில் நடவு செய்ய வேண்டும். ஆதரவுக்குக் குச்சியைத் தளர்வாக நட்டு கட்டி விட வேண்டும்.

நீர்ப்பாசனம்: நட்டவுடனும், நட்ட மூன்றாம் நாளும் உயிர்த் தண்ணீர்விட வேண்டும். பின்னர், 10 நாள் இடைவெளியில் தேவைக்கேற்ப தண்ணீர் பாய்ச்சலாம். உரப் பாசனத்துடன் கூடிய சொட்டுநீர்ப் பாசனம் அமைப்பது தண்ணீர் சிக்கனத்துக்கும், நிறை மகசூலுக்கும் உதவும். சொட்டுநீர்ப் பாசனத்துக்கு 75 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை அரசால் மானியம் வழங்கப்படுகிறது.

பின்செய் நேர்த்தி: ஒட்டுக்கு கீழே முளைக்கும் இலைகளைக் கிள்ளி விட வேண்டும். நீர்ப் போத்துகளையும், கீழ் மட்டக் கிளைகளையும் அவ்வப்போது நீக்கி தரைமட்டத்திலிருந்து மூன்று அடி உயரம் வரை கிளைகள் எதுவும் பிரியாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

ஊடுபயிர்ச் சாகுபடி: காய்ப்பு தொடங்குவதற்கு முன்பு 3 ஆண்டுகளுக்கு காய்கறிகள், பயறு வகைகள், நிலக் கடலை ஆகியவற்றை ஊடுபயிராக சாகுபடி செய்து பயன்பெறலாம்.

ஒருங்கிணைந்த உர நிர்வாகம்: முதலாமாண்டு ஒரு மரத்துக்கு 10 கிலோ தொழுஉரம், 450 கிராம் யூரியா, 1250 கிராம் சூப்பர் பாஸ்பேட், 500 கிராம் மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை இட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மரம் ஒன்றுக்கு முந்தைய ஆண்டு உர அளவுடன் 10 கிலோ தொழு உரம், 10 கிலோ தொழுஉரம், 450 கிராம் யூரியா, 1250 கிராம் சூப்பர் பாஸ்பேட், 500 கிராம் மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை கூடுதலாகச் சேர்த்து இட வேண்டும்.

6ஆம் ஆண்டு முதல் ஒரு மரத்துக்கு 50 கிலோ தொழு உரம், இரண்டே கால் கிலோ யூரியா, ஆறே கால் கிலோ சூப்பர் பாஸ்பேட், இரண்டரை கிலோ மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை இட வேண்டும். இந்த உரங்களை ஆண்டுக்கு இரு முறையாகப் பிரித்து இடலாம். உரங்களை மரத்திலிருந்து ஒன்றரை அடி தள்ளி இலைப் பரப்புக்குள் அரை வட்டமாக ஒரு அடி ஆழக் குழி எடுத்து வைத்து மூடலாம்.

கவாத்து செய்தல்: தாழ்வானக் கிளைகளை நீக்கி, காய்ந்த நோய்வாய்ப்பட்ட, பலவீனமான மற்றும் குறுக்கும், நெடுக்குமாகவுள்ள கிளைகளை அகற்றிக் காற்றோட்டமும், சூரிய ஒளியும் கிடைக்கும் வண்ணம் ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் கவாத்து செய்ய வேண்டும்.

அரசு மானியம்: தேசிய தோட்டக்கலை இயக்கம் மூலம் அடர் நடவு முறைக்கு மானியம் வழங்கப்படுகிறது. முழு மானியத்தில் ஹெக்டேருக்கு 400 ஒட்டு மரக்கன்றுகளும், உரங்கள், பயிர்ப்பாதுகாப்பு மருந்துகள், இடு பொருள்கள் மற்றும் பராமரிப்பு மானியம் வழங்கப்படும். முறையாகப் பராமரிக்கும் விவசாயிகளுக்கு 2ஆம் ஆண்டில் பழுது கன்றுகள், உரங்கள், பயிர்ப் பாதுகாப்பு மருந்துகள் மற்றும் தொடர் பராமரிப்புக்கும் வழிவகை செய்யப்படுகிறது.

மேலும், விவரங்களுக்கு அந்தந்தப் பகுதியில் உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகங்களை நேரில் தொடர்பு கொண்டு, அடர்நடவு முறையில் மா சாகுபடி செய்து அதிக மகசூல் பெறலாம் என திருநெல்வேலி மாவட்ட தோட்டக்கலைத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.