பெங்களூர், பிப்.1: கர்நாடகத்தில் தமிழ் படிப்பது அறவே குறைந்துவிட்ட நிலையில் 3-வது மொழிப்பாடமாகவாவது தமிழை படிக்கத் தமிழ்க் குழந்தைகள் முன்வர வேண்டும் என்பது கர்நாடக தமிழ் ஆர்வலர்கள் ஆர்வமாக உள்ளது.
தமிழகத்தை தவிர, ஆந்திரம், கேரளம், கர்நாடக மாநிலங்களில் மும்மொழி கொள்கை நடைமுறையில் இருந்து வருகிறது. கர்நாடகத்தில் முதலாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரையிலான ஆரம்பப்பள்ளிகளில் இருமொழி கொள்கை வழக்கத்தில் இருந்து வருகிறது.
ஆரம்பப்பள்ளியில் முதல் மொழியாக கன்னடம் படித்தால், இரண்டாம் மொழியாக ஆங்கிலம் படிக்கலாம். உயர் ஆரம்பப்பள்ளிகளில், அதாவது ஐந்தாம் வகுப்பு முதல் மும்மொழிகொள்கை அமல்படுத்தப்படுகிறது. கர்நாடக எஸ்எஸ்எல்சி தேர்வில் முதல் மொழியாக கன்னடம், தெலுங்கு, இந்தி, மராத்தி, தமிழ், உருது, ஆங்கிலம், சமஸ்கிருதமும், இரண்டாம் மொழியாக கன்னடம், ஆங்கிலமும் மூன்றாம்மொழியாக இந்தி, கன்னடம், ஆங்கிலம், அரேபிக், பெர்ஷியன், உருது, சமஸ்கிருத மொழிப்பாடங்கள் இருந்து வருகின்றன.
முதல் மொழியாக கன்னடம் படிக்க நேர்ந்தால், இரண்டாம் மொழியாக ஆங்கிலமும், மூன்றாம் மொழியாக கன்னடம் தவிர்த்தமொழிகளையும் கற்கலாம். ஆனால், மூன்றாம் மொழியாக தமிழ் படிக்க இயலாத நிலை இருந்து வருகிறது.
ஒருவேளை, முதல்மொழியாக தமிழ் படிக்க நேர்ந்தால், இரண்டாம் மொழியாக ஆங்கிலம், மூன்றாம் மொழியாக கன்னடம் படிக்கலாம். கர்நாடகத்தில் 1980-ம் ஆண்டுகளில் கட்டாய கன்னடக்கொள்கை அமல்படுத்தப்பட்ட பிறகு, முதல் மொழியாக கன்னடம் தவிர்த்த வேறு எந்தமொழி படித்தாலும், மூன்றாம் மொழியாக கன்னடம் படிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கன்னடம் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுவதால், தங்கள் குழந்தைகளை கன்னடம் படிக்க வைப்பதில் தமிழ் பெற்றோர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் தங்களை அறியாமலே தமிழ்க்குழந்தைகள் தமிழை படிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது தமிழுணர்வாளர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக பெரியார் திராவிடர் கழக செயலாளர் இல. பழனி கூறுகையில், கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள் கன்னடம் மற்றும் ஆங்கிலம் படிப்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள். இதில் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.
ஆனால், மூன்றாம்மொழியாக தமிழ் படிக்க கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தமிழர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஆங்கிலம், கன்னடத்துடன் தமிழை படிக்க வைக்க தமிழ் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
முதல் மொழியாக தமிழை எடுத்தால், மூன்றாம் மொழியாக கன்னடம் படிக்கலாமே. முதல் மொழியாக கன்னடம் படித்துவிட்டு, பிறகு மூன்றாம் மொழியாக தமிழை படிப்பது என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். மேலும் மூன்றாம் மொழியாக தமிழ் இல்லாத நிலையில், அது எப்படி சாத்தியம் என்றும் விவரமறிந்த சில பெற்றோர்கள் வினா தொடுக்கிறார்கள்.
இதுபற்றி கர்நாடக தமிழாசிரியர்கள் சங்கத் தலைவர் பொன்.க. சுப்பிரமணியன், தினமணி நிருபரிடம் கூறுகையில், முதல் மொழியாக தமிழ் படிப்பதில் தவறில்லை. ஆனால், பல பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுவது இல்லை. மேலும் முதல் மொழியாக கன்னடம் அல்லது ஆங்கிலம் படிக்கவே பலரும் விரும்புகிறார்கள். முதல்மொழியாக ஆங்கிலம் படித்தால், இரண்டாம் மொழியாக கன்னடம் படிக்க நேரிடும். அப்போது தமிழை படிக்கும் வாய்ப்பு தமிழ்க் குழந்தைகளுக்கு கிடைக்காது.
இதனை தவிர்ப்பதற்கு, கன்னடம், அல்லது ஆங்கிலத்தை மொழிப்பாடமாகவும், பாடமொழியாகவும் கற்றாலும் தமிழை மூன்றாம்மொழியாக படிப்பதில் எந்த சிக்கலும் இருக்காது. மூன்றாம்மொழியாக தமிழை கற்பிக்க கர்நாடக அரசு சட்டப்பூர்வ அனுமதியை ஏற்கெனவே அளித்துள்ளது.
ஆனால், பள்ளிகளில் மாணவர்கள் தமிழை மூன்றாம்மொழியாக படிக்க யாரும் இல்லாததால், எஸ்எஸ்எல்சி தேர்வில் தமிழ் மூன்றாம்மொழியாக இல்லை. தமிழைப் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தினால், இது சாத்தியமாகும். இதற்கு தமிழ் பெற்றோர்கள் மனது வைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.