மாநகராட்சிப் பள்ளிகளில் குறையும் தமிழ் மாணவர் எண்ணிக்கை

பெங்களூர், பிப்.21: பெங்களூரில் மாநகராட்சிப் பள்ளிகளில் தமிழ் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவது தமிழ் ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் அதிக அளவில் தமி
Updated on
2 min read

பெங்களூர், பிப்.21: பெங்களூரில் மாநகராட்சிப் பள்ளிகளில் தமிழ் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவது தமிழ் ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் அதிக அளவில் தமிழர்கள் வசிப்பதால் பெங்களூர் மாநகராட்சி தனது 14 உயர்நிலைப் பள்ளிகளில் தமிழ்மொழியைக் கற்பித்து வருகிறது. அதேபோல் மாநகராட்சியின் 7 பி.யூ. கல்லூரிகளிலும் தமிழ் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.

இதற்காக தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ் மக்களும் தங்கள் குழந்தைகள் தமிழ் கற்பதில் ஆர்வமாக இருந்து வந்தனர். ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக நிலைமை வெகுவாக மாறிவிட்டது. மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் பி.யூ. கல்லூரிகளில் தமிழ் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு வேகமாகக் குறைந்து வருகிறது.

மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகளில் 1990-ம் ஆண்டு தொடக்கத்தில் 1,500 மாணவர்கள் தமிழ் படித்து வந்தனர். ஆனால், இப்போது வெறும் 600 மாணவர்கள் மட்டுமே தமிழ் படிக்கிறார்கள். அதேபோல மாநகராட்சி பி.யூ.கல்லூரிகளில் 300 ஆக இருந்த தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை, இன்று வெறும் 190 ஆகக் குறைந்துவிட்டது.

1992-ல் நடந்த காவிரிக் கலவரத்திற்குப் பிறகு தமிழ் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை  சரியத் தொடங்கியதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கட்டாயக் கன்னடம், கன்னடம் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு, கன்னடம் தெரிந்தால் மட்டுமே கர்நாடகத்தில் வாழ முடியும் என்று கர்நாடக அரசு முன்வைத்த அடுக்கடுக்கான கன்னட வளர்ச்சித் திட்டங்கள் இச்சரிவுக்கு வித்திட்டுள்ளன.

பள்ளி இறுதித் தேர்வில் சம்ஸ்கிருதம், இந்தி தாள்களுக்கு தாராளமாக மதிப்பெண் தருவதால், சில தமிழ் பெற்றோர்கள் மதிப்பெண்களுக்காக தங்கள் குழந்தைகள் தமிழ் படிப்பதை தவிர்த்திருக்கிறார்கள். இதனாலும் தமிழ் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. படிப்பதற்கு மாணவர்கள் இல்லாததால், உயர்நிலைப்பள்ளி மற்றும் பி.யூ.கல்லூரியில் தலா 7 தமிழாசியர்கள் பணியாற்றிய நிலைமாறி, இன்று உயர்நிலைப்பள்ளியில் முத்துசுப்ரமணியம் மற்றும் பி.யூ.கல்லூரியில் பத்மா என்ற இரு ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றுகிறார்கள். மீதமுள்ள தமிழாசிரியர் பணியிடங்கள் கடந்த 10 ஆண்டுகளாக காலியாக உள்ளன.

இது குறித்து கர்நாடகத் தமிழாசிரியர் சங்கத் தலைவர் பொன்.கா. சுப்ரமணியன் தினமணி செய்தியாளரிடம் கூறுகையில், தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், தமிழாசிரியர் பணியிடங்களை நிரப்ப மாநகராட்சி முன்வரவில்லை. பெற்றோர்களே தங்கள் குழந்தைகள் தமிழ் படிக்க விரும்புவதில்லை. சில பள்ளிகளில் தமிழ் படிக்க பெற்றோர்கள் விரும்பினாலும், ஆசிரியர்கள் ஏதாவது காரணம் கூறித் தடுத்து விடுகிறார்கள்.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிகளிலேயே இந்த நிலை இருப்பது எங்களுக்கே அதிர்ச்சியாக உள்ளது. பெற்றோர்கள் மனது வைத்தால் மட்டுமே மீண்டும் தமிழ் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த முடியும். இதைச் செய்யத் தவறினால், பெங்களூர் மாநகராட்சிப் பள்ளிகளில் தமிழ் பயிலும் மாணவர்களே இல்லை என்ற நிலை உருவாகிவிடும் என்றார்.

இந்நிலையில் தமிழ் மாணவர்கள் இல்லையென்ற காரணத்தைச் சுட்டிக்காட்டி தமிழாசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பதையும், தமிழ்ப் பள்ளிகளை மூடுவதையும் நிறுத்த வேண்டும் என்று அரசை நிர்பந்தித்து வருவதாக பெங்களூர் தமிழ்ச் சங்கத் தலைவர் மீனாட்சிசுந்தரம் கூறினார்.

கன்னடம் படித்தால்தான் வேலை கிடைக்கும் என்ற பெற்றோர்களின் மனப்போக்கு மாற வேண்டும். தமிழ்க் குழந்தைகளை தமிழ் படிக்க வைக்க தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறோம். அதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com