உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மாநில அரசை பொறுப்பற்ற முறையில் விமர்சிப்பது பிரதமருக்கு அழகல்ல:   காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜி.பரமேஸ்வர்

மாநில அரசை பொறுப்பற்ற முறையில் விமர்சிப்பது பிரதமருக்கு அழகல்ல என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 2:32 am

DIN

மாநில அரசை பொறுப்பற்ற முறையில் விமர்சிப்பது பிரதமருக்கு அழகல்ல என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.
பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:  பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை பாஜக சார்பில் நடைபெற்ற மாற்றத்திற்கான பயண நிறைவு மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திரமோடி கன்னடத்தில் தொடங்கி,  ஹிந்தியில் 1 மணி நேரம் பேசினார். அவர் பேச்சில் மாநில அரசைக் குறைகூறி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.  காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் நடைபெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.  ஊழல் செய்து சிறை சென்ற எடியூரப்பாவை அருகில் வைத்துக் கொண்டு அவர் பேசுவது முறையல்ல. 
 கர்நாடகத்தில் 10 சதவீத கமிஷன் இல்லாமல் எந்த பணியும் நடைபெறுவதில்லை என்று கூறியுள்ளார்.  எந்த துறையில், எந்த வளர்ச்சிப் பணியில் ஊழல் நடைபெற்றுள்ளது என்பதை அவர் உறுதிப்படக் கூற வேண்டும்.  பிரதமர் பதவியை வகிக்கும் ஒருவர், ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆதாரம் இல்லாமல் விமர்சனம் செய்வது, அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.  கர்நாடக அரசின் பதவிக் காலம் எண்ணப்படுவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.  மத்திய அரசில் பாஜகவின் பதவி காலம் எண்ணப்படுவதை அவர் மறந்துள்ளார்.  
பெங்களூரு புறநகர் ரயில் திட்டத்துக்கு ரூ.17 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.  ஆனால்,  இதில் மத்திய அரசின் பங்கு 20 சதம், மாநில அரசின் பங்கு 20 சதவீதம்,  மற்றவர்களின் பங்கு 60 சதவீதமாகும். ஆனால்,  இதில் உள்ள உண்மைகளை மறைத்து, மொத்த நிதியையும் மத்திய அரசே வழங்குவதுபோல் ஒரு மாயை உருவாக்க பிரதமர் முயல்வது வேடிக்கையாக உள்ளது.  
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் கடனை முழுவதுமாக ரத்து செய்த சித்தராமையாவின் அரசை,  விவசாயிகளுக்கு எதிராக செயல்படுவதாக பிரதமர் கூறியுள்ளது கண்டிக்கத்தக்கது. 
நீர்ப்பாசனத் திட்டத்திற்கு 5 ஆண்டுகளில் ரூ 62 ஆயிரம் கோடி நிதி வழங்கிய மாநில அரசை அவர் விமர்சனம் செய்வதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.   மகதாயி விவகாரம் தொடர்பாக பிரதமர் வாய் திறக்கவில்லை. குற்றச்செயல்கள் நடைபெறும் மாநிலம் என்று கர்நாடத்தை பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.  பாஜக ஆட்சி செய்யும் உத்தரப் பிரதேச மாநிலம் குற்றச் செயல்கள் நடைபெறுவதில் 9.5 சதவீதம் பெற்று முதல் இடத்திலும், மத்தியப் பிரதேச மாநிலம் 8.9 சதம் பெற்று 2-வது இடத்திலும் உள்ளன.  குற்றச்செயல்கள் நடைபெறும் 10 மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகம் எந்த இடத்திலும் இல்லை என்பதை பிரதமர் மறந்துள்ளார்.  
மொத்தத்தில் பெங்களூரு வந்த பிரதமர் அரசியலை கருத்தில் கொண்டு ஏதேதோ பேசி நாட்டு மக்களுக்கு தவறான தகவலைத் தந்துள்ளார்.  குற்றங்கள் நிறைந்த மாநிலம் என்று கர்நாடக மக்களையும் அவமானப்படுத்தியுள்ளார் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.