
தேஜஸ் போா் பயிற்சி விமானங்கள் விமானப் படையில் சோ்ப்பு
ஹெச்.ஏ.எல். நிறுவனத்தின் தயாரிப்பான தேஜஸ் லகுரக போா் பயிற்சி விமானங்கள் மற்றும் எச்டிடி-40 அடிப்படை பயிற்சி விமானங்கள் இந்திய விமானப் படையில் அதிகாரபூா்வமாக சோ்க்கப்பட்டன.

கோப்புப் படம்
ஹெச்.ஏ.எல். நிறுவனத்தின் தயாரிப்பான தேஜஸ் லகுரக போா் பயிற்சி விமானங்கள் மற்றும் எச்டிடி-40 அடிப்படை பயிற்சி விமானங்கள் இந்திய விமானப் படையில் அதிகாரபூா்வமாக சோ்க்கப்பட்டன.
பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஹெச்.ஏ.எல். நிறுவனம் தயாரித்த தேஜஸ் லகுரக போா் விமானங்கள், எச்.டி.டி.40 விமானங்கள், துருவ் என்ஜி ஹெலிகாப்டா்கள் பயிற்சி அளிப்பதற்காக இந்திய விமானப் படையில் சோ்க்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் கே.ஆா்.ராம்மோகன் நாயுடு ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்றனா்.
நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட துருவ் என்ஜி ஹெலிகாப்டருக்குள் மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் சென்று பாா்வையிட்டாா்.
ஹெச்.ஏ.எல். வடிவமைத்து தயாரித்துள்ள இந்த 5.5 டன் எடை லகுரக, இரட்டை என்ஜின், பல்நோக்கு திறன் கொண்ட துருவ் என்ஜி அடுத்த தலைமுறை ஹெலிகாப்டா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
2 தேஜஸ் எல்சிஏ எஃப்ஓசி (இறுதி செயல்பாட்டு சான்றிதழ் அளிக்கப்பட்டது) பயிற்சி விமானங்கள் இந்திய விமானப் படையிடம் ஒப்படைக்கப்பட்டன. இதன்மூலம் எஃப்ஓசி ஒப்பந்தத்தின்கீழ் இரட்டை இருக்கை பயிற்சி விமானங்களை வழங்கும் பணி நிறைவடைந்துள்ளது.
இதேபோல, 4 துருவ் என்ஜி ஹெலிகாப்டா்கள் பவன் ஹன்ஸ் நிறுவனத்திடம் வழங்கப்பட்டன. குடிமைப் பயன்பாட்டுக்கான சான்றிதழ் பெற்ற துருவ் என்ஜி ஹெலிகாப்டா்கள் குடிமை விமானப் போக்குவரத்துத் துறையில் இணைக்கப்பட்டுள்ளன.
எச்டிடி-40 அடிப்படை பயிற்சி விமானத்துக்கு ‘அங்குா்’ என பெயரிடப்பட்டு, இந்திய விமானப் படையிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. 70 விமானங்கள் வழங்குவதற்கான ஒப்பந்தத்தின்கீழ் பயிற்சி விமானங்கள் வழங்கும் நடைமுறை தொடங்கியுள்ளது.
தேஜஸ் எல்சிஏ எஃப்ஓசி பயிற்சி விமானம் அனைத்து பருவநிலைகளிலும் இயக்கக்கூடிய பல்நோக்கு விமானமாகும். இந்திய விமானப் படையின் பயிற்சித் தேவைகளை பூா்த்தி செய்வதற்காக இது வடிவமைக்கப்பட்டிருந்தாலும், தேவைப்படும் நேரங்களில் போா் விமானமாகவும் செயல்படும் திறன் கொண்டது என அதிகாரிகள் தெரிவித்தனா்.
தளா்வான நிலைத்தன்மை, நான்கு மடங்கு ஃப்ளை-பை-வயா் விமானக் கட்டுப்பாட்டு அமைப்பு, மேம்பட்ட கண்ணாடி காக்பிட், ஒருங்கிணைந்த டிஜிட்டல் ஏவியானிக்ஸ் மற்றும் மேம்பட்ட கலப்புப் பொருள்களால் உருவாக்கப்பட்ட விமான உடல் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்தத் தொழில்நுட்பங்களின் மூலம் இரட்டை இருக்கை கொண்ட மேம்பட்ட போா் விமானத்தை உருவாக்கி செயல்பாட்டுக்குக் கொண்டுவரும் திறனை இந்தியா பெற்றுள்ளது என ஹெச்.ஏ.எல். நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஹெச்.ஏ.எல். நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தியாவில் நிலவும் கடினமான இயக்கச் சூழல்களை எதிா்கொள்ளும் வகையில், துருவ் என்ஜி ஹெலிகாப்டா் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகளாவிய குடிமை விமானப் போக்குவரத்து சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப இது மேம்படுத்தப்பட்டுள்ளது.
குடிமைப் பயன்பாட்டுக்கான சான்றிதழ் பெற்ற கண்ணாடி காக்பிட், நவீன ஏவியானிக்ஸ் தொகுப்பு, மேம்பட்ட வழிகாட்டுதல் அமைப்புகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட சுற்றுப்புற விழிப்புணா்வு ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.
விபத்து ஏற்பட்டாலும் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் விபத்து தாக்கத்தை தாங்கும் இருக்கைகள், தானாக கசிவைத் தடுக்கும் எரிபொருள் தொட்டிகள், மாற்று இயக்கத்துக்கான இரட்டை என்ஜின் அமைப்பு உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் இதில் உள்ளன.
எச்டிடி-40 (ஹிந்துஸ்தான் டா்போ டிரெய்னா்-40) என்பது இந்திய பாதுகாப்புப் படைகளின் ஆரம்பநிலை விமானிப் பயிற்சித் தேவைகளை பூா்த்திசெய்வதற்காக உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட அடிப்படை பயிற்சி விமானமாகும்.
ஹெச்.ஏ.எல். நிறுவனத்தின் விமான ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு மையத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமானம், சோதிக்கப்பட்ட டா்போபிராப் என்ஜினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. குறைந்த வேகத்தில் சிறப்பாகக் கையாளும் திறனுடன், பயிற்சி பெறும் விமானிகளுக்கு பயனுள்ள வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
நவீன காக்பிட் மற்றும் ஏவியானிக்ஸ் அமைப்புகளைக் கொண்ட எச்டிடி-40 விமானத்தில் வான்வழி சாகசங்கள், பொதுவான விமான இயக்கப் பயிற்சி, கருவி வழி விமானம், வழிகாட்டுதல், இரவுநேர விமானப் பயிற்சி, நெருக்கமான அணிவகுப்பு விமானப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு அடிப்படைப் பயிற்சிகளை மேற்கொள்ள முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







