பெங்களூரில் கடந்த 5 நாள்களாக நடைபெற்ற பன்னாட்டு இந்தியவிமானத் தொழில் கண்காட்சி, துறை சார்ந்தவர்களை மட்டுமின்றி, வெகுமக்களையும் பரவசத்தில் ஆழ்த்தியது என்று ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் விஞ்ஞானி வி.டில்லிபாபு தெரிவித்தார்.
1996-ஆம் ஆண்டு முதல் பெங்களூரில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்றுவரும் பன்னாட்டு இந்தியவிமானத்தொழில் கண்காட்சி, இந்திய அடையாளமாக மாறியுள்ளது. கோடிக்கணக்கான வாய்ப்புகளுக்கான ஓடுபாதை என்ற அடைமொழியுடன் பிப்.20-ஆம் தேதி பெங்களூரில் தொடங்கிய 12-ஆவது விமானத் தொழில் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்துள்ளது.
இந்த கண்காட்சியை ஹிந்துஸ்தான் வானூர்தியியல் நிறுவனம் (எச்ஏஎல்), மத்திய பாதுகாப்புத்துறை சார்பில் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) ஒருங்கிணைந்து நடத்தியிருந்தன. இந்த கண்காட்சியில் மிக பிரமாண்டமான அரங்கு அமைத்து ராணுவத்தைப் பலப்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட, தயாரிக்கப்பட்ட ஏராளமான ராணுவத் தளவாடங்களை பொதுமக்கள் பார்வைக்கு டிஆர்டிஓ காட்சிப்படுத்தியிருந்தது. இது பொதுமக்களின் வரவேற்பைப் பெற்றிருந்தது.
இதனிடையே, இந்த கண்காட்சியில் கிடைத்த அனுபவங்கள் குறித்து டிஆர்டிஓ விஞ்ஞானி வி.டில்லிபாபு, தினமணி செய்தியாளரிடம் கூறியது: கண்காட்சியின் தொடக்க, இறுதிநாள்களைத் தவிர்த்து, 3 நாள்கள் கருப்பொருளோடு கொண்டாடப்பட்டன. வளர்ந்து வரும் புது தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் 2-ஆம் நாள் ஆரம்பநிலை தொழில்முனைவோர்(ஸ்டார்ட்-அப்) தினமாகவும், 3-ஆம் நாள் தொழில்நுட்ப தினமாகவும், 4-ஆம் நாள் மகளிர் தினமாகவும் கொண்டாடப்பட்டன.
மகளிர் தினத்தில் பெண் விமானிகளின் விமான சாகசங்கள் நிகழ்ந்தன. குறிப்பாக 5 பெண் விமானப்படை அதிகாரிகள், விமானக்கட்டளை அதிகாரி ஆஷா ஜோதிர்மயி தலைமையில் 5 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த எம்.ஐ-17 ஹெலிகாப்டரிலிருந்து பாராசூட்டில் குதித்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. விமானத் துறையில் பெரும் பங்காற்றிய பெண் விஞ்ஞானிகள், பொறியாளர்கள் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார்கள்.
வளர்ந்து வரும் ஆளில்லா விமானத் தொழில்நுட்பங்கள் கண்காட்சியில் முக்கியத்துவம் பெற்றிருந்தன. ஆளில்லா விமானங்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிக்கப்பட்டன. அரசு, பொதுத் துறை பன்னாட்டு நிறுவனங்களைத் தாண்டி, விமானத் துறையில் ஆர்வமுள்ள தனிநபர்கள், மாணவர்கள், கல்வி நிறுவனக் குழுக்கள் என எல்லோருடைய பங்களிப்பிற்கும் வாய்ப்புகள் அளிக்கப்பட்டது, வரவேற்கத்தக்கது.
பொதுமக்களோடு அதிக ஈடுபாடும் ஒத்திசைவும் இந்த விமானக் கண்காட்சியில் திட்டமிடப்பட்டிருந்தது கண்கூடாக தெரிந்தது. எல்லா விவரங்களை அனைவரும் தெரிந்து கொள்ள நிகழ்வுக்கான கைபேசி செயலி முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. பொதுமக்களுக்கான புகைப்படப் போட்டியும் இன்ஸ்டாகிராம் செயலி மூலம் நடத்தப்பட்டது.
ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், ஹிந்துஸ்தான் வானூர்தியியல் நிறுவனம் ஆகிய இந்திய அரசுத் துறை நிறுவனங்களின் மிக பிரம்மாண்டமான அரங்குகள் பார்வையாளர்களை குறிப்பாக இளந் தலைமுறையினரைக் கவர்ந்தன. இலகு பயன்பாட்டு ஹெலிகாப்டர், ருஸ்தம் ஆளில்லா விமானம், ஆகாஷ் ஏவுகணைகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. போயிங், சாப், தாஸு ஏவியேஷன் உள்ளிட்ட வெளிநாட்டு விமான நிறுவனங்களின் அரங்குகளிலும் பார்வையாளர்கள் கூட்டம் நிறைந்திருந்தது. சாப் நிறுவனத்தின் கிரிப்பன் விமானத்தின் விமானி இருக்கையில் பொதுமக்கள் உட்கார்ந்து பார்த்து மகிழ்ந்தனர். பரபரப்பாகப் பேசப்பட்ட ரஃபேல் விமானம் தன்பட(செல்ஃபி)நாயகனாக பலர கவர்ந்திழுத்தது.
கண்காட்சியில் மிக முக்கிய வரலாற்று நிகழ்வாக, உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவான தேஜஸ் இலகுரக போர் விமானத்திற்கு இறுதி செயல்பாட்டு தடைநீக்க சான்றிதழ் ( ஊண்ய்ஹப் ஞல்ங்ழ்ஹற்ண்ர்ய்ஹப் இப்ங்ஹழ்ஹய்ஸ்ரீங்) வழங்கப்பட்டது. விமானப்படை தளபதி பீரேந்திர சிங் தனொவாவிடம், டிஆர்டிஓ தலைவர் சதீஷ் ரெட்டி இச்சான்றிதழை வழங்கினார். தேஜஸ் விமானத்தில் பறந்த இந்திய ராணுவத்தளபதி விபின் ராவத், இந்த அற்புதமான விமானம் இந்தியாவின் வான்வலிமையை நிச்சயம் அதிகரிக்கும் என்று கருத்து தெரிவித்திருப்பது இந்திய விஞ்ஞானிகளுக்கு உற்சாகமளித்திருக்கிறது. இதனால் மேலும் பல புது இந்திய விமான முயற்சிகள் உத்வேகமடையும் என விமானத்துறை வல்லுநர்கள் நம்புகின்றனர்.
மிராஜ் விமான விபத்து, சூரியகிரண் விமான விபத்து, கார் நிறுத்தத்தில் தீ விபத்து எனப் பல தடைகளைத் தாண்டி நடந்தேறிய 12-ஆவது விமானக் கண்காட்சி, இந்திய விமானத்துறையில் பலத்த நம்பிக்கைகளையும், பன்னாட்டு எதிர்பார்புகளையும் விதைத்திருக்கிறது. கண்காட்சியில் பங்கேற்ற துறைசார்ந்த வல்லுநர்களிடமும், பொது மக்களிடமும் ஒரு நேர்மறை பரவசத்தை பார்க்க முடிந்தது என்று அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









