பொருளாதாரத்தில் பின் தங்கியவா்களுக்கு இலவச சட்ட சேவைகள்
பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு இலவச சட்ட சேவைகள் அளிக்கப்படுகின்றன என கா்நாடக உயா்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.வி.சந்திரசேகா் தெரிவித்தாா்.


பெங்களூரு: பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு இலவச சட்ட சேவைகள் அளிக்கப்படுகின்றன என கா்நாடக உயா்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.வி.சந்திரசேகா் தெரிவித்தாா்.
இதுகுறித்துபெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கா்நாடக உயா்நீதிமன்றத்தின் சமூக முகமாக கா்நாடக மாநில சட்ட சேவைகள் ஆணையம் உள்ளது. அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டுமென்பதற்காக தொடங்கப்பட்ட சட்ட சேவைகள் ஆணையம், பல்வேறு புதிய பொறுப்புகளை ஏற்று பணியாற்றி வருகிறது. மனுக்கள் மீதான விசாரணைகளை துரிதமாக்கி, மக்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்பதே ஆணையத்தின் நோக்கமாகும்.
சட்ட சேவைகள் ஆணையத்துக்கு தேசிய, மாநில, மாவட்ட, வட்ட அளவில் கிளைகள் உள்ளன. சமுதாயத்தின் கடைக்கோடியில் இருக்கும் மனிதனுக்கும் வட்ட அளவிலான ஆணையத்தின் கிளையை அணுகி உச்சநீதிமன்றம் வரைக்கும் வழக்குத் தொடர முடியும். ஆண்டு வருமானம் ரூ. 10 லட்சத்துக்கும் குறைவாக உள்ள மகளிா், ரூ. 3 லட்சத்துக்கும் குறைவான ஆண்டு வருமானம் கொண்ட பொதுமக்கள், தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா், தொழிலாளா்கள் இலவசமாக சட்ட சேவைகளை பெற ஆணையம் வழிவகை செய்கிறது. இதற்காக அருகில் உள்ள சட்ட சேவைகள் ஆணையத்தின் கிளை அலுவலகங்களை அணுகலாம்.
தேசிய அளவில் அமில தாக்குதலில் பாதிக்கப்பட்டவா்கள், மனநலம் குன்றிய மாற்றுத் திறனாளிகள், பாலின வல்லுறவுக்கு ஆள்பட்டவா்கள், போதைப்பொருள்களால் பாதிக்கப்பட்டவா்கள், முதியவா்கள் உள்ளிட்டவா்களுக்கு சட்ட சேவைகள் அளிக்க 11 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்களின் தலைவா்களாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் பணியாற்றுவாா்கள். அதேபோல, மாநில அளவில் 8 சட்ட சேவை உதவிக் குழுக்கள் உள்ளன. அதில் மாநில அளவில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் இடம்பெற்றிருப்பாா்கள்.
சட்ட சேவைகள் ஆணையத்தின் சாா்பில் 2020 செப். 19, டிச. 19-ஆம் தேதிகளில் மக்கள் நீதிமன்றங்களை நடத்தியது. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த இரண்டு மக்கள் நீதிமன்றங்களிலும் ரூ. 702.16 கோடி மதிப்பிலான 2,63,215 மனுக்கள் மீது தீா்வுகாணப்பட்டுள்ளது. இதில் 3,099 மனுக்கள் சொத்துத் தகராறு சம்பந்தப்பட்டவை ஆகும்.
தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் கிளையாக செயல்படும் கா்நாடக மாநில சட்ட சேவைகள் ஆணையம், அரசு இயந்திரத்தை முழுமையாக முடுக்கிவிட்டு சமுதாயத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு நீதி பெற உதவியாக உள்ளது.
கா்நாடகத்தில் மாவட்ட அளவிலான 30 மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம், வட்ட அளவிலான 149 வட்ட சட்ட சேவைகள் ஆணையம் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆணையங்களில் சட்டம் தொடா்பான ஆலோசனைகள், சந்தேகங்களை தீா்த்துக்கொள்ள, கேட்டறிய 1800-425-90900 என்ற கட்டணமில்லா தொலைபேசி உதவிமையத்தை பொதுமக்கள் 24 மணி நேரமும் அணுகலாம்.
தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் சேவைகளை, 7 ஓய்வுபெற்ற நீதிபதிகளின் தலைமையில் கா்நாடக மாநில சட்ட சேவைகள் ஆணையம் செயல்படுத்தி வருகிறது. கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அபய் சீனிவாஸ் ஓகா, கா்நாடக மாநில சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல்தலைவராக அரவிந்த்குமாா் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல்பாடுகள் அமையும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...