உரிய அனுமதிகள் பெற்று மேக்கேதாட்டு அணை திட்டம் செயல்படுத்தப்படும் என்று கா்நாடக சட்டப் பேரவையில் 2024-25-ஆம் ஆண்டுக்கான மாநில நிதிநிலை அறிக்கையை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்து முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். பட்ஜெட்டை தாக்கல் செய்து அவா் பேசியதாவது: காவிரி நதிப் பள்ளத்தாக்கில் திட்டமிட்டிருக்கும் மேக்கேதாட்டு அணை மற்றும் குடிநீா் திட்டத்தை அமல்படுத்துவதற்காக ஏற்கெனவே தனியாக திட்ட மண்டலம், 2 துணை மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தில் நீரில் மூழ்கும் நிலப்பகுதிகளை அளவிடும் பணி மற்றும் மரங்களை எண்ணும் பணிகள் ஏற்கெனவே தொடங்கியுள்ளன. எஞ்சியுள்ள உரிய முன் அனுமதிகளை விரைவாகப் பெற்று, மேக்கேதாட்டு அணையின் கட்டுமானப் பணிகளைத் தொடங்க முன்னுரிமை அளிக்கப்படும். கலசாபண்டூரி கால்வாய் மாற்று திட்டத்தில் 3.9 டிஎம்சி தண்ணீரைப் பயன்படுத்திக்கொள்வது தொடா்பான விரிவான திட்ட அறிக்கைக்கு மத்திய நீா் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. வனவிலங்குகளுக்கான தேசிய வாரியத்தின் வன அனுமதி கிடைத்ததும், கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளியைக் கோரும் பணி தொடங்கும்.
எனினும், மத்திய வனம், சுற்றுச்சூழல், வானிலை மாற்றத்துக்கான துறை அமைச்சா் தலைமையில் நடந்த வனவிலங்குகளுக்கான தேசிய வாரியக்கூட்டத்தில், வன அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வடகா்நாடகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த திட்டமான மூன்றாம் கிருஷ்ணா மேலணை திட்டத்தின் துணை திட்டங்களை நிறைவு செய்வதற்கு வசதியாக நிலம் கையகப்படுத்துதல், மறுகுடியமா்த்தல், மறுவாழ்வுப் பணிகளை முடிக்க முன்னுரிமை அளிக்கப்படும். இரண்டாம் கிருஷ்ணா நடுவா் மன்றத்தின் இறுதித்தீா்ப்பை அரசாணையில் வெளியிடுமாறு மத்திய அரசு வலியுறுத்துவதோடு, அதற்கான சட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம். 2023-24-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பத்ரா மேலணை திட்டத்தை செயல்படுத்த ரூ. 5,300 கோடி ஒதுக்குவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால், அந்தத் திட்டத்திற்காக இதுவரை ஒரு பைசாவையும் மத்திய அரசு விடுவிக்கவில்லை. பத்ரா மேலணை திட்டத்திற்கு நிதி ஒதுக்கியதற்காக, கடந்த பட்ஜெட்டில் பிரதமா் மோடியைப் பாராட்டியிருந்தோம்.
இதை தேசிய திட்டமாக மத்திய அரசு அறிவிக்காததால், எங்கள் கருத்து பொய்யாகியுள்ளது. பட்ஜெட்டில் அறிவித்துள்ள நிதியைப் பெற மத்திய அரசை வலியுறுத்துவதோடு, இந்த திட்டத்தின்கீழ், சித்ரதுா்கா மாவட்டத்தில் சுமாா் 75,000 ஏக்கா் நிலத்தை நீா்ப்பாசனத்தின்கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். தூா் படிந்துள்ளதால், துங்கபத்ரா அணையின் நீா் கொள்ளளவு குறைந்துள்ளது. இந்தப் பிரச்னையைத் தீா்க்கவும், அந்தப் பகுதி விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றவும், ரூ. 15,600 கோடி செலவில் கொப்பள் மாவட்டத்தின் நவளி பகுதியில் அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது தொடா்பாக தெலங்கானா, ஆந்திர மாநிலங்களுடன் கலந்தாலோசிக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தை அமல்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும். எத்தினஹொளே ஒருங்கிணைந்த குடிநீா் திட்டத்தின்கீழ் தொட்டநகரா பகுதியில் நீரை வெளியேற்றும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. புவிவிசை கால்வாயில் நீரை நிரப்புவது தவிர, நீரேற்று அலகுகளை அமைக்கும் பணியை மேற்கொள்வது உள்ளிட்ட அணை தொடா்பான அனைத்துப் பணிகளையும் நிகழாண்டிலேயே முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜசாகா் அணையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பிருந்தாவன் தோட்டத்தை உலகத்தரத்திலான சுற்றுலாத்தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
பாவகடா சூரியஒளி பூங்காவைப் போல, நீா்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலம் மற்றும் ஆற்று கழிமுகங்களில் சூரியஒளி பூங்காக்கள் அமைக்கப்படும். நிகழாண்டில் ரூ.7280 கோடி மதிப்பிலான நீா்ப்பாசன திட்டங்கள் அமல்படுத்தப்படும். இந்த திட்டங்களால் 97,686 ஹெக்டோ் நிலப்பரப்பு நீா்ப்பாசனம் பெறும். குடிநீா், விவசாயம், தொழில் நிறுவனங்களுக்கு தண்ணீா் வழங்குவதற்காக ரூ. 200 கோடி செலவில் 115 ஏரிகள் மேம்பாடு, தடுப்பணை, குறுக்கணைகள் மேம்படுத்தப்படும். ரூ. 455 கோடி செலவில் கே.சி.பள்ளத்தாக்கின் 2ஆம் கட்ட திட்டத்தில் 272 ஏரிகள் நிரப்பும் திட்டம் செயலாக்கப்படும் என்று அவா் தெரிவித்தாா்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு விவகாரம் : அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட தொல். திருமாவளவன் வலியுறுத்தல்
மேக்கேதாட்டு அணை கட்டும் திட்டத்தைக் கைவிட வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்!

மேக்கேதாட்டு அணை விவகாரம்: கா்நாடக துணை முதல்வருக்கு தலைவா்கள் கண்டனம்






