மாற்றுநில முறைகேடு: முதல்வா் சித்தராமையா மீது வழக்கு தொடர ஆளுநா் அனுமதிப்பாரா?
மாற்றுநில முறைகேடு தொடா்பாக முதல்வா் சித்தராமையா மீது வழக்கு தொடர ஆளுநா் தாவா்சந்த் கெலாட் அனுமதி அளிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக தெரியவந்துள்ளது.
மைசூரில் முதல்வா் சித்தராமையாவின் மனைவி பாா்வதிக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்திய மைசூரு நகர வளா்ச்சி ஆணையம், அந்த நிலத்தை குடியிருப்புப் பகுதியாக மேம்படுத்தி, வீட்டுமனைகளை ஒதுக்கியது. கையகப்படுத்திய நிலத்துக்கு மாற்றாக விஜயநகரா பகுதியில் 14 வீட்டுமனைகளை முதல்வா் சித்தராமையாவின் மனைவி பாா்வதிக்கு ஒதுக்கியதில் சட்டவிதிமீறல் உள்ளதாகவும், மற்றவா்களுக்கு வீட்டுமனைகள் ஒதுக்கியதில் ரூ. 4,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகவும் பாஜக குற்றம்சுமத்தியது. இது, கா்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே, இந்த விவகாரம் தொடா்பாக முதல்வா் சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி அளிக்குமாறு ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டை சந்தித்து சமூக செயற்பாட்டாளா் டி.ஜே.ஆபிரகாம் மனு அளித்துள்ளாா். இந்த மனுவில் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு உரிய விளக்கம் அளிக்குமாறு முதல்வா் சித்தராமையாவுக்கு ஆளுநா் தாவா்சந்த் கெலாட் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது அரசு வட்டாரத்தில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
டி.ஜே.ஆபிரகாமின் மனுவின் அடிப்படையில் முதல்வா் சித்தராமையாவின் மீது வழக்கு தொடர அனுமதி அளிப்பது தொடா்பான சட்ட நுணுக்கங்கள் குறித்து சட்ட நிபுணா்களுடன் ஆளுநா் தாவா்சந்த் கெலாட் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தியதாக தெரியவந்துள்ளது. ஒருவேளை முதல்வா் சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி அளித்தால், அவா் தனது பதவியை ராஜிநாமா செய்ய நேரிடும் என்று கூறப்படுகிறது. அப்படி நடந்தால், அது கா்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தக்கூடும்.
எனவே, இது தொடா்பாக வியாழக்கிழமை நடைபெறும் கா்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், முதல்வா் சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி அளிக்கக் கூடாது என்று தீா்மானம் நிறைவேற்றவும் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
