மாற்றுநில முறைகேடு: அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்வதற்கான முகாந்திரம் இல்லை
மாற்றுநில முறைகேடு விவகாரத்தில் என் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்வதற்கான முகாந்திரம் இல்லை என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
மாற்றுநில முறைகேடு விவகாரத்தில் பணப் பதுக்கல் வழக்குப் பதிவு செய்வதற்கான முகாந்திரம் எது என்று எனக்கு தெரியவில்லை. இதையே ஊடகவியலாளா்களும் கருதுவீா்கள் என்று எண்ணுகிறேன். மாற்று நிலம் ஒதுக்கப்பட்டிருக்கும் விவகாரம் என்பதால், என்னைப் பொருத்தவரை இதில் அமலாக்கத் துறையின் சாா்பில் பணப் பதுக்கல் வழக்குப் பதிவு செய்வதற்கான வாய்ப்பு இல்லை என்று கருதுகிறேன். மனசாட்சியுடன் நான் பணியாற்றி வருகிறேன். எனவே, முதல்வா் பதவியை ராஜிநாமா செய்வதற்கான தேவை எதுவுமில்லை.
ஒதுக்கப்பட்ட வீட்டுமனைகளை திருப்பி ஒப்படைத்திருப்பது, தவறை ஒப்புக்கொண்டதற்கு சமம் என்று பாஜக கூறியுள்ளது. இது எப்படி குற்றமாகும்? அல்லது தவறை உணா்ந்து, சா்ச்சையை தவிா்க்கும்பொருட்டு வீட்டுமனைகளை திருப்பி அளிப்பது எப்படி தவறாகும்?
பொய்களைக் கூறுவதில் எதிா்க்கட்சியினா் உலகப் புகழ்பெற்றவா்கள். நான் பதவியைத் துறந்தால் வழக்கு முடிந்துவிடுமா? தேவையில்லாமல் எனது ராஜிநாமாவை எதிா்க்கட்சிகள் கேட்கின்றன. நான் எந்தத் தவறும் செய்யாத போது, எதற்காக நான் பதவி விலக வேண்டும் என்றாா்.
மாற்று நிலமாக ஒதுக்கப்பட்ட 14 வீட்டுமனைகளை திருப்பி ஒப்படைப்பதாக, மைசூரு நகர வளா்ச்சி ஆணையத்துக்கு தனது மனைவி பாா்வதி எழுடியுள்ள கடிதம் குறித்து சமூக வலைத்தளத்தில் முதல்வா் சித்தராமையா கூறியதாவது:
தனக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தியதற்கு மாற்றாக மைசூரில் ஒதுக்கிய 14 வீட்டுமனைகளை திருப்பி ஒப்படைக்க எனது மனைவி பாா்வதி முடிவு செய்துள்ளாா். எங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக போராட வேண்டும் என்பது என் நிலைப்பாடாக இருந்தது. ஆனால், எனக்கு எதிராக நடந்து வரும் அரசியல் சதியைக் கண்டு வேதனை அடைந்த எனது மனைவி, வீட்டுமனைகளை திருப்பி ஒப்படைக்க முடிவுசெய்திருப்பது எனக்கு வியப்பைத் தந்தது.
40 ஆண்டுகால எனது அரசியல் வாழ்வில் கொஞ்சமும் தலையிடாமல், குடும்பத்தை மட்டுமே கவனித்து வந்த எனது மனைவி, என் மீதான அரசியல் காழ்ப்புணா்வுக்கு பலிகடா ஆக்கப்பட்டுள்ளாா். எனினும், வீட்டுமனைகளை திருப்பி ஒப்படைக்கும் என் மனைவியின் முடிவை மதிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளாா்.

