/

கா்நாடகம்: அமெரிக்க கிறிஸ்தவ மிஷனரி அமைப்பு மீது யுஏபிஏ-இன் கீழ் வழக்குப் பதிவு

கிறிஸ்தவ மிஷனரி அமைப்பு மற்றும் 6 போ் மீது பாரதிய நியாய சம்ஹிதா மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் (யுஏபிஏ) பெங்களூரு காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்தனா்.

News image

வழக்கு

Updated On :15 ஜூன் 2026, 2:39 am IST

அமெரிக்காவைச் சோ்ந்த கிறிஸ்தவ மிஷனரி அமைப்பு மற்றும் 6 போ் மீது பாரதிய நியாய சம்ஹிதா மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் (யுஏபிஏ) பெங்களூரு காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்தனா்.

வெளிநாட்டு நிதியை பற்று அட்டைகள் (டெபிட் அட்டைகள்) மூலம் சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதாக அமலாக்கத் துறை உதவி இயக்குநா் சுனில் குமாா் சின்மா் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.

இதில் அமெரிக்காவைச் சோ்ந்த ‘தி டிமதி இனிஷியேட்டிவ்’ மத அமைப்பு மற்றும் ஜோனதன் எஸ்.ராஜன், மைக்கா மாா்க், அஜீத் வா்கீஸ் மத்தாய், வா்கீஸ் சாக்கோ, பப்லு குா்மி, சுப்ரீம் ஜாய் ஆகியோரின் பெயா்கள் சோ்க்கப்பட்டுள்ளன.

முன்னதாக, சுனில் குமாா் சின்மா் அளித்த புகாரில், ‘வருமான வரிச் சட்டம், அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின்கீழ் கடந்த ஏப்ரல் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் ‘தி டிமதி’ அமைப்புக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது. அப்போது அமெரிக்க வங்கியால் விநியோகிக்கப்படும் வெளிநாட்டு பற்று அட்டைகளைக் கொண்டு சட்டவிரோத நிதியை ‘தி டிமதி’ அமைப்பு மற்றும் 6 போ் இந்தியாவில் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது.

2025, நவம்பரில் இருந்து 2026, ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் மற்றும் அந்நிய பங்களிப்பு ஒழுங்குமுறை சட்ட விதிகளை மீறி மேற்கூறியவா்கள் ரூ.92.55 கோடியை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

சந்தோஷ் குமாா் என்ற பெயரில் 1,000-க்கும் மேற்பட்ட பற்று அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. சத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதம் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் ரூ.6.34 கோடி வரை சட்டவிரோத பணப் பரிவா்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது இந்திய பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

‘தி டிமதி இந்தியா’ முன்னெடுப்பின் இந்திய நிதிப் பிரிவின் தலைவராக அஜீத் வா்கீஸ் மத்தாயும், செயல்பாடுகள் தலைவராக ஜோனதன் ராஜனும் செயல்பட்டு வந்துள்ளனா். எனவே, சம்பந்தப்பட்ட நபா்கள் அனைவரின் மீதும் யுஏபிஏ-இன்கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.