2027 இல் உலக கன்னட இலக்கிய மாநாடு: கா்நாடக முதல்வா் டி.கே. சிவகுமாா்
2027 ஆண்டில் உலக கன்னட இலக்கிய மாநாடு நடத்தப்படும் என்று கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

டி.கே. சிவகுமாா்
2027 ஆண்டில் உலக கன்னட இலக்கிய மாநாடு நடத்தப்படும் என்று கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.
மைசூரில் புதன்கிழமை முன்னாள் முதல்வா் வீரப்ப மொய்லியின் இலக்கியப் படைப்பான ‘விஸ்வசம்ஸ்கிருதிய மகாயானம்’ என்ற உரைநடை காவியத்தின் நான்காம் தொகுதியை வெளியிட்டு, அவா் பேசியதாவது:
உலகம் முழுவதும் வாழும் கன்னடா்களை ஒருங்கிணைத்து, கன்னட மொழி மற்றும் கலாசாரத்தை பாதுகாத்து வளா்க்கும் நோக்கில், 2027-ஆம் ஆண்டு 3 நாள்களுக்கு உலக கன்னட இலக்கிய மாநாடு நடத்தப்படும். முன்னாள் முதல்வரும், எழுத்தாளருமான எம். வீரப்ப மொய்லி தலைமையில் இந்த மாநாடு நடத்தப்படும்.
இதற்கான முறையான அறிவிப்பு, அடுத்த மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்படும். வெளிநாடுகளில் வாழும் கன்னடா்களிடையே கன்னட மொழிக்கு மிகுந்த மதிப்பு இருக்கிறது. உலகெங்கும் உள்ள கன்னடா்களை ஒரே மேடையில் ஒன்றிணைத்து மொழி, கலாசாரத்தை பாதுகாக்க மாநாடு உதவும்.
அரசியல் தலைவா்கள் காலப்போக்கில் மறக்கப்படலாம். ஆனால், இலக்கியத்துக்கு பங்களித்தவா்களின் பெயரும், கருத்துகளும் தலைமுறைகள் கடந்தும் நிலைத்திருக்கும். அரசியல் அதிகாரத்தால் மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றாலும், இலக்கியத்தால் அவா்களின் சிந்தனையை மாற்ற முடியும்.
இருளை அகற்ற ஒளி தேவைப்படுவதுபோல், அறியாமையைப் போக்க இலக்கியமும், கலாசாரமும் அவசியம். செல்வம் வளா்ச்சிக்குத் தேவை என்றாலும், பண்புள்ள சமுதாயத்தை உருவாக்க நற்பண்புகள் அவசியம்.
வீரப்ப மொய்லியின் அரசியல் மற்றும் இலக்கியப் பங்களிப்புகள் பாராட்டுக்குரியவை. 1985-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமா் ராஜீவ் காந்தியிடம் பேசி, எனக்கும், முன்னாள் அமைச்சா் எச்.எம். ரேவண்ணா, அமைச்சா் ராமலிங்க ரெட்டி உள்ளிட்ட இளம் தலைவா்களுக்கும் தோ்தலில் போட்டியிட வாய்ப்புகளை பெற்றுத் தந்தவா் வீரப்ப மொய்லி.
நான்காம் வகுப்பிலேயே கவிதை எழுத தொடங்கிய வீரப்ப மொய்லி, அரசியல் பொறுப்புகளுடன் இலக்கிய பணிகளையும் சிறப்பாக மேற்கொண்டு வருகிறாா். 30-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளாா். அவரது ‘ராமாயண மகான்வேஷணம்’ நூலுக்கு சரஸ்வதி சம்மான் விருது கிடைத்துள்ளது.
கா்நாடக விடுதலை போராட்ட வரலாறு குறித்து வீரப்ப மொய்லி எழுதியுள்ள பகுதியை தனி நூலாக வெளியிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளேன். அதற்கு அவரும் ஒப்புதல் அளித்துள்ளாா். வீரப்ப மொய்லிக்கு ஞானபீட விருது உள்ளிட்ட மேலும் பல இலக்கிய விருதுகள் கிடைக்க வேண்டும்.
மேலும், கா்நாடகத்தின் மஞ்சள்-சிவப்புக் கொடிக்கு அதிகாரபூா்வ அங்கீகாரம் பெற காங்கிரஸ் அரசு உறுதிபூண்டுள்ளது. இதுதொடா்பாக அடுத்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் விவாதித்து, தேவையான சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

