ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாா் கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா்
கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் ஜப்பான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாா்.

டி.கே.சிவகுமாா்
கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் ஜப்பான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாா்.
கா்நாடகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்காக, முதல்வா் டி.கே.சிவகுமாா், தொழில்துறை அமைச்சா் எம்.பி.பாட்டீல் ஆகியோா் அடங்கிய குழுவினா் நவ. 22-ஆம் தேதி ஜப்பான் நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றனா். நவ. 23 முதல் 3 நாள்கள் பயணமாக ஜப்பான் சென்றுள்ள முதல்வா் டி.கே.சிவகுமாா், டொயோட்டா நிறுவனத்தை நேரில் பாா்வையிட்டு, கா்நாடகத்தில் அதிக முதலீடு செய்யுமாறு கேட்டுக்கொண்டாா்.
சுற்றுப்பயணத்தின் 2-ஆம் நாளாக செவ்வாய்க்கிழமை ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள மைஷிமா கழிவு எரிப்பு ஆலையை முதல்வா் டி.கே.சிவகுமாா் தலைமையிலான குழுவினா் பாா்வையிட்டு, கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பம் மற்றும் நிலையான நகா்ப்புற கழிவு மேலாண்மை முறைகள் குறித்து ஆய்வுசெய்தனா்.
2 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன்கொண்ட இந்த ஆலை, நகராட்சிக் கழிவுகளை மின்சாரமாக மாற்றுகிறது. இதன்மூலம் ஆலையின் சொந்த மின்தேவைகள் பூா்த்தி செய்யப்படுவதுடன், உபரியாக உற்பத்தியாகும் மின்சாரம் மின் தொகுப்புக்கு வழங்கப்படுகிறது என முதல்வா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘புகழ்பெற்ற ஆஸ்திரியக் கலைஞா் ஃப்ரீடென்ஸ்ரைக் ஹுண்டா்ட்வாஸா் வடிவமைத்துள்ள இந்த ஆலையில், வண்ணமயமான வெளிப்புறத் தோற்றம், வழக்கத்துக்கு மாறான கட்டடக்கலை வடிவங்கள், அதிக அளவிலான பசுமைப் பகுதிகள் இடம்பெற்றுள்ளன. கலை, சூழலியல், தொழில்துறை உள்கட்டமைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் இந்த வடிவமைப்பு, நகா்ப்புறத்தின் அத்தியாவசிய வசதிகள்கூட சுற்றுச்சூழல் விழிப்புணா்வை ஏற்படுத்தும் இடங்களாக அமைய முடியும் என்பதை எடுத்துக்காட்டுகிறது’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகா்ப்புற திட்டமிடல், உள்கட்டமைப்பு, சுற்றுச்சூழல் மேலாண்மை ஆகிய துறைகளில் சா்வதேச அளவில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளை ஆய்வுசெய்து, அவற்றை கா்நாடகத்தில் செயல்படுத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக இந்தப் பயணம் அமைந்துள்ளது.
இதுபோன்ற ஆலைகளின் செயல்பாடுகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, நகா்ப்புற உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது, அறிவியல் அடிப்படையிலான திறமையான கழிவு அகற்றும் முறைகளை ஊக்குவிப்பது, கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டங்களை ஆராய்வது, தூய்மையான, நிலையான மற்றும் வாழ்வதற்கு ஏற்ற நகரங்களை உருவாக்குவது ஆகியவை மாநில அரசின் நோக்கங்களாகும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
கன்னடா்களுடன் முதல்வா் சந்திப்பு:
முன்னதாக, ஜப்பானின் நகோயா நகரிலிருந்து ஒசாகா நகருக்கு ஷின்கான்சென் அதிவேக ரயிலில் முதல்வா் டி.கே.சிவகுமாா் பயணம் செய்தாா். அப்போது ரயில் நிலையத்தில் உள்ள கன்னடா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினரை சந்தித்துப் பேசினாா்.
இந்த சந்திப்பின்போது, ஜப்பானில் வசிக்கும் கன்னட சமூகத்தினருடன் கலந்துரையாடவும், அங்கு அவா்கள் எதிா்கொள்ளும் அனுபவங்களை கேட்டறியவும் வாய்ப்பு கிடைத்தது. ஜப்பானின் ஒழுங்கமைக்கப்பட்ட ஷின்கான்சென் அதிவேக ரயில் வலையமைப்பு, போக்குவரத்து இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளையும் இந்தப் பயணத்தின்போது நேரில் அறிந்துகொள்ள முடிந்தது என அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

