/

கழிவுநீர் கலந்த குடிநீர்: தீர்வு காணமுடியாமல் திணறும் வாரியம்

சென்னை, செப். 2: குழாய் மூலம் துர்நாற்றம் இல்லாத தூய்மையான குடிநீர் கிடைப்பது, அயனாவரம் பகுதி மக்களுக்கு எட்டா கனியாகிவிட்டது. பல முறை புகார் அளித்தும் பயனில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்ற

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 5:12 pm



சென்னை, செப். 2: குழாய் மூலம் துர்நாற்றம் இல்லாத தூய்மையான குடிநீர் கிடைப்பது, அயனாவரம் பகுதி மக்களுக்கு எட்டா கனியாகிவிட்டது. பல முறை புகார் அளித்தும் பயனில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

  பல ஆண்டுகளாக குழாய் மூலமான குடிநீர் விநியோகமே இல்லாத இப்பகுதிக்கு, சமீபத்தில்தான் விடிவு கிடைத்தது. ஆனால், குழாயைத் திறந்தபோது கழிவுநீருடன் கலந்த குடிநீர்தான் இவர்களுக்கு கிடைத்தது. இதனால், குழாய் நீரை இப்பகுதியினர் பயன்படுத்துவதே இல்லை.

ரூ. 1.3 கோடி வீணா?

வார்டு எண் 55 மற்றும் 57ல் உள்ள ஞானாம்பாள் தெரு, அலுவலர்கள் காலனி, யுனைடெட் இந்தியா காலனி, கொன்னூர் நெடுஞ்சாலை, தாகூர் நகர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் 20 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன.

  இப்பகுதி மக்கள் மற்றும் எக்ஸ்னோரா நிர்வாகிகள் ஆகியோரின் தொடர் புகார்கள் காரணமாக, ஆண்டர்ஸன் சாலை மற்றும் தாகூர் நகருக்கு இடையே ரூ. 1.3 கோடி செலவில் புதிய "ஃபீடர் மெயின்' (தண்ணீர் சீராக பாய உதவும் மெயின்) அமைக்கப்பட்டது. இந்தப் பணி 2008 ஜூலையில் முடிக்கப்பட்டது.

  இப்பணி முடிந்து ஓராண்டுக்கு மேலாகிவிட்டபோதும் அப்பகுதி மக்களின் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. வடக்கு மாட வீதி, துரைசாமி வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குழாய் மூலமும் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால், தொடர்ந்து குழாய் நீர் கலங்கலாகவும், துர்நாற்றத்துடன் மஞ்சள் நிறத்தில் வருகிறது. இந்த நீரை துணி துவைக்கவோ அல்லது பாத்திரங்கள் கழுவுவதற்கோ பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

  இப்பகுதி மக்களின் குடிநீருக்காக லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு சின்டெக்ஸ் தொட்டிகள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நீர் அதிகபட்சம் நான்கு குடங்கள் வரை மட்டுமே கிடைக்கிறது என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

வராத நீருக்கு வரி:

  இந்த நிலையில் கரிய மாணிக்கம் பெருமாள் வீதி உள்ளிட்ட சில பகுதிகளில் பல மாதங்களாக குழாய் நீர் விநியோகம் ரத்து செய்யப்பட்டுள்ளது. லாரி நீரையே எதிர்நோக்கியிருக்கும் இவர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

  வராத நீருக்கு தவறாமல் வரி செலுத்தி வருகிறோம். தொடர்ந்து புகார் தெரிவிக்கும் சிலரின் குடிநீர் இணைப்பை, அதிகாரிகள் துண்டித்து விடுவதாகவும் இப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.

  இதுகுறித்து வடசென்னை எக்ஸ்னோரா துணைத் தலைவர் ராமதாஸ் கூறுகையில், ""புகார்களின் பெயரில் இப்பகுதிகளை ஆய்வு செய்த குடிநீர் வாரிய அதிகாரிகள், பிரச்சினையை சரிசெய்துவிட்டோம் என கடந்த மே மாதம் 18-ம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். "தற்போது தரமான நீர் விநியோகம் செய்யப்படுகிறது' என்ற பொய்யான அறிவிப்புதான் அது. பலமுறை முயற்சி மேற்கொண்டபோதும், அவர்களால் பிரச்சினைக்கு முழுமையானத் தீர்வு காணமுடியவில்லை'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.